எனதன்பின் இஸ்லாமிய உறவுகளுக்கு புனித ஈதுல் அழ்ஹா ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள் - இம்ரான் எம் பி


எனதன்பின் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த ஈகைப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

தாய் நாட்டிலும் வெளிநாடுகளிலும் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் உறவுகளுக்கும் ஈதுல் அழ்ஹா முபாரக் , குல்லு ஆமின் வ அன்தும் பிகைர் , தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்.

எமது நாட்டில் மட்டுமன்றி உலகம் முழுவதும் இஸ்லாமிய சமூகம் சொல்லொனா இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருக்கும் இந்த தருணத்தில் மலர்ந்திருக்கும் இந்த ஈகைத்திருநாள் எமக்கு கண்ணியத்தையும் பாதுகாப்பையும் அமைதியையும் சுபீட்சத்தையும் கொண்டு வர வேண்டுமென ஏகவல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

அநியாயக்காரர்கள், இனவெறியர்கள் , மனிதத்தை மதிக்காத மதவெறியர்கள்  எம்மை ஆளுகின்ற நிலை நிரந்தரமாக நீங்க வேண்டுமென்ற அவா எம் ஒவ்வொருவரதும் உள்ளத்தில் இறைநம்பிக்கையின் உணர்வொளியாக ஒளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. இறை நியதிப்படி அந்த எண்ணம் வீண்போகாது என்பதை நாம் இறை நேசர் இப்ராஹீம் (அலை) அவர்களது வாழ்வியலில் இருந்து பாடமாகப் பெற வேண்டும்.

எமது மார்க்கம் முழு மானிட சுபீட்ஷத்துக்குமானது, அனைவரதும் நல்வாழ்வுக்குமுரியது என்ற தூதை சகோதர சமூகங்களுக்கு எத்தி வைப்பதில் நாம் விட்ட  பெரும் குறையை அவசரமாக நிவர்த்திக்க வேண்டிய காலகட்டத்தில் இன்று நாமிருக்கின்றோம்.
 
எமது மார்க்கம் காட்டித்தந்த உயர் பண்பாடுகளால் தான் நாம் சக சமூகங்களதும் உள்ளங்களை வென்றெடுக்க வேண்டும். குறுகிய இனவாத , பிரதேசவாத கண்ணோட்டங்களினூடாக நாம் செயற்பட முனைந்தால் நாம் இன்னுமின்னும் பலவீனமடைந்து விடுவோம்.

நான் என்ற மமதையுணர்வும்  என்னால் தான் எல்லாமே என்ற பெருமையுணர்வும் இஸ்லாம் வெறுக்கின்ற பண்புகளாகும். அத்தகைய பண்புகளைக் கொண்டவர்களால் எமது சமூகத்தினை விடிவை நோக்கி வழிநடாத்த முடியாது. எனக்கு மாத்திரமே ஆளுமையுண்டு என்ற கர்வம் ஷைத்தானியப் பண்பாகும். எனவே இப்புனித நாளில் நாம் இத்தகைய மோசமான பண்புகளைக் களைந்து இஸ்லாம் வலியுறுத்தும் ஒற்றுமை, சகோதரத்துவம், அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் அளித்துள்ள ஆளுமை மற்றும் கொடைகளை மதித்தல் போன்ற நற்பண்புகளை அணிகலனாக்கி சமூகத்தின் விடிவுக்கும் மறுமலர்ச்சிக்கும் உழைக்க முன்வரவேண்டும். 

எமக்கு முன் சென்ற சமூகத் தலைவர்களது ஒப்பற்ற பங்களிப்புகளை பணிவோடு மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். நாம் வாழும் காலத்திற்கு எமக்கு முன்சென்றவர்களின் வரலாற்றிலிருந்து என்ன படிப்பினையை பெறலாம் என்று சிந்திக்கவேண்டும். இன்றேல் இத்தகைய மோசமான குணங்களால் நாம் சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாகிப் போவோம்.

காஷ்மீர் , பலஸ்தீன் , கிழக்கு துருக்கிஸ்தான், மியன்மார் போன்ற சமூகங்களை பார்த்து நாம் சுதாகரிக்க வேண்டும். ஒற்றுமையின்மை, சுயநலம், அடுத்தவர்களை அற்பமாக கருதும் மனப்பான்மை என்பன உலகம் முழுவதும் முஸ்லீம் சமூகம் சீரழிய பிரதான உட்காரணியாக இருக்கின்றன.
நீதியும் நியாயமும் ஆட்சி செய்யும் அழகிய சூழலை நம் நாட்டிலும் அநீதிக்குள்ளான அனைத்து முஸ்லீம் நாடுகளிலும் விரைவாக ஏற்படுத்த வேண்டுமென எல்லாம் வல்ல அல்லாஹ்வை  இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் இது போன்ற நன்னாளை நற்சுகத்தோடும் சுபீட்ஷத்தோடும் நல்லருளோடும் மீண்டும் மீண்டும் வந்தடையச் செய்வானாக.
எம்மையும் உங்களையும் அவன் பொருந்திக் கொள்வானாக.
ஈத் முபாரக் - இனிய தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

No comments