பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் அமைச்சுப்பொறுப்புகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்


கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அமைச்சுப்பொறுப்புக்களில் இருந்து இராஜினாமா செய்த நிலையில் குறித்த சில அமைச்சுக்களுக்கு இன்று பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.


அந்தவகையில், புதிய பதில் அமைச்சர்கள் மூவர் இன்று ஜனாதிபதி முன்னிலையில், ஜனாதிபதி மாளிகையில் அமைச்சுப் பொறுப்புக்களை பொற்றுக்கொண்டனர். 


நகர திட்டமிடல், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்த்தன ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் இன்று (10) நகர திட்டமிடல், நீர் வழங்கல், உயர்கல்வி பதில் கடமைபுரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேநேரம் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் பிரதியமைச்சர் புத்திக பத்திரன, கைத்தொழில், வர்த்தக அலுவல்கள், நீண்டகாலம் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றுதல், கூட்டுறவு அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன் விருத்தி பதில் கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே, நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி பதில்கடமை புரியும் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இவ் அமைச்சர்கள் இன்று (10) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்தனர்.

No comments