மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப் போட்டமையே இன்றைய முரண்பாடுகளுக்குக் காரணம்! – முன்னாள் முதலமைச்சர் நஸீர்எம்.எஸ்.எம்.நவாஸ்தீன் 

2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி கிழக்கு மாகாண சபை உட்பட மூன்று மாகாண சபைகள் கலைக்கப்பட்டன. எனினும், அதற்கு முன்னராக செப்டெம்பர் 21ஆம் திகதி நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு அப்பால் சட்ட நகல் ஒன்று அன்றைய பிரதமர் ரணில் விக்ரமசிங்காவினால் கொண்டு வரப்பட்டது. அது பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோதாவில் மாகாண சபை தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டும் என்ற விடயத்தை முன்னிறுத்தி கொண்டு வரப்பட்டது. அதன் பின்னணி ஒரு சதி முயற்சியாகவே சிறுபான்மை மக்களால் உணரப்பட்டது. காரணம் நாடாளுமன்ற விதிமுறைகளை கவனத்தில்கொள்ளாது இது அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டமையும் இதற்கு கைதூக்கி ஆதரவு தெரிவித்தவர்கள் ஜனநாயக மரபுகளைக் கடைப் பிடிக்க தவறியமையையும் சொல்லாம்.” இவ்வாறு  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


இன்றைய அரசியல் நிலைவரம் குறித்து  அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“தத்தமது கட்சிகளின் வெற்றிகளைக் கருத்தில்கொண்டு செயற்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் விகிதாசார ரீதியாக சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவத்தை கருவறுக்கும் செயற்பாட்டுக்கே முன்னுரிமை அளித்தனர். அதுவே இந்தச் செயற்பாட்டின் தார்ப்பரியமாக இருந்தது.

ஜனநாயகம், நாடாளுமன்ற பாரம்பரியம், அரசமைப்பு முறைமை என்பன குறித்து இன்று பெரும் வாய்ப்பேச்சுகளை நடத்துபவர்கள், தம்மை சிறந்த ஜனநாயகவாதிகளாகக் காட்டிக்கொள்ள முற்படுபவர்கள் அன்று செய்தததை சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

முன் அறிவிப்பு செய்து நாடாளுமன்ற பாரம்பரிய முறைமைகளுக்கு உட்பட்டு உங்கள் தீர்மானங்களை நிறைவேற்றுங்கள்; அப்போதுதான் அதனை அங்கீகரிக்க முடியும் என்று கூறிவரும் ஜனாதிபதியும் அன்று கண்ணை மூடி பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே உண்மையாகும்.

தேர்தல் முறைமை மாற்றம் என்பதன் ஊடாக எல்லை நிர்ணயத்தைக் கொண்டு வந்து அதனூடாக நாடெங்கிலும் செறிந்து வாழும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை சிதைக்க முற்பட்ட நடவடிக்கையை நாம் எளிதில் மறந்திட முடியாது.

கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் நான் ஐனாதிபதியையும் பிரதமரையும் நேரில் சந்தித்து காலமாதம் இன்றி தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். எனினும், அது திட்டமிட்டு பிற்போடப்பட்டு வந்தது. இதன் விளைவே நல்லாட்சி அரசுக்குள் ஏற்பட்ட குழப்பத்திற்கும் – இன்றைய முரண்பாட்டு நிலைக்கும் காரணமாகும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை கலப்பு முறையில் நடத்தி அதனூடாக கிடைக்கப் பெற்ற பெறுபேறுகள் இன்று வரை பெரும் குழப்ப நிலையை உருவாக்கியிருக்கின்றன என்பதே யதார்த்தமாகும்.

இந்நிலையில், மாகாண சபைத் தேர்தலையும் கலப்பு முறையில் நடத்த வேண்டும் என்பதில் நல்லாட்சி அரசு கொண்டிருந்த தீ முட்டல் நிலை இன்று அவர்களையும் அந்தத் தீ சட்டிக்குள் தள்ளியுள்ளது. இங்குதான் நாம் சற்று சிந்திக்கவேண்டும். எம்மைவிட பெரிய சக்தி இருக்கின்றது. அது தகுந்த பாடம் வழங்கும் என்பது.

மக்கள் நலன்களைப் பற்றி சிந்திக்காது தத்தமது கட்சி நலன்கள் குறித்து சிந்திக்கும் அரசியல் தலைமைகளின் உண்மையான முகம் இப்போது மக்களுக்குத் தெரியவந்திருக்கின்றது.

எனவே, எமது மக்கள் இக்கால கட்டத்தை சரிவரப் புரிந்துகொண்டு அதற்கான வியூகங்களை வகுத்து செயற்பட முன்வரவேண்டும்” என்று  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

No comments