ஆச்சரியமாக இருக்கிறதா..?

பொறியியலாளர் அப்துர்றஹ்மான்

எமிரேட்ஸ் விமான சேவையின் முகாமைத்துவத்தின் கீழ் இயங்கிக் கொண்டிருந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்குக் 2008யில் கிடைத்த இலாபத் தொகை 9 பில்லியன் ஆகும். அதே ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு கடந்த 7 வருடங்களில் ஏற்பட்ட மொத்த நஸ்டத் தொகை 128 பில்லியன்களாகும்.

ஶ்ரீலங்கன் விமான சேவை எமிரேட்ஸ் உடன் கொண்டிருந்த ஒப்பந்தத்தினை மஹிந்த ராஜா திடீரென 2008யில் முறித்துக் கொண்டதுவே இந்தப் பாரிய நஸ்டத்தின் தொடக்கப்புள்ளியாகும்.


2008 ஆம் ஆண்டு நமது வரிப்பணத்தில் மஹிந்த ராஜாவும், அவரது கும்பலும் லண்டனுக்கான (உல்லாசப்) பயணமொன்றுக்கு சென்றிருந்த வேளை, அந்தக் கும்பலை முன்பதிவுகள் எதுவுமின்றி  ஒரே விமானத்தில் இலங்கைக்கு அழைத்துவர வேண்டும் என மஹிந்த ராஜாவின் பினாமிகளில் ஒருவர் எமிரேட்சுக்கு கட்டளை இட்டார்.  குறித்த விமானத்தில் பயணிப்பதற்கு ஏற்கனவே கட்டணம் செலுத்திய பயணிகளை அப்புறப்படுத்த முடியாது என எமிரேட்ஸ் சொன்னது. இதனால் கோபமடைந்த மஹிந்த ராஜா, 9 பில்லியன் இலாபமீட்டுவதற்குத் தலைமை தாங்கிய  அனுபவமிக்க தலைமை நிர்வாகியான பீட்டர் ஹில் என்பவரின் இலங்கைக்கான விசாவை இரத்து செய்து அவரை நாட்டை விட்டு அனுப்பினார்.


அதனைத் தொடர்ந்து எமிரேட்ஸ் தனக்கிருந்த பங்குகளை மஹிந்த ராஜா அரசிடம் திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியேறி விட்டது. இந்த வாய்ப்பையும் தனது குடும்பத்திற்காக பயன் படுத்துக்கொண்ட  மஹிந்த ராஜா , உடனடியாக  ஶ்ரீலங்கன் நிறுவனத்தின் தலைவராக தனது மைத்துனரான நிஸாந்த விகரமசிங்கவை  நியமித்தார். அத்தோடு விமான சேவை நிர்வாகத்தில் எந்தவொரு முன்னனுபவமும் இல்லாதவரான கபில சந்திரசேன அதன் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.


அன்றிலிருந்து, நாட்டின் பெருமைக்குரிய விமான சேவையாக இருந்த ஶ்ரீலங்கன் மஹிந்த அரச குடும்பத்தின் தனிப்பட்ட சொத்தாகவும்  தமக்கு விருப்பமானவர்களுக்கெல்லாம் பல இலட்சம் சம்பளத்தில் தொழில் வழங்கும் நிறுவனமாகவும் மாறியது.


அது மட்டுமின்றி ஆட்டோ வாகனமொன்றை கொள்வனவு செய்வது போல விமானங்களை கொள்வனவு செய்ய மஹிந்த அரசு முடிவு செய்தது. சந்தை விலையிலும் பார்க்க பல நூறு மில்லியன் கூடுதல் விலை கொடுத்து A330 மற்றும் A350ஆகிய விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.


இந்தப் பின்னணியில்தான் இன்று 128 பில்லியன் என்கின்ற மீளமுடியாத கடன் சுமையில் ஶ்ரீலங்கன் இருக்கிறது. ஶ்ரீலங்கனை யதொடர்வதென்றால் அடுத்த 6 மாதங்களுக்கு மாத்திரம் திறைசேரி 40பில்லியன் கொடுத்துதவ வேண்டயிருக்கும். இந்த விமான சேவையை யாருக்கும் விற்கவும் முடியாமல் தொடர்ந்தும் நடாத்தவும் முடியாமல் இந்த அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. 


நமது நாட்டின் ஒரேயொரு விமான சேவையான ஶ்ரீலங்கன் தொடர்பில் அரசாங்கம் தெரிவித்துள்ள கருத்துக்களே இவை . 


இது எனக்கு ஆச்சர்யமாக இல்லை.


ஆனால், இவ்வளவு தூரம் நாட்டைக் கொள்ளையடித்து நாசமாக்கியவர்கள் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மென்மையான போக்குத்தான் எனக்கு நம்ப முடியாத ஆச்சர்யமாக இருக்கிறது. 


ஏனெனில், ஶ்ரீலங்கன் விடயம் தொடர்பில் விசாரணை செய்த 'வெலியமுன்ன' ஆணைக்குழு பலமாதங்களுக்கு முன்னே நாட்டின் பொதுச்சொத்தொன்று இவ்வாறு நாசம் செய்யப்பட்டதற்கு யார் யார் காராணம் என்பதனை தெளிவாக அறிக்கையிட்டிருந்தது. 


ஆனால் , அவர்களில் ஒருவரேனும் ஏன் இன்னும் விசாரணைக்கேனும் அழைக்கப்படவில்லை என்பதுதான் பேராச்சரியமான ஒன்றாகும்.

No comments