கோறளைப்பற்று மேற்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது அஸீம் தெரிவு

கோறளைப்பற்று மேற்கு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம் தெரிவு - மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்கினையும் பெற்று சாதனை
மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம் 549 விருப்பு வாக்குகளைப் பெற்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானதுடன், 217 மேலதிக அதிகூடிய விருப்பு வாக்குகள் வித்தியாசத்திலும் அமோக வெற்றியினை தனதாக்கிக் கொண்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களான ஹபீப் லெப்பை முஹம்மது ஆஸீக் 332 வாக்குகளையும், சேகு அப்துல் காதர் முஹம்மது அஸாம் 177 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பதின்நான்கு பிரதேச செயலகங்களிலும் அதிகூடிய விருப்பு வாக்கினை பெற்ற இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற சாதனையையும் முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம் படைத்துள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்றத்திற்கான வாக்களிப்பு சனிக்கிழமை (22) நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகங்கள் தோறும் நடைபெற்றது.

அந்த வகையில் கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்திற்கான இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு மும்முரமாக நடைபெற்றது.

கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்கான வாக்களிப்பு பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் செயலகத்தில் இடம்பெற்றது. ஒருவரை தெரிவு செய்வதற்கு நான்கு வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன், 3274 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.

இலங்கையில் 2020 ஆம் ஆண்டு இளைஞர் பாராளுமன்றத்தில் 356 பிரதிநிதிகள் இப்பாரளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவார்கள். இதில் பிரதமர், சபாநாயகர், துறைகளுக்கான அமைச்சுப் பதவிகளும் இப்பிரதிநிதிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டோர்களுக்கு வழங்கப்படும்.

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள முஹம்மது ஹனீபா முஹம்மது அஸீம் 2013ஆம் ஆண்டிலிருந்து காவத்தமுனை அல்-முபாறக் இளைஞர் கழகத்தில் அங்கத்துவம் பெற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தில் தலைவராகவும், மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தில் உப தலைவராகவும் கடமையாற்றி, பிரதேச இளைஞர்களை சிறப்பாக வழிநடாத்தி பிரதேச வாதம் இல்லாமல் அனைத்து இளைஞர்களையும் உள்வாங்கி இளைஞர்கள் திறன் அபிவிருத்தி நிகழ்வுகள் பல்வேறுபட்டவற்றை தலைமைதாங்கி நடாத்தியுள்ளார்.

இதற்கப்பால் Green Era என்ற அமைப்பினை உருவாக்கி அதிமேதகு ஜனாதிபதியின் வெற்றுச் சுவர்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் தனது பிரதேசத்தில் சுவர் ஓவியங்களை வரைந்து பிரதேசத்தை அழகுபடுத்தியவர்.

அது மாத்திரமில்லாது School Of Batticaloa Model United Nations எனும் நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக Model United Nation எனும் நிகழ்வினூடாக தனது பிரதேச இளைஞர்கள் ஐக்கிய நாடுகள் சபை அமர்வுகள் அதன் நடைமுறைகளை பற்றி அறிவதற்கு வித்திட்டு வழிநடாத்தியவர்.

No comments