பொதுத் தேர்தலில் வாக்கெடுப்பு நிலைய சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகின்றது

எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆந் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நிலைய கடமைகளில் ஈடுபடும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கா பயிற்சிகள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில் 4 கட்டங்களாக இடம்பெற்று வருகின்றது. 

இம்மாவட்டத்தில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 428 வாக்கெடுப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாக்கெடுப்பு நிலையங்களில் பிரதான கடமையாற்றும் சிரேஸ்ட தலைமைதாங்கும் அலுவலர்களுக்கான பயிற்சியினை  உதவித் தேர்தல் ஆணையாளர் ஆர். சசீலன் வழங்கிவருகிறார். 


மேலும் இத்தேர்தலானது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதத்தில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கொண்ணும் நிலையங்களிலும் இந்நடைமுறை மிகவும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 

வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்குள் வருகின்ற போதும், வாக்களித்து விட்டு வெளியேறும் போதும் தொற்று நீக்கித்திரவம் கொண்டு கைகளைக் களுவுவதற்கான வசதிகளை தேர்தல்கள் திணைக்களம் ஏற்படுத்தியுள்ளது. 

இதுதவிர வாக்களிக்க வரும் அனைத்து வாக்களார்களும் முகக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் எனபதுடன் வாக்களிப்பதற்கு தமது ஆளடையாளத்தினை உறுதிப்படுத்துவதற்கு முகக்கவசத்தினை அகற்றி அடையாளத்தினை உறுதிப்படுத்துவது கட்டயமாக்கப்பட்டுள்ளது. 

வாக்களர்கள் தமது அடையாளத்தினை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, மதகுருமாருக்கான அடையாள அட்டை, தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட விசேட அடையாள அட்டை போன்றவற்றில் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கமைவாக தேர்தல் தினத்தன்று வாக்காளர் காலை 7.00 மணி முதல் பிற்பகல் 5 மணிவரை வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. 

மேலும் வாக்களார்கள் வாக்களிப்பதற்காக வருகின்றபோது சுகாதார நலன்கருதி கறுப்பு அல்லது நீல நிறத்திலான பேனைகள் கொண்டுவர வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இருப்பினும் அவ்வாறு பேனைகள் கொண்டு வரத் தவறுகின்றவர்களுக்கு வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments