காத்தான்குடிக்கு நூறு வீட்டுகள் வழங்கப்படும்- இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலானா தெரிவிப்பு..


(எம்.பஹ்த் ஜுனைட்)

இவ் வருடத்தின் முதலாவது காத்தான்குடி பிரதேச  ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் திங்கட்கிழமை (02) காத்தான்குடி பிரதேச செயலக மண்டபத்தில்    ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மெளலானாவின் தலைமையில் இடம்பெற்றது.


இக் கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர்,  காத்தான்குடி நகர சபையின் பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெசீம் உட்பட நகர சபை உறுப்பினர்கள் மற்றும் சகல திணைக்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

சுமார் ஒன்பது மாதங்களுக்கு பின்னர் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன்  குறிப்பாக இவ்வருடத்திற்குள் காத்தான்குடி பிரதேசத்தில் 166 அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன்  நகரசபை உறுப்பினர்களால் கல்வி,சுகாதாரம், வீதி அபிவிருத்தி தொடர்பில்  கருத்து தெரிவிக்கப்பட்டது.


இதன் போது கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சருமாகிய அலிசாஹிர் மெளலானா இடம்பெறவுள்ள வீடமைப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடிக்கு சுமார் நூறு வீடுகள் அமைத்து தருவதாகவும்  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்துடன் இணைந்து  அதற்குரிய பெயர் பட்டியலை தயாரிக்குமாறு சமுர்த்தி உயர் அதிகாரிகளை பணித்ததுடன் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் விரைவில் தீர்வு முன்வைக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.
No comments