தேசிய ஐக்கியத்திற்காக பாடுபட்டதால் எனக்கு கிடைத்த 'கௌரவங்கள்' அபரிமிதமானவை – காத்தான்குடியில் வட்டரக்க விஜித்த தேரர்

எம்.ஐ.அப்துல் நஸார் 

இந்த நாட்டில் தேசிய ஐக்கியம் ஏற்பட வேண்டும் என பாடுபட்டமைக்கு எனக்குக் கிடைத்த 'கௌரவங்கள்' அபரிமிதமானவை என வட்டரக்க விஜித்த தேரர் தெரிவித்தார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை (07) காத்தான்குடி அல்-மனார் அறிவியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் குரல் பத்திரிகையின் அனுசரணையுடன் அதன் பிரதம ஆசிரியர் ஜே.எல்.எம்.ஏ.சாஜஹான் தலைமையில் இடம்பெற்ற பாரிய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கும் தேவையுடைய மாணவர்கள் முதல் தொகுதியினருக்கு மாதாந்தக் கொடுப்பனவும் வழங்குதல் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியில் அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில், 


தேசிய ஐக்கியத்திற்காக 30 வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டில் நான் பல்வேறு பணிகளை ஆற்றியுள்ளேன் அவற்றிற்காக எனக்குக் கிடைத்த 'கௌரவங்கள்' அபரிமிதமானவை. எம்மனைவரினதும் மதத் தலைவர்கள் இந்த உலகில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டும் எனப் பாடுபட்டதால் அவர்களுக்கு கிடைத்த 'கௌரவங்களுக்கு' பின்னர் கடந்த பல வருடங்களாக எனக்கும் 'கொரவங்கள்' கிடைத்தன. 


முஸ்லிம் பெண்கள் அணிகின்ற ஆடைகள் தொடர்பில் நான் 2013 ஆம் ஆண்டு நாட்டில் எவரும் வாய் திறக்காத காலத்திலே நான் ஊடகங்களில் அதற்காக குரல் கொடுத்தேன். உலகில் நான் பார்த்த பெண்கள் ஆடைகளில் முஸ்லிம் பெண்களின் ஆடைகளே மிகவும் மரியாதையான, கட்டுப்பாடான, கௌரவமான ஆடைகளாகும். அதனால் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பதுளை, புவக்கொடமுல்லையில் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நோன்புகால நிகழ்ச்சியொன்றிற்குச் சென்றபோது அங்கு முஸ்லிம் பெண்களின் ஆடைகளின் உயர் கௌரவத்தினைப் பற்றிப் பேசினேன். அந்த உரை பின்னர் யூடியூபில் போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்குப் பின்னர் எனக்குக் கிடைத்த பெரியதொரு 'கௌரவம்' என்னவென்றால் நான் வாடகைக்கு அமர்த்திய வேன் ஒன்றில் மஹியங்கனையிலிருந்து கொழும்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, கண்டி பேராதனைப் பகுதியில் புவக்கஹமுலயில் வைத்து சுமார் 25 பேர் தடிகளுடன் வந்து என்னை கடுமையாகத் தாக்கியதோடு வாகனத்தையும் அடித்து நொறுக்கி எனக்கு பெரியதொரு 'கௌரவத்தை' வழங்கினார்கள். 


2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆந் திகதி சுமார் 10 மதகுருமார்கள் வில்பத்துவுக்குச் சென்றிருந்தோம். அதன் போது புத்தளம், கற்பிட்டி போன்ற பிரதேசங்களில் வசித்த அகதிகளான முஸ்லிம் மக்கள் மீண்டும் தமது தமது சொந்த ஊர்களுக்கு வந்து வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கு இடமின்றி சிறு பிள்ளைகளையும் பால்குடிக்கும் குழந்தைகளையும் வைத்துக்கொண்டு மரங்களின் கீழ் அங்காங்கு இருப்பதைக் பார்த்தோம். நானும் என்னுடன் வந்திருந்த ஏனைய தேரர்களும் கொழும்புக்கு வந்து ஏப்ரல் மாதம் 09 ஆந் திகதி கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தோம். அதில் பௌத்த தேரர்கள், குருக்கள், மௌவிமாhர் என அனைவரும் இருந்தனர். உங்கள் அனைவருக்கும் தெரியும் ஊடகங்களிலும் பார்த்திருப்பீர்கள், கோபம் கொண்ட பேய் போன்ற ஒருவர் அங்கு வந்தார். அவர் தற்போது சிறையில் இருக்கின்றார். அவர் பெரும் கூட்டத்துடன் உள்ளே புகுந்து அங்கு மிகப் பெரும் 'கௌரவம்' ஒன்றை எனக்குக் கொடுத்தார். 


மேலும் பல 'கௌரவங்களும்' எனக்குக் கிடைத்திருக்கின்றன. வேறு யாருக்கும் நாட்டில், சமுதாயத்தில் அந்த அளவிற்கு 'கௌரவம்' கிடைத்திருக்குமென்று நான் நினைக்கவில்லை. நான் ஒரு நாள் இரவு தூக்கத்திலிருந்தபோது என்னை தூக்கிச் சென்று  எனது உடல் முழுவதையும் வெட்டிய மிகப் பாரதூரமான காயங்களை ஏற்படுத்தினார்கள் மறுநாள் நான்கு மணிவரை எனக்கு சுயநினைவு வரவில்லை. அதுவும் எனக்குக் கிடைத்த மிகப் பெரும் 'கௌரவமாகும்'.


நான் ஒரு எறும்பையேனும் கொல்லவும் இல்லை, அவ்வாறே எறும்பை கொல்லுமாறு யாருக்கும் கூறவும் இல்லை. இது தான் நான் பின்பற்றும் புத்த பெருமானின் போதனையாகும். ஏனைய மதங்களும் அப்படித்தான். 


நான் முன்னெடுத்துச் சென்ற பாரிய செயற்பாடுகளுக்கு தலைiயில் பாறாங்கல்லைப் போடுவது போன்ற பாதகத்தைச் செய்தவர்கள் அப்போதிருந்த அரசாங்கம் மற்றும் வசதிவாய்ப்புக்களைப் பெற்றிருந்த கொலைகாரக் கும்பல்களுமாகும். அதன் காரணமாகவே நான் தன்னந்தனியாக முன்னெடுத்த செயற்திட்டங்களுக்கு அப்படியான  'கௌரவங்கள்' கிடைத்தன. 


எந்தவித காரணங்களுமின்றி 11 நாள்கள் என்னை களுத்துறை சிறைச்சாலையில் வைத்திருந்தார்கள். நான் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சென்று என்னை கொல்ல முயற்சிக்கின்றார்கள் எனது உயிரைக் காப்பாற்றுங்கள், நான் இலங்கையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மறைந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றேன், பகிரங்கமாக வெளியில் செல்லாது செல்ல முடியாதிருக்கின்றேன், எனது உயிரைக் காப்பாற்றுங்கள் என்று கூறி பதாதை ஒன்றினை வைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இருந்தேன். என்னை கொல்லத் துடித்துக்கொண்டிருக்கும் நபர் ஜீப் ஒன்றில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அந்த இடத்திற்கே வந்தார். என் அருகில் வந்து உன்னை கொன்றே தீருவேன் என்று பொலிஸாரும், ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தோரும் இருக்கத்தக்கதாக கூறிச் சென்றார். மாலை நான்கு மணியளவில் பொலிஸார் தமது ஜீப்பில் கொண்டு சென்று அன்றிரவே நீதவான் முன்னிலையில் என்னை ஆஜர்படுத்தி மீண்டும் என்னை 11 தினங்கள் பொறளை மெகஸீன் சிறைச்சாலையில் தடுத்து வைத்து மீண்டும் எனக்கு 'கௌரவம்' அளித்தார்கள். 


நடந்த விடயங்கள் தற்போது முஸ்லிம் மக்களுக்கு சிறிது சிறிதாக மறந்து விட்டதாகவே தெரிகின்றது. இந்த நாட்டின் மிக அண்மைக் கால வரலாற்றில் மௌலவிமார்கள் பள்ளிவாயல்களில் பிரசங்கம் செய்யும்போது கூறுவார்கள், என்னிடமே நேரடியாகக் கூறியிருக்கிறார்கள் 'மதகுரு அவர்களே இன்று நான் பள்ளியில் பிரசங்கத்தின் போது கூறினேன் இன்று நகரத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் இன்று 'அவர்களது' கூட்டமொன்று இருக்கிறதாம் பெண்கள் தங்கள் ஆடைகளை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் சென்றுவிட வேண்டாம் என்றும் கூறினேன்' என மௌலவிமார்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இப்படித்தான் இந்த நாட்டின் அண்மைக்கால வரலாறு இருந்தது. முஸ்லிம், தமிழ், கத்தோலிக்க மற்றும் சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக சகோதரர்கள் போன்று இருக்க வேண்டும் என்று நான் சொன்னதன் காரணமாக எனக்கு தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலமாக பகிரங்கமாக 'மொஹமட் வட்டரக்க' என்று எனக்கு 'கௌரவம்' அளிக்கப்பட்டது. 


சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய இலங்கையுள்ள நாம் அனைவரும் சகோதரர்கள் போல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்தப் பிரச்சினையும் இல்லை, நாம் அனைவரும் ஒரே நாட்டின், ஒரே தாய்நாட்டின், ஒரே இரத்தத்தை உடையவர்கள், ஒரே சகோதரர்களாய் இந்த நாட்டிலேயே பிறந்து, வாழ்ந்து, இந்த நாட்டிலேயே மரணிக்க வேண்டியவர்கள். 


எனக்கொரு கேள்வி இருக்கின்றது. நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டுமெனக் கூறுகின்றோம், இருந்தாலும் எங்கள் வீட்டிலேயே ஒற்றுமை இல்லை என்றால், வெளியில் ஏனைய மக்களோடு எவ்வாறு ஒற்றுமையாக இருக்க முடியும் ?


எனவே நான் கடந்த காலத்தில் அக்ரைப்பற்று பொத்துவில் போன்ற பல பிரதேசங்களில் சிறு சிறு கூட்டங்களை நடத்தி நான் கூறிய விடயம் என்னவென்றால் முஸ்லிம் சகோதரர்களே அரசியல், கட்சி ஆகியவற்றையும் மதபேதங்ங்களையும்  புறந்தள்ளி வையுங்கள். இஸ்லாத்தின் பெயரால் ஒன்றுபடுங்கள் என்றே நான் கூறிவருகின்றேன். 


நான் இவ்வாறு சென்றுகொண்டிருந்தபோது ஒரு பள்ளிவாயலுக்குச் சென்றேன். அங்கு பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். நான் மௌலவி அவர்களை அழைத்து 'இந்தப் பள்ளியைத் தாக்குவதற்கு பொதுபலசேனா வருகிறதா ?' எனக் கேட்டேன். இல்லை, இல்லை அவர்கள் வரவில்லை எமது ஆட்கள்தான் வருகிறார்கள் எனக் கூறினார். 


வில்பத்து மிகப் பெரும் பிரச்சினை. அதனைப் பிடித்துக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் மனக்குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். காடுகளை அழிக்கிறார்கள், முஸ்லிம் கிராமங்களை அமைக்கின்றார்கள், பாகிஸ்தானிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து அங்கு குடியேற்றுகிறார்கள் என பொய்களைக் கூறுகிறார்கள் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார்கள். எனக்கிருக்கிருக்கின்ற கேள்வி என்னவென்றால், வில்பத்துவின் உண்மையான விடயங்களைப் பற்றி நாம் பேசுகின்றோம், சில சிங்கள மக்கள் பேசுகின்றார்கள். வவுனியாவிலுள்ள பௌத்த மதகுரு அங்கு காடு அழிக்கப்படவில்லை என முன்வந்து சொல்கிறார் ஆனால் எனக்குள்ள கேள்வி இன்று வரை இந்த நாட்டில் றிஸாட் பதியுத்தீன் அவர்களது பிரச்சினைக்கு வேறு எந்த முஸ்லிம் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை. 


அமைச்சரவையில் முஸ்லிம் அமைச்சர்கள் மோதிக்கொண்டார்களாம், நான் பத்திரிகையில் அதனை ஆசையோடு தொடர்ந்து வாசித்துக்கொண்டு சென்றேன். அவர்கள் மோதிக்கொண்டார்கள் என்றால் அது முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்காகவும், இருப்புக்காகவும, அவர்களது உயிர்களை பாதுகாப்பதற்காகவுமே இருக்கும் இருக்கும் என நினைத்து தொடர்ந்து வாசித்தேன். அவர்கள் மோதிக்கொண்டது இரும்புக்காக, முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்காக அல்ல இந்தியாவிலிருந்து இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற, கொண்டு செல்லப்படுகின்ற இரும்புக்காகவேயாகும்.


றஊப் ஹக்கீம் அவர்கள் உங்களது தலைவர், ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்களே நீங்கள் இந்த மக்களின் தலைவர், றிசாத் பதியுத்தீன் அமைச்சர் அவர்களே நீங்களும் இந்த மக்களின் தலைவர், பௌஸி, அதாஉல்லாஹ், ஹஸனலி இவர்களெல்லாம் உங்களது தவைர்கள். 


நான் சொல்கின்றேன், இலங்கையின் முஸ்லிம் குரல் ஒன்றாக இருக்க வேண்டும், சிறிய மக்கள் தொகையினரை துண்டு துண்டாக உடைத்து அவர்களை துன்பத்திற்குள்ளாக்கி விட வேண்டாம் என அனைத்துத் தலைவர்களையும் நான் எச்சரிக்கின்றேன். 


முஸ்லிம் கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாம் எனக் கூறுகிறார்கள், இதனால் வியாபாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது. முகநூலைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு எதிரான பதிவுகள் தொடர்ச்சியாக பகிரப்படுகின்றன. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டினுள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றும் பத்து, பதினைந்து ஆண்டுகள் செல்லும்போது, இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றே எனக்குத் தோன்றுகின்றது. 


எனவே சகோதர சகோதரிகளே, முஸ்லிம் குரல் என்பது சமாதானம் மாத்திரமேயாகும், அதில் யுத்தம் என்பது இல்லை. இந்த நாட்டிலே முன்னர் பயங்கரமான நிலைமை காணப்பட்டது, அப்போதொல்லாம் அனைத்து மௌலவிமார்களும் மக்களும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்கள். அதன்காரணமாக பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியுமாக இருந்தது. எதிர்காலத்திலும் முஸ்லிம் மக்கள் அமைதியாக இருப்பதால் துன்பங்கள் நேராது என எதிர்பார்த்து, அதற்காகப் பிரார்த்திக்கின்றேன்.    


முஸ்லிம் குரல் மூலம் உண்மையிலேயே நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எமது சாஜஹான் அவர்கள் பாரியதொரு சேவையினைச் செய்கின்றார்கள். இருதய நோய் மற்றும் ஏனைய நோய்கள் இருக்குமானால் சாஜஹான் அவர்களே இந்த நாட்டிலுள்ள அடிப்படைவாதம், இனவாதம், மதவாதம் உள்ளவர்களுக்கு இதயம் பாழ்பட்டுவிட்டது, தற்போது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது, சாஜஹான் அவர்களே, இப்படிப்பட்டவர்களுக்கு உங்களது பத்திரிகையினால் இவர்களது நோய்க்கு ஏதாவது மருந்தினைக்கு கொடுங்கள், அப்படி நடக்குமானால் நாட்டில் சமாதானம் ஏற்படும். என்னை கௌரவவித்தமைக்கு எனது நன்றி. 


இந்நிகழ்வின்போது ஜாதிகபல சேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர்  அஷ்ஷெய்க்  TMM. அன்சார் நழீமி(SLAS) தொழிலதிபர் AG.அப்துர்ரஹ்மான் ஊடகவியலாளர் அல்ஹாஜ் AL.டீன்பைறூஸ் ஆகியோர்கள் இந்நிகழ்வின் அதிதிகளாகக் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அல்ஹாஜ்  AWA.சத்தார் தேசகீர்த்தி AR மபூஸ்அஹமட் LLB  காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன தலைவர்   அல்ஹாஜ்  மௌலவி MI.ஆதம்லெப்பை பலாஹி காத்தான்குடி ஜம்மியத்துல் உலமா சபை தலைவர்  அல்ஹாஜ்  மௌலவி MI.அப்துல் கையூம் ஷர்க்கி வசந்தம்TV செய்தி வாசிப்பாளர் ஜனாப்   MJM.ஷுக்ரி  காத்தான்குடி மீடியா போரம் தலைவர் அல்ஹாஜ் மௌலவி SMM. முஸ்தபா பலாஹி ஜனாப்  NM.ஷுக்ரி Director green care organization kattankudy ஆகியோரினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

No comments