மும்பை இந்தியன்ஸ் - 31 பந்துகளில் 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் - அதிரடி காட்டிய பொல்லார்டு


ஐபிஎல் போன்ற 20 ஓவர் ஆட்டங்களில், ஒருவரின் இன்னிங்க்ஸ் மொத்த விளையாட்டையும் மாற்றக்கூடும். அதுவும் 198 ரன்கள் இலக்கு இருக்க, 12 ஓவர்களுக்கு பிறகும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தால், அந்த அணி தோற்றது போலதான்.
ஆனால், இந்த நிலையில் ஒருவர் 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், பத்து சிக்ஸர்கள் அடித்து தன் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு போனால், இதனை அதிசயம் என்றுதான் கூற வேண்டும்.
அப்படி ஒரு ஆட்டத்தைதான் வான்கடே மைதானத்தில் புதன்கிழமை போட்டியில் மும்பை அணியின் கிரோன் பொல்லார்டு ஆடினார். 83 ரன்கள் விளாசி, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி, ஆட்டத்தின் கடைசி பந்து வரை விளையாடி வெற்றியை கைப்பற்றியது.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரண்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல், 64 பந்துகளில், ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை குவித்தார்.
ராகுலுடன் ஆடிய கிறிஸ் கெயில், 36 பந்துகளில், மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடித்து, 63 ரன்களை எடுத்தார்.

No comments