ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் நாம் ஒற்றுமையாகவே உள்ளோம் –பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றுாப்


ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் தமக்கிடையில் எந்த பிளவும் இல்லை என திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின்  பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்றுாப் தெரிவித்தார். 

வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியாவில் நடைபெற்ற கிரிக்கெட் சுற்றுபோட்டி ஒன்றின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
ஒரே கட்சிக்குள் காணப்படும் பிரதேச சபை உறுப்பினர்களுக்குள்ளயே கருத்து வேறுபாடுகள் காணப்படும் போது வெவ்வேறான பார்வைகளை கொண்ட சஜித் பிரேமதாசவுக்கும் ரவி கருணாநாயக்கவுக்கும் கருத்து வேறுபாடுகள் காணப்படுவது தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அவர்களுக்கிடையில் காணப்படும் கருத்து வேறுபாடுகள் அவர்களின் தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளே அன்றி ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் அவர்கள் உட்பட நாம் அனைவரும் ஒற்றுமையாகவே உள்ளோம்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனைந்து நடாத்திய ஐம்பத்தி ஒரு நாள் அரசியல் சூழ்ச்சியை ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களாகவே நாம் ஒற்றுமையுடன் முறையடித்தோம்.அப்போதும் இவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் காணப்பட்டன. ஆனால் கட்சி என்ற ரீதியில் இவர்கள் இருவரும் இணைந்து செயற்பட்டதாலேயே எம்மால் அன்று வெற்றி பெற முடிந்தது.

ஆகவே இந்த தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை காண்பித்து யாரும் ஐக்கிய தேசிய கட்சியை அழித்து விடலாம் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடலாம் என கனவு காண வேண்டாம்.

இதை விட பெரிய பிரட்சனைகள் அவர்களுக்கிடையில் காணப்படுகின்றன.இதை காண்பித்து அந்த பிரட்சனைகளை மறைத்து விடலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். விமல்வீரவம்ச குழுவினர் கோட்டபாயவை கைகாட்டினால் வாசுதேவ குழுவினர் சமல் ராஜபக்சவை கைகாட்டுகின்றனர்.மறுபக்கம் பசில் ராஜபக்ச இலங்கை முழுவதும் தான்தான் ஜனாதிபதி வேட்பாளர் என பிரச்சாரம் செய்கிறார்.இன்னொரு பக்கம் குமார வெல்கம என எதிர்கட்சி பல துண்டுகளாக பிரிந்து காணப்படுகிறது. இந்த பிளவை சஜித் ரவி எனும் திரையை காண்பித்து இவர்களால் மறைக்க முடியாது.

அனைவரும் ஏற்றுக்கொள்ள கூடிய மக்கள் விரும்பும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் ரணில், சஜித், ரவி ,கரு அனைவரும் ஒரே மேடையில் மக்கள் முன் வருவார்கள். அந்த வேட்பாளருடன் முன்னோக்கி பயணிக்க தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

No comments