மத்ஹப் ஏன் தேவை........?

சட்டத்தரனி

வை எல் எஸ் ஹமீட் 

குர்ஆனையும் சுன்னாவையும் தான் பின்பற்றவேண்டும்; என்பதில் மாற்றுக் கருத்து இல்லை; ஏனெனில் அவை இரண்டுமே இஸ்லாம். ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும்வரை, காலையில் தூங்கி எழுந்ததிலிருந்து அடுத்தநாள் தூங்கும்வரை இஸ்லாம் கூறியதன்படியே வாழவேண்டும். அவ்வாறு வாழுகின்றபோது அவை அனைத்தும் வணக்கங்களாகின்றன.


இறைவன் திருமறையில் “ மனிதர்களையும் ஜின்களையும் தன்னை வணங்குவதற்காகவேயன்றி படைக்கவில்லை” என்னு கூறுகிறான். ஒரு மனிதன் வாழுவதற்குத் தேவையான அனைத்தும் குர்ஆன் சுன்னாவிலே இருக்கின்றன.


இங்கு கேள்வி என்னவென்றால் குர்ஆனையும் சுன்னாவையும் படித்து ஒவ்வொரு மனிதனும் தனக்கு புரிவதுபோல் வாழமுடியுமா? அல்லது ஒவ்வொரு மௌலவியையும் ஒவ்வொரு கூட்டம் பின்பற்றுவதா?


ஒவ்வொரு மௌலவியும் தனக்குப் புரிவதுபோல் இஸ்லாத்தைத் தொகுப்பதா? அல்லது இயக்கங்கள் அமைத்து ஒவ்வொரு இயக்கமும் ஒவ்வொரு விதமாக தொகுப்பதா? 


தொழுகைக்கு இத்தனை பர்ளுகள், இத்தனை சுன்னத்துக்கள் என்று வெளிப்படையாக குர்ஆன், சுன்னாவில் இருக்கின்றதா? இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கணக்கிடமுடியுமா? இல்லை.


இந்த அடிப்படையில்தான் இமாம்கள் குர்ஆன், சுன்னாவைத் தொகுத்து அவற்றில் இருந்து சட்டங்கள், விதிமுறைகளைப் பகுத்து எடுத்திருக்கிறார்கள். அவற்றைத்தான் “ மத்ஹப்” என்கின்றோம். எனவே, மத்ஹப் என்பது குர்ஆன், ஹதீசுக்கு அடுத்த மூன்றாவதாக அதனைப் புரிகின்றபோதுதான் பிரச்சினை உருவாகின்றது.


மத்ஹப் என்பது குர்ஆனும் ஹதீசும்தான். நாம் இலகுவாக அறிந்துகொள்வதற்காக அவைகள் குர்ஆன் ஹதீசில் இருந்து தொகுக்கப்பட்டிருக்கின்றன. பிரதான நான்கு மத்ஹபுகளுடைய இமாம்களைப்பற்றியும் நாயகம் ( ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்திருக்கிறார்கள்.


மத்ஹபுக்களுக்கிடையே முரண்பாடு 

————————————————

மத்ஹபுகளுக்கிடையே முரண்பாடு ஏதுமில்லை. சிலவிடயங்களில் அபிப்பிராய பேதங்கள் இருக்கின்றன. அந்த அபிப்பிராய பேதங்கள்கூட உம்மத்துக்கு மார்க்கத்தை இலகுவாக்குவதற்கே, என்பதற்கான நபி( ஸல்) அவர்களின் முன்னறிவிப்பும் இருக்கின்றது.


இவர்களின் ஒரு சில விடயங்களிலான அபிப்பிராயபேதம் என்பது மார்க்கத்திற்கு அடிப்படையில் முரணானதல்ல. மார்க்கம் அனுமதித்த எல்லைக்குள்ளான மாற்று நிலைப்பாடாகும். இதனை சுமார் ஆயிரம் ஆண்டுகளாத் தோன்றிய பெரும் உலமாக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள், பிற்காலத்தில் தோன்றிய ஒரு சில குழப்பக்காரர்களைத்தவிர.


இவர்களை சரிகண்டதனால்தான் புகாரி இமாம், குத்புல் அக்தாப் முஹியித்தீன் அப்தில் காதிர் ( கத்) உட்பட அனைத்து உலமாக்களும் பெரியார்களும் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்.


எனவே, ஒவ்வொரு முஸ்லிமும் இந்த நான்கு மத்ஹபில் ஒன்றைப் பின்பற்றினால் வழிதவறமாட்டான். அது முழுமையான குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றியதாகும். இவற்றைப் புறக்கணித்து நான் குர்ஆன், சுன்னாவைப் பின்பற்றுகிறேன் என்று அவனுக்கு புரிந்தவிதத்தில் ஒரு வாழ்க்கைமுறையைப் பின்பற்றினால் அதன்பொருள் அவன் தனக்கென ஒரு மத்ஹபை உருவாக்கிக் கொண்டான்; என்பதாகும்.


ஒரு  பாமரன் அவ்வாறு ஒவ்வொரு மௌலவியும் அல்லது ஒவ்வொரு இயக்கமும் சொந்தமாக உருவாக்கிய மத்ஹபுக்களைப் பின்பற்றத் தொடங்கினால் வழிகேட்டில் சென்று முடியும்.


சுருங்கக்கூறின் நான் குர்ஆன், ஹதீசையே பின்பற்றுகிறேன் என்பவனோ அல்லது மத்ஹபைப் பின்பற்றுகிறேன் என்பவனோ எல்லோரும் ஏதோ ஒரு மத்ஹபைப் பின்பற்றத்தான் செய்கிறார்கள். மத்ஹப் என்பது குர்ஆன், சுன்னாவில் இருந்து தொகுக்கப்படும் சட்டதிட்டங்களாகும். 


எனவே, மத்ஹபைப் பின்பற்றாதவனே இல்லை, மத்ஹபுகளுக்கு ஏசுகின்றவன் உட்பட. கேள்வி யாருடைய மத்ஹபை அவன் பின்பற்றுகிறான்; என்பது மாத்திரம்தான்.


யாருக்கு மத்ஹப் கட்டாயமில்லை?

———————————————-

குர்ஆன், ஹதீசில் இருந்து தனது வாழ்க்கைக்குத் தேவையான சட்டதிட்டங்களைத் தாமே தொகுக்கக்கூடிய ஒரு அறிவாளி, ஆலிமுக்கு ஏற்கனவே இருக்கின்ற மத்ஹப் ஒன்றைப் பின்பற்றத் தேவையில்லை. அவர் தன்சொந்த மத்ஹபைப் பின்பற்றலாம். அப்படிப்பட்ட ஆலிம்கள் யார்?


புகாரி இமாம் அவர்கள்கூட ஒரு முறை தான் ஏற்கனவே இருக்கின்ற மத்ஹபுக்களைப் பின்பற்றத் தேவையில்லை; என  நினைத்தார்கள். ஆனால் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம், ஒரு மசாலாவிற்கு பதில் சொல்லவேண்டியேற்பட்டபோது அவருக்கு விடை தெரியாமற்போனமை தான் அப்படிப்பட்ட ஒரு ஆலிம் அல்ல, தானும் ஒரு மத்ஹபைப் பின்பற்றுவதே பாதுகாப்பானது; என்பதை உணர்த்தியது. அதன்பின் ஷாபி மத்ஹபைப் பின்பற்றினார்கள்.


இலங்கையில் நாம் பெரும்பான்மையாக ஷாபி மத்ஹபையும் சிலர் ஹனபி மத்ஹபையும் பின்பற்றுகின்றோம். மத்ஹபை பின்பற்ற வேண்டாம் என்பவர் மறைமுகமாக அவரது சொந்த மத்ஹபை உங்களைப் பின்பற்றச் சொல்கின்றார், என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.


இப்பொழுது நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றப்படுகின்ற குர்ஆன், ஹதீசில் இருந்து தொகுக்கபட்ட ஒரு மத்ஹபைப் பின்பற்றப்போகிறீர்களா? அல்லது குர்ஆன், ஹதீஸ் என்றபோர்வையில் இவர்களது மத்ஹபைப் பின்பற்றப் போகிறீர்களா?


இதுதான் உங்கள் முன்னால் உள்ள கேள்வி. குழம்பி வழிதவறிவிடாதீர்கள். குர்ஆன், ஹதீசைத்தான் பின்பற்ற வேண்டும்; மத்ஹபை அல்ல; என்ற அறியாமைக் கருத்தைத் தவிருங்கள்.

No comments