ஓட்டமாவடி பிரதேச சபை ஊடகவியலாளர் மீதான தடையை முற்றாக நீக்கி, அனுமதி வழங்க வேண்டும் - எம்.ஐ.லெப்பைத்தம்பி
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையில் மாதாந்தம் இடம்பெறும் கூட்டங்களின் போது செய்தி சேகரிப்பதற்கு ஏற்படுத்தியுள்ள தடையை முற்றாக நீக்கி சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செய்தி சேகரிக்க அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி வழங்க முன்வர வேண்டும். என Thehotline.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் எம்.ஐ.லெப்பைத்தம்பி தெரிவித்துள்ளார்.

Thehotline.lk இணையத்தளத்தின் பணிப்பாளர் எம்.ஐ.லெப்பைத்தம்பி இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குறிப்பிட்டவொரு ஊடகவியலாளரை மாத்திரம் தடை செய்யும் பிரதேச சபையின் ஒரு தலைப்பட்சமான தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதுடன், ஊடகங்களையும், ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்துவதையும் அவர்களுக்கெதிராக சபை தீர்மானங்களைக் கொண்டு வருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்பதுடன் ஊடக தர்மமாகக் கொள்ள முடியாது.

குறித்த ஊடகவியலாளர் மீதான தடையையும் சபைத்தீர்மானத்தையும் சபை வாபஸ் பெற்று, சகல ஊடகங்களையும், ஊடகங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஊடகவியலாளர்களையும் சபை அமர்வுகளின் போது செய்தி சேகரிக்கவும் மக்கள் பிரதிநிதிகளால் முன்மொழியப்படும் மக்கள் நலன்சார் தீர்மானங்கள், செயற்றிட்டங்களை மக்கள் மயப்படுத்தவும் சபை தனது பூரண ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.

அத்தோடு, சபைக்கெதிராகவோ தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கெதிராகவோ ஊடகங்களில் அல்லது ஊடகவியலாளர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு ஊடக தர்மத்தைப்பேணி தமது பக்க நியாயங்களை முன்வைக்க வேண்டுமேயொழிய, மாற்றமாக, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்க மறுத்து இவ்வாறான தடைகளை ஏற்படுத்துவது தம்மீது நம்பிக்கையீனத்தையும் குற்றச்சாட்டுகளில் நியாயமுள்ளதான தோற்றப்பாட்டையும் மக்கள் மத்தியில் உண்டாக்குமென்பது திண்ணமாகும்.

ஊடகவியலாளர்கள் மாத்திரமல்லாது, சபையின் உறுப்பினர்களால் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களும் மோசடிகளும் முன்வைக்கப்பட்டுள்ளமைக்கு இதுவரை சபை சரியான பதிலையோ தீர்வையோ வழங்கவில்லையென்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.

அதே நேரம், மக்கள் வரிப்பணத்தில் மக்களுக்காக இயங்கும் மக்கள் பிரதிநிதிகள் மக்கள் சார்பாக ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் வைக்கும் மறைமுக மற்றும் நேரடிக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டுமேயன்றி, இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே நேரம், சபையினால் தடை விதிக்கப்பட்டுள்ள குறித்த ஊடகவியலாளர் இப்பிரதேசத்தின் பிரச்சினைகளை, தேவைகளை கடந்த காலங்களில் ஊடகமயப்படுத்தி அவற்றுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் தன்னாலான பங்களிப்புக்களை வழங்கி வருபவர் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

ஆகவே, குறித்த ஊடகவியலாளர் மீதான ஒரு தலைப்பட்ச சபையின் தீமானத்தை உடனடியாக மீளப்பெற்று சுயாதீனமாகச் செய்தி சேகரிக்க அனுமதி வழங்க வேண்டுமென மேலான சபையைக் கேட்டுக்கொள்வதோடு, தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்படும் பட்சத்தில் எந்தவொரு ஊடகமோ ஊடகவியலாளரோ சபை அமர்வுகளில் கலந்து கொண்டு செய்தி சேகரிப்பதை முற்றாகப் புறக்கணிப்பதுடன். ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக சபை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு சட்டநடவடிக்கை மேற்கொள்ள ஊடக அமைப்புக்கள் முன்வரவேண்டும்.

தொடர்ந்தேர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதோடு, மக்கள் மத்தில் சரியான தகவல்கள் போய் சேர்வதிலும் தடை ஏற்படுமென்பதையும் கவனத்திற்க்கொள்வோமாக என தெரிவித்துள்ளார்.

No comments