நீங்கள் எங்களை கொலை செய்ய வந்திருக்கிறீர்கள்.உங்களை போன்றவர்களை கவனிக்கக் கூடாது என்று எமக்கு செய்தி வந்திருக்கிறது இரத்தினபுரி வைத்தியசாலைக்கு ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் பெண்மணியிடம் தெரிவிப்பு.

எம்.எல்.எஸ்.முஹம்மத்

இரத்தினபுரி

கடந்த சில தினங்களாக நாட்டில் அசாதாரண சூழ்நிலை தொடர்கின்ற நிலையில் கறுப்பு நிற ஹிஜாபுடன் தனது குழந்தைக்கு சிகிச்சை பெற இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்ற முஸ்லிம் பெண்மணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று  காலை(23) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக குறித்த பெண்மணி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்

"நேற்று காலை(23) நான் எனது குழந்தைக்கு வெளி நோயாளர் பிரிவில்  சிகிச்சை பெற்றுக் கொள்ளும் நோக்குடன் எனது வழமையான கறுப்பு நிற ஹிஜாப் ஆடையுடன் வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

எனினும் அங்கு கடமையில் இருந்த தாதிகள் மற்றும் வைத்தியர் உட்பட அனைவரும் என்னை ஒரு பயங்கரவாத சந்தேக நபர் போன்று பார்க்க ஆரம்பித்ததுடன் மருந்து வேண்டுமானால் கறுப்பு நிற ஹிஜாப் உட்பட முந்தானையையும் அகற்றி விட்டு வருமாறு எச்சரித்தனர்.

நீங்கள் எங்களை கொலை செய்ய வந்திருக்கிறீர்கள்.உங்களை போன்றவர்களை கவனிக்கக் கூடாது என்று எமக்கு செய்தி வந்திருக்கிறது.நீங்கள் இந்த ஆடையில் குண்டுகளை மறைத்து வரலாமென்று நாங்கள் அச்சப் படுகின்றோம்.நாங்கள் உங்களுக்கு சிகிச்சை அளிப்பவர்கள் அன்றி உங்கள் உடம்பை பார்க்க விரும்புகின்றவர்கள் அல்ல. ஏனைய பெண்களுக்கு இருப்பது போன்றுதான் உங்களுக்கும் இருக்கிறது.மருந்து தேவையானால் இந்த ஹிஜாபை கழட்டி விட்டு வாருங்கள் என தன்னிடம் வைத்தியர் உட்பட அங்கிருந்த தாதிகள் தெரிவித்ததாக அப்பெண்மணி குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து நான் எனது ஹிஜாபை முற்றாகக் கழட்டி விட்டு வைத்தியரிடம் சென்று எனது குழந்தைக்கு மருந்து பெற்றுக் கொண்டேன்", எனவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து  அப்பெண்மணி கருத்துத் தெரிவிக்கையில்

"முஸ்லிம் சமூகத்தில் உள்ள ஒருசிலரின் தவறான நடவடிக்கைகளால் அப்பாவி பொதுமக்களாகிய நாங்கள் வீனாக தண்டனை அநுபவித்துக் கொண்டிருக்கின்றோம். இன்று எமது மானத்தை பாதுகாத்துக் கொள்வதும் பாரிய சவால் மிக்கதாக மாறியிருக்கின்றது.

எனினும் நான் சிங்கள மொழி மூலம் உயர் தரம் வரை நன்றாகக் கற்றவள் என்பதால் எனக்கிருந்த அறிவினைக் கொண்டு அவர்களுடைய சந்தேகங்களுக்கு பதிலளிக்க முயற்சி செய்தேன்.

ஆனாலும்  எம்மைப் பற்றிய  அவர்களின் பிழையான கண்ணோட்டமும்,தேவையற்ற நெருக்குதல்களும் தொடரும் என்று நான் நினைக்கின்றேன்", எனவும் அப்பெண்மணி தெரிவித்தார்.

இரத்தினபுரி வைத்தியசாலையில் தினமும் நூற்றுக்கணக்கான முஸ்லிம் மக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்து செல்வதுடன் ஒருசில முஸ்லிம் வைத்தியர்கள் உட்பட முஸ்லிம் ஊழியர்கள் சிலரும் கடமை புரிந்து வருகின்றனர்.

No comments