தினேஸ், ஜோன்ஸ்டனுக்கு அதே பதவிகள், சபாநாயகர் தெரிவு 20ம் திகதி

நாடாளுமன்றத்தின் சபைத் தலைவராக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திலும் இவர்களுக்கு குறித்த பதவி ஒதுக்கப்பட்டிருந்தது. ஓகஸ்ட் 20ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஒன்பதாவது நாடாளுமன்றின் கன்னி அமர்வில் முதலில் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.

இதனைத் தொடர்ந்து அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் நாடாளுமன்றில் கன்னி அமர்விற்கு பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி தலைமை தாங்கவுள்ளார், மேலும் இதன்போது அரசியலமைப்பின் பிரிவு 33 (2) ஆல் வழங்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை ஜனாதிபதியால் படிக்கப்படும். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புதிய நாடாளுமன்றம் கூட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
vk

No comments