சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை அழைத்துவர உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வுஹான் (WUHAN) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்பு.
'

இதற்காக சனாதிபதி செயலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் எயர்லைன்ஸ் ஆகியவற்றினை இணைத்து விசேட நிகழ்ச்சித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 



வுஹான் மாகாணத்திற்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவதை சீன அதிகாரிகள் தற்போது தடை செய்துள்ளனர். தடை நீக்கப்பட்டதும் அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 



சிச்சுஆன் மாகாணத்தில் செங்டு நகரில் உள்ள சுமார் 150 மாணவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.



தெனின் நகரில் உள்ள மேலும் 30 மாணவர்கள் தொடர்பான தகவல்கள் எமது தூதரகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளன. அவர்களும் விரைவாக அழைத்து வரப்படவுள்ளனர். 

சீனா எங்கும் பரந்திருக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் எமது வெளிவிவகார அமைச்சினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

தூதரக அதிகாரிகளுக்கும் இலங்கையர்களுக்குமிடையே We chat தொடர்பாடல் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் அனைவரும் விமான நிலையத்தில் நோய்த்தொற்று தடுப்புக்கு உட்படுத்தபட்டுவருகின்றனர். 

எவரேனும் காய்ச்சல் நிலைமைக்குள்ளாகி இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவர். அத்தகையவர்களது இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் பொரளையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. 

தற்போதைய நிலைமை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி அனைத்து சுகாதார அதிகாரிகளுடனும் தொடர்ந்து கலந்துரையாடி வருகின்றார்.



நோய் கண்காணிப்பு வசதிகள் அனைத்தும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திடம் உள்ள போதும், மேலதிக வைத்திய உபகரணங்கள் அல்லது இரசாயனப் பொருட்களை கொண்டு வருவதற்கான தேவை ஏற்பட்டால் விமானத்தின் மூலம் கொண்டு வருவதற்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாவும்  மேன்மை தங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ 
தெரிவித்துள்ளார்.

No comments