“அரசியலில் பெண்கள்” தொடர்பான கலந்துரையாடலில் NFGG யின் உறுப்பினரும் பங்கேற்பு


(NFGGஊடகப் பிரிவு)

கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் “அரசியலில் பெண்கள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இதனை ஐக்கிய இராச்சியத்தின் “சீவிநிங்” புலமைப்பரிசில் பட்டதாரிகளின் இலங்கைக்கான ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் என்.எப்.ஜீ.ஜீ யின் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் றிஸ்ரினா இஸ்மாலெப்பே அவர்களும் வளவாளராக கலந்து கொண்டார்.
2018 பெப்ரவரியில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது 25% பெண்களுக்கான ஒதுக்கீடு வழங்கப்பட்டதன் ஊடாக பெண்களின் அரசியல் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சவால்கள் குறித்தே இங்கு கலந்துரையாடப்பட்டன.
பெண்கள் தொடர்பான ஆய்வாளரும் செயற்பாட்டளருமான சட்டதரணி தியாகி பியதாச அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் முன்னாள் சிலாபம் நகரசபை உறுப்பினர் ஜீவனி காரியவசம், என்.எப்.ஜீ.ஜீ யின் அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் றிஸ்ரினா இஸ்மாலெப்பே, பெண்கள் அபிவிருத்தி செயற்பாட்டாளர் மைத்ரி ராஜசிங்கம், ஆய்வாளரும் பெண்ணியல் செயற்பாட்டாளருமான சூலணி கொடிகார ஆகியோரும் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலின் போது அரசியலில் பெண்கள் பங்கேற்பினை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், விழிப்பூட்டல் நிகழ்வுகள், கொள்கைகள், தேர்தல் முறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், இவற்றின் போது எதிர்நோக்கிய சவால்கள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக 25% கோட்டா மூலம்  பெண் பிரதிநிதிகளை  உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்வதில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அலசப்பட்டன. மேலும் இக் கோட்டா முறை மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள  பெண் பிரதிநிதிகளால் எதிர்பார்க்கப்பட்ட விளைவுகள் மாற்றங்கள் அரசியலில் ஏற்பட்டுள்ளனவா? என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பட்டன.
இதன் போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்  றிஸ்ரினா இஸ்மாலெப்பே அவர்கள் தனது அரசியல் பிரவேசம் குறித்த அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொண்டார். தான் நேரடி அரசியலில் ஈடுபாடு கொள்ளாத ஒருவராக இருந்த நிலையில் தான் எவ்வாறு25% கோட்டா முறை மூலம்  அரசியலுக்குள் உள்வாங்கப்பட்டேன் என்பதை விளக்கினார்.
  

மேலும் 25 % கோட்டா என்பது பெண்கள்  நேரடி அரசியலில் பங்கேற்பதற்கான ஒரு ஆரம்பமே. இதில் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகளும் குறைபாடுகளும் உள்ளன. அவை படிப்படியாக நிவர்த்திக்கப்பட வேண்டும். மேலும் அரசியல் குறித்த பரவலான விழிப்புணர்வு பெண்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக அரசியல் அதிகாரத்தினூடாக மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள், உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படும் பெண்களுக்கு போதிய அறிவுரைகள் பயிற்சிகள் வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தனது உரையில் எடுத்துக் கூறினார்.
அரசியல் அதிகாரத்தினூடாக மக்கள் சிறந்த சேவைகளை பெற வேண்டுமெனில் ஆண், பெண் என்பதற்கு அப்பால் தகுதியான தரமானவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்து கொள்ள  வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் சபையோரின் கேள்விகளுக்கும் வளவாளர்கள் பதில்களை அளித்தனர்.  
இந்நிகழ்வானது தெற்காசிய நாடுகளின் பெண்கள் தினத்தை முன்னிட்டே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments