காத்தான்குடி சிரேஷ்ட ஊடகவியலாளர் மதியன்பன் மஜிட் காத்தான்குடி சம்மேளனத்திற்கு எழுதிய திறந்த மடல் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் நமது உறவுகள் தொடர்பாக...காத்தான்குடி சிரேஷ்ட ஊடகவியலாளர், கவிஞர் எம்.எஸ்.எம்.மஜிட் (மதியன்பன்) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திற்கு எழுதிய திறந்த மடல்    கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் நமது உறவுகள் தொடர்பாக... 

கடந்த 21.04.2019 அன்று நாட்டில் இடம் பெற்ற குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் எமது உறவுகள் தொடர்பாகவும்> காத்தான்குடி சம்மேளனம் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் சம்மேளனத்திற்கு 30.05.2019   அன்று  நான் அனுப்பிவைத்த கடிதம்.

இது உங்கள் பார்வைக்காகவும் ஏனைய நடவடிக்கைகளுக்காகவும்.

 

தலைவர்செயலாளர்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம்

காத்தான்குடி

 

அன்புடையீர்>

அஸ்ஸலாமு அலைக்கும்

கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் நமது உறவுகள் தொடர்பாக...

கடந்த 21.04.2019 அன்று நமது நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் பின்னரான சுற்றி வளைப்பு மற்றும் தேடுதல்களைத் தொடர்ந்து இடம் பெற்றுக் கொண்டிருக்கும் கைது நடவடிக்கைகள் தொடர்பாக சில விடயங்களை தங்கள் கவனத்திற்காகவும் நடவடிக்கைகளுக்காகவும் முன்வைக்க விரும்புகின்றேன்.

 

இது வரையில் நமதூரில் எண்ணிக்கை தெரியாத பல கைதுகள் ஆண் பெண் என்ற வித்தியாசமின்றி இடம் பெற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிய வருகிறது. இக்கைதுகள் தொடர்பான தகவல்கள் எதுவும் முழுமையாக ஊரின் தாய் நிறுவனமான சம்மேளனத்தினால்  திரட்டப்பட்டதாக எம்மால் அறிய முடியவில்லை.


பயங்கரவாதத்துடன் நேரடியாக தொடர்புபட்ட சிலர் கைதாகியிருந்தாலும் ஏனைய அனைத்துக் கைதுகளும் சந்தேகத்தின் பெயரிலும்  இடம் பெற்றுள்ளன.

அதே நேரம் அதிகமானவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழேயே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

இது ஒரு புறமிருக்க...

 

கைது செய்யப்பட்டவர்களின் குடும்பங்கள் தினமும் அனுபவிக்கும் துயரங்களையும் கஸ்டங்களையும் பார்க்கின்ற போது இதில் சம்மேளனத்தின் பங்களிப்பு போதாது என்பதும்துணிவுடன் இன்னும் சில முன்னெடுப்புக்களை செய்ய வேண்டும் எனவும் தாழ்மையுடன் கேட்டு;க் கொள்கிறேன்.

 

01    கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான முழுமையான தகவல்கள்குடும்ப ரீதியாக சம்மேளனத்தினால் அவசரமாகத் திரட்டப்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக இத்தகவல் திரட்டல் ஒவ்வொரு பள்ளிவாயல் மஹல்லாக்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்படுவது பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகின்றேன்.

 

 

02    அன்றாட வாழ்க்கைச் செலவுக்கே அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் கைதிகளின் குடும்பத்தினருக்கு தமது உறவுகளை தினசரி பார்வையிடச் செல்வது பெரும் சுமையாக இருப்பதை நேரடியாக அறிய முடிகிறது. இச்சுமையை குறைப்பதற்காக போக்கு வரத்து வசதிகள் உட்பட சில உதவிகளை சம்மேளனம் செய்து கொடுப்பது அவர்களது சுமைகளில் சிலவற்றையாவது குறைக்கும் என நினைக்கிறேன்.

 

 

03    கைது செய்யப்பட்டவர்களின் மனைவிமார்களில் அதிகமானோர் இளம் வயதினர்களாக இருப்பதோடு வாடகை வீடுகளிளேயே வசித்து வருகின்றனர். அதிகமான வீடுகளில்ஆண் துணைகள் இல்லாது இவர்களது பொருளாதாரப் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இப்பொருளாதாரப் பிரச்சினை தொடர்பான முடியுமான தீர்வை வழங்குவதற்கு சம்மேளனம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

04    கைதிகள் தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்கான செலவுகளைச் செய்வதற்கு பல குடும்பங்கள் இன்னும் சிரமப்படுவதால் இலவச சட்ட உதவிககளைப் பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை சம்மேளனம் செய்து கொடுப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

 

 

05    இப்பிரச்சினை தொடர்பாக கடனாளியாகி தற்போதைய சூழ்நிலையில் வருமானம் இழந்திருக்கும் குடும்பங்களுக்கு சம்மேளனத்தினால் வழங்கப்படும் சகாத் நிதியிலிருந்து அல்லது வேறு ஏதாவது நிதியிலிருந்து வழங்க முடியுமாயின் அதனையும் பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

 

06    கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளைப் பார்ப்பதற்காக வரும் நமது பெண்கள் சிறைச்சாலை வளாகத்திலும் நீதிமன்ற முன்றலிலும் பல்வேறு சிரமங்களை தினந்தோறும் அனுபவிப்பதை அவதானிக்க முடிகிறது. இவர்களுக்கான வழி காட்டல்களையும் உதவிகளையும் செய்வதற்கு சம்மேளனத்தினால் சிலரை நியமித்து உதவலாம் எனவும் நினைக்கிறேன். பொலிசாருடனும் இராணுவத்தினருடனும் நெருங்கிய உறவைப் பேணிவரும் தங்களுக்கு இது சிரமமாக இருக்காது எனநினைக்கின்றேன்.

 

 

07      கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் குடும்பங்கள் பல புனித நோன்பை நோற்பதற்குகுகூட வசதியில்லாமல் வாடுகின்றார்கள். ஆகவே அவசரமாக இவர்களுக்கான உணவு மற்றும் பெருநாள் உடை விடயத்தில் கூடிய கவனம் செலுத்தூறும் கேட்டுக் கொள்கிறேன்.

 

 

08    கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் கைதிகளின் குடும்பங்கள் மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கான உளவளத்துணை ( ) உடனடியாக தேவைப்படுகிறது.  பொருத்தமான வளவாளர்களைக் கொண்டு அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கலாம் என நினைக்கிறேன்.

 

 

09    விசாரணை என்ற பெயரில் பொலிஸார் இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையினர் சில இடங்களுக்கு வந்து போகிறார்கள் அதற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் இனம் காணப்படாத இன்னும் சிலர் சில வீடுகளுக்கு வந்து அங்குள்ள ஆண்களின் பெயர்களைச் சொல்லி விசாரத்து விட்டு பின்னர் வருவதாகச் சொல்லிச் செல்கிறார்கள். இதனாலும் பல குடும்பங்கள் அச்சமடைந்திருக்கின்றன.

 

ஆகவே பாதுகாப்புத் துறையினரின் ஆலோசனையுடன் வட்டார ரீதியாக அல்லது பள்ளிவாயல்கள் மஹல்லாக்கள் ரீதியாக கண்காணிப்புக் குழுக்களை நியமிப்பது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. இதனையும் கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

மேலே குறிப்பிட்ட பல்வேறு உதவிகளை மக்கள் சார்பாக கேட்பதற்கும் அவற்றை வழங்குவதற்கும் தகுதியான அல்லது பொருத்தமான ஒரு சிவில் அமைப்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறவனங்களின் சம்மேளனமே காணப்படுகின்றது. . காரணம் இது தாய் நிறுவனம் என மக்களால் அறியப்பட்ட ஒன்றாகும்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் எமதூருக்கு ஏற்பட்ட இதை விட பயங்கரமான அச்சுறுத்தல்கள்,அவலங்களிலிருந்து இவ்வூர் மக்களை அல்லாஹ்வின் உதவியுடன் சம்மேளனம் பாதுகாத்திருந்தது. அத்தகைய நெஞ்சுரத்தோடு சம்மேளனம் இன்று செயற்படுகின்றதா என்ற கேள்வியும் மனக் கவலையுமே இக்கடிதத்தை எழுத வைத்துள்ளது.

எனவேஇனிமேலாவது காலம் தாழ்த்தாது தயவுசெய்து தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கைதுகள் தொடர்பாகவும் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள்சட்ட உதவிகள் தொடர்பாகவும் ஒரு காத்திரமான முடிவை எடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.

குறிப்பு:

கைதிகளது குடும்பத்தினரது கஸ்டங்களை நேரடியாக கண்டறிந்தவன் என்ற வகையில் அவசியம் ஏற்படின் தங்களோடு நேரடியாக கலந்துரையாடுவதற்கு நேரத்தை ஒதுக்கித்தருமாறு தாங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வண்ணம்

உண்மையுள்ள

 எம்.எஸ்.ஏ.மஜீத் (மதியன்பன்)

தக்வா பள்ளி வாயல் வீதி

புதிய காத்தான்குடி 03

30.05.2019

தொலைபேசி இலக்கம் -  077 6684848
No comments