கேலிக்குள்ளாகும் அரசியல் சாசனம்
நல்லாட்சியை கவிழ்ப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டியிலிருந்து கொழும்புக்கு ஒரு நடைபவணி நடத்தினார். பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே எங்களது மொட்டுச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாவார் என பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவிலே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக வில்லை. 

பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவிலிருந்து இறக்க நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்தனர். ஐக்கிய தேசியக் கட்சி பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்குவார்கள் என நம்பியிருந்தனர். அதன் விளைவு சில அமைச்சர்கள் பதவி துறக்கவேண்டியிருந்தது. ஆனால் ரணில் விக்ரமசிங்கவை வீழ்த்த முடியவில்லை.

பின்னர் கொழும்பு முற்றுகை இடம்பெற்றது. கொழும்புக்கு வந்து முற்றுகை இடுங்கள், மறுநாள் மஹிந்த ஜனாதிபதியாவார் என நாட்டு மக்களுக்கு பிரச்சாரம் செய்து சில ஆயிரம் மக்களை வரவழைத்திருந்தனர். ஆனால் அந்தப் போராட்டம் ஒரு பால்பக்கட்டுக்கு நின்றுபிடிக்க இயலாமல் அன்று இரவோடிரவாக கலைந்து சென்றது. இந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்கான முயற்சி பெரும் கரியை மதிந்தவுக்குப் பூசியது.

இவ்வாறு மஹிந்தவும் இந்த வருடத்திற்குள் ஆட்சியைப் பிடிப்பேன். வாற பௌர்ணமிக்குள் ஆட்சியைப் பிடிப்பேன் என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார். 'வண்ணான் முதலைக் கதையிலே முதலை வருகிறது, முதலை வருகிறது என மக்களை வண்ணான் ஏமாற்றியிருந்தாலும், இறுதியிலே முதலை வந்துவிட்டது.'அதுபோல் மஹிந்த ஆட்சியைப் பிடிப்பேன், ஆட்சியைப் பிடிப்பேன் என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தாலும் இறுதியில் பிடித்துவிட்டார். கதையிலும் முதலை இறுதியில் வந்தது போல் மஹிந்தவும் ஆட்சியைப் பிடித்துவிட்டார்.

இன்று இரவோடிரவாக மஹிந்தவும் ஆட்சியில் அமர்த்தப்பட்டுவிட்டார். மைத்திரிபால சிறிசேனவும்தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தை வைத்து அதனைச் செய்ததாகக் கூறுகின்றார். ஆனால் ரணில் விக்ரமசிங்க தன்னை அகற்றுவதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரமில்லையென்று கூறி தான் இன்னும் பிரதமர்தான் எனக் கூறுகின்றார். இதனால் எமது நாட்டில் மாத்திரமல்ல, உலக அரங்கிலும் இது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது.

பாராளுமன்றத்திலே அதிக செல்வாக்குமிக்கவர் என ஜனாதிபதி கருதுகின்ற ஒருவரை பிரதமராக நியமிக்கமுடியும் என அரசியலமைப்பு கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷவை தான் பாராளுமன்றத்தில் அதிக செல்வாக்குள்ளவராகத் தான் கருதி பிரதமராக நியமித்ததாக ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறு ஜனாதிபதி மஹிந்தவை பாராளுமன்றத்தில் அதிக செல்வாக்குப் பெற்றவர் என கருதியிருந்தால் சென்ற திங்கட்கிழமை பாராளுமன்றம் கூடுவதற்கு ஜனாதிபதிஅனுமதித்திருப்பார். அவ்வாறில்லாமல் எதிர்வரும் 16ம் திகதிவரை பாராளுமன்றக் கூட்டத் தொடரை தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்திவைத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்குபாராளுமன்றத்தில் அதிக செல்வாக்கில்லையென்று ஜனாதிபதி கருதியதனால்தான் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளார். மஹிந்த பாராளுமன்றத்தில் செல்வாக்குள்ளவர் என்று ஜனாதிபதி கருதவில்லை என்பதற்கு இது மிகப் பெரிய சான்றாகும்.

ஜனாதிபதி ஒருவரை செல்வாக்குமிக்கவர் எனக் கருதும் விடயம் அவருடைய மனதோடு சம்பந்தப்பட்ட விடயம். நான் உண்மையிலேயே செல்வாக்கு உள்ளவர் என்றுதான் மஹிந்தவைக் கருதினேன் என அவர் கூறினால் நாம் நம்பத்தான் வேண்டும். ஆனால் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை ஒத்திவைத்ததன் மூலம் மஹிந்தவுக்கு இதுவரைக்கும் பாராளுமன்றத்தில் செல்வாக்கில்லை என்றுதான் தன்மனதில் நினைத்ததை செயலில் காட்டுகின்றார். இனிமேல்தான் மஹிந்த தனது பிரதமர் அதிகாரத்தை பாவித்து தனது செல்வாக்கைப் பாராளுமன்றத்திலே அதிகரித்துக் கொள்ளட்டும் என மஹிந்தவுக்கு 21நாட்கள் கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றார்.

ஒரு வாரத்திற்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்திருந்தாலும் பரவாயில்லை. 03வாரத்திற்கு ஒத்திவைத்ததென்பது மஹிந்தவின் செல்வாக்கு பாராளுமன்றத்திலே மிக மோசமாகவுள்ளது. அந்த செல்வாக்கை அதிகரிக்க ஒருவாரம் போதாது. 03வாரம் வேண்டும். அந்தளவிற்கு பாராளுமன்றத்திலே மஹிந்தவின் செல்வாக்கு கீழ்நிலையிலே உள்ளது என மைத்திரிபால சிறிசேன கருதியுள்ளது புலப்படுகின்றது. இவ்வளவு மோசமான செல்வாக்குள்ளவர் என மைத்திரியால் கருதப்பட்ட மஹிந்தவைப் பிரதமராக நியமித்தது என்பது வேண்டுமென்றே ஜனாதிபதி அரசியலமைப்பை மீறினார் என்றே கொள்ள வேண்டும்.

தேசிய அரசாங்கத்திலிருந்து பொதுஜன ஐக்கிய முன்னணி விலகியதுடன் ரணில் தனது பதவியை தானாக இழந்தார் என்று இவர்கள் கூறுவதை ஒருவிவாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும், மீண்டும் ரணிலையே மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்து பாராளுமன்றத்தில் பெரும்பாண்மையை நிலைநாட்ட கோரியிருக்கவேண்டும். ரணிலினால் அவ்வாறு பெரும்பாண்மையை காட்டமுடியாமல் போனால்தான் மஹிந்தவிடம் பெரும்பாண்மையைக் காட்ட கோரவேண்டும்.

தேசிய அரசாங்கத்திலிருந்து பொதுஜன ஐக்கிய முன்னணி விலகியதும் பிரதமர் ரணிலும் ஏனைய அமைச்சர்களும் தானாக பதவி இழந்தனர் என இவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறு ரணில் பிரதமர் பதவியை தானாக இழந்திருந்தால், பின்னர் ஏன் மைத்திரி ரணிலை பிரதமர் பதவியிலிருந்து அகற்றியதாக ரணிலுக்கு கடிதம் எழுதவேண்டும்? இவர்களின் கருத்தின்படி பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளர், மஹிந்த அமரவீர ஜனாதிபதியிடம் தாங்கள் தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகியதாக கடிதம் கொடுத்த மறுகணமே, ரணில் பிரதமர் பதவியை இழந்துவிட்டார். ஏற்கனவே பதவி இழந்திருக்கும் ரணிலுக்கு மீண்டும் பதவியை நிறுத்தி கடிதம் வழங்கியது சிறுபிள்ளைத்தனமானது. மைத்திரியின் செயலானது 'புள்ளக்கிளைகளின் விளையாட்டுப்போல' இருக்கிறது. 

பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சில விசித்திரமான காரணங்களை குறிப்பிட்டிருந்தார். 'இடைக்கால வரவு செலவுத் திட்டம் தயாரிக்க வேண்டியிருப்பதாலும், ஆட்சிமாறியுள்ளபடியால் பாராளுமன்ற உறுப்பினர்களின் இருக்கைகளை புதியமுறையில் ஒழுங்குபடுத்தவேண்டியிருப்பதாலும் கால அவகாசம் தேவைப்படுவதால் பாராளுமன்றத்தை ஒத்திவைத்துள்ளோம்.'என தினேஸ் குணவர்த்தன விளக்கமளித்துள்ளார்.

ஆளும் கட்சியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கதிரைகளை எதிர்க்கட்சியின் பக்கம் ஒதுக்குவதற்கும், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்குரிய கதிரைகளை ஆளும் கட்சியின் பக்கம் ஒதுக்குவதற்கும் 03வாரகாலமா தேவைப்படும்? சபாநாயகரும் பாராளுமன்ற செயலாளர் நாயகமும் அவரின் கீழ் இயங்கும் பாராளுமன்ற ஊழியர்களும் அவ்வளவு வேகம் குறைந்தவர்களாகவும், மந்தப்புத்தி உள்ளவர்களாகவும் இருக்கின்றார்கள்? 225கதிரைகளை ஒதுக்குவதற்கு இவர்களுக்கு 21நாட்களா தேவைப்படும்? நாலைந்து மணித்தியாலங்களில் இவற்றை செய்திருக்க முடியாதா? கதிரைகளை ஒதுக்குவதற்காக ஒரு ஜனாதிபதி தனது நிறைவேற்கு அதிகாரத்தை பயன்படுத்தி பாராளுமன்ற கூட்டத் தொடரையே ஒத்திவைத்தது விசித்திரமாக இருக்கின்றது. கதிரைகளை ஒதுக்குவது ஜனாதிபதிக்குரிய வேலையில்லை. அது சபாநாயகருடைய வேலைதானே. சபாநாயகர் பாராளுமன்றத்தைக் கூட்ட எப்போதும் தயாராகத்தானே இருக்கின்றார்.

தினேஸ் கூறிய மற்றைய காரணம் இடைக்கால வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்காக பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறியுள்ளார். இலங்கை வரலாற்றிலே பாராளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது இதுதான் முதல்தடவை. வரவு செலவுத் திட்டத்திற்கும், பாராளுமன்றத்திற்கும் என்ன சம்பந்தம்? பாராளுமன்ற உறுப்பினர்கள் 225பேரும் சேர்ந்து 24மணிநேரமும் மினக்கட்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது? இல்லையே. நிதியமைச்சர் மாத்திரம் தானே வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது. பாராளுமன்றத்தை ஒத்திவைத்தா வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது? வரவு செலவுத் திட்டம் தயார் என்றால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெற வேண்டியதுதானே? மாறாக நிதியமைச்சர் பாராளுமன்றத்திற்குள்ளே அமர்ந்து கொண்டு பாராளுமன்றத்தை மூடிவிட்டு, பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரையும் உள்ளே அனுமதிக்காமல் 03வார காலத்திற்கு பாராளுமன்றத்தை மூடிவிட்டா வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பார்கள்?நாடு பிரதமர் யார் என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. இப்போது வரவு செலவு திட்டமா முக்கியம்?. வரவு செலவுத் திட்டம் தயாராகும் வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதற்கு பாராளுமன்றத்திற்கு வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பது மட்டும் வேலை யில்லையே. பாராளுமன்றத்திற்கு இருக்கும்; ஆயிரம் கடமைகளில் வரவு செலவுத் திட்டத்தை அங்கீகரிப்பதுவும் ஒரு கடமை.

சென்ற திங்கட்கிழமை மகசோன்பலயக்கவின் தலைவரும், கண்டி திகன வன்செயலின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்படும் அமித் வீரசிங்கவும், அவரது சகபாடிகளும் அவசர அவசரமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதன் மூலம் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு சொல்லவருகின்ற செய்தி என்ன? 26.10.2018ம் திகதிவெள்ளிக்கிழமை சுமார் 7.30மணியளவில் பொது ஜன ஐக்கிய முன்னணி தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய செய்தியும், மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப்பிரமாணம் எடுத்தார் என்ற செய்தியும் ஒன்றாகவே வெளியிடப்பட்டது. 

அன்றிரவே இந்த இரண்டு செய்தியோடு மூன்றாவது செய்தியாக திகன கலவரத்தின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் அமித் வீரசிங்கவும் அவரது சகபாடிகளும் விடுவிக்கப்பட்டார்கள் என்ற செய்தியும் வெளியாகி இருக்கும். ஆனால் அன்று இரவு என்பதாலும், மறுநாள் சனிக்கிழமை என்பதாலும், அதற்கடுத்தநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் பொறுத்திருந்து எப்போது திங்கட்கிழமை வரும் எனக் காத்திருந்து அமித் வீரசிங்கவையும், அவரது சகபாடிகளையும் விடுவித்திருக்கின்றார்கள். இதனால்தான் மூன்று செய்திகளும் ஒன்றாக வெளியாகாமல் 03நாட்கள் பிந்தி இவர்கள் விடுவிக்கப்பட்ட செய்தி வந்தது.

மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் 2015 ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு ஏற்ப நல்லாட்சியை ஏற்படுத்த ரணில் விக்ரமசிங்க தவறிவிட்டார். அதனாலேயே அவரை நீக்கினேன்' எனக் குறிப்பிட்டார். மக்கள் பிரதானமாக மஹிந்த ராஜபக்ஷவைத் தோற்கடித்து குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் ஆணையை வழங்கினார்கள். ஆனால் மஹிந்தவை மீண்டும் கொண்டு வந்து மக்கள் ஆணையை மீறியிருப்பது மைத்திரிபால சிறிசேனதான்.

மேலும் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்மக்கள் வங்கியின் பிணைமுறி மீதான மோசடியைப் புரிந்தமைக்காக ரணிலை நீக்கினேன்'என்று மைத்திரிபால சிறிசேன கூறினார். பிணைமுறி விவகாரத்தில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமாச் செய்தார். இதில் தொடர்புபட்டிருந்த பேப்பர்பசுவல் ட்ரசரீ நிறுவனப் பணிப்பாளர் அர்ஜுன்அலோசியசும், அரவது சகபாடியும் பல மாதங்களாக கைது செய்யப்பட்டு சிறையிலே வாடிக்கொண்டிருக்கின்றார்கள். மோசடி செய்யப்பட்டதாகக் கருதப்படும் 1100கோடிக்குபதிலாக 1200கோடி ரூபா இந் நிறுவனத்திற்குரிய பணம் மத்திய வங்கியில் முடக்கப்பட்டுள்ளது. பணமும் கிடைக்கப்பெற்றுவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் தண்டனையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 

இவ்வாறு நிவர்த்தி பண்ணப்பட்டட இந்த மோசடியைப் பேசிப் பேசி ஜனாதிபதி காலத்தை வீணடிக்காமல் இன்னும் தீர்வு காணப்படவேண்டிய மோசடிகள் மஹிந்தவிடம் இருக்கின்றது. மஹிந்தவின் பல ஆயிரம் கோடிப்பணம் துபாயிலும் பாடசாலைப் புத்தகங்களிலே பெயர் காணப்படாத நாடான சீசல்ஸ் நாட்டிலும் தேங்கிக்கிடப்பதாக ஜனாதிபதியினால் கூறப்பட்டது.

ஸ்ரீலங்கன் விமான சேவையிலேயே பல ஆயிரம் கோடி மோசடி, தந்தையினுடைய ஞாபகார்த்த மண்டபத்திலேயே மோசடி, தேர்தலின் போது பாவிக்கப்பட்ட ஊவுடீ பஸ் கொடுப்பனவில் மோசடி,வரவு செலவு திட்டதிலே ஜனாதிபதிக்கென 10ஆயிரம் கோடி ஒதுக்கிஎடுத்துஅப் பணத்திலே மோசடியும், வீண்விரயமும், ஹோட்டல் கட்டுவதில் மோசடி போன்ற மோசடி புரிந்தவர்களிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு ரணில் பிணைமுறியிலே மோசடி புரிந்தவர் என ஜனாதிபதி பேசுவது ஒரு துளி சாராயம் குடித்தவனைப் பார்த்து முடாப்பானை நிறைய கள்ளுக் குடித்தவன் கேட்டானாம் 'என்னடா வெறிகாரா'என்று?

என்னதான் நல்லாட்சி என்றாலும் ஊழல் மோசடியை எடுத்த உடனேயே முற்றாகக் களைவதென்பது ஒரு கஸ்டமான விடயம். ஏனென்றால் ஊழல், மோசடி நிறைந்தது மஹிந்தவின் ஆட்சி என மைத்திரிபால சிறிசேனவினால் வர்ணிக்கப்பட்ட ஆட்சியிலே இருந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த அணியிலிருந்து மாறிவந்து இந்த நல்லாட்சியை அமைத்தார்கள். ஜனாதிபதியால் மிக மோசமான ஆட்சி என்று வர்ணிக்கப்பட்ட ஆட்சியிலும் இவர்கள்தான் இருந்தார்கள். நல்லாட்சி என மிக நன்றாக வர்ணிக்கப்படுகின்ற இந்த ஆட்சியிலும் இவர்கள்தான் அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நல்லாட்சியில் இருப்பவர்கள் எல்லோரும் நல்ல சிந்தனையுள்ள உத்தமர்கள் அல்ல. அதிகமானவர்கள் மோசமான இடத்திலிருந்து வந்தவர்கள். எனவே இவர்களிடமிருந்து நூறுவீதம் நல்லாட்சியை எதிர்பார்க்கமுடியாது. படிப்படியாகத்தான் நல்ல நிலைமைக்கு கொண்டுவரமுடியும். எனவே ஒப்பீட்டளவில் யார் கூடுதலான மோசடிக்காரன், யார் குறைவான மோசடிக்காரன் என்ற அடிப்படையில் தான் நாங்கள் தீர்மானிக்கமுடியும். 100ரூபாவில், 90ரூபா களவெடுப்பவர் யார்,100ரூபாவில்,10 ரூபா களவெடுப்பவர் யார்? 90ரூபாவை களவெடுப்பவனை விட, 10ரூபாவைக் களவெடுப்பவன்; பறவாயில்லை. அவனை விட இவன் நல்லவன் என்ற முடிவுதான் நாங்கள் சொல்லமுடியும். எனவே ஒப்பீட்டளவிலே மஹிந்தவின் ஆட்சியை விட ரணிலின் ஆட்சியானது மேன்மையானது என்றுதான் நாங்கள்; ஆட்சியைக் கொண்டு செல்லவேண்டும்.10ரூபா களவெடுவத்தவரிடமிருந்து ஆட்சியைப் பறித்தால் ஒரு ரூபா களவெடுத்தவனிடம் கொடுக்கவேண்டுமே ஒழிய ஒருபோதும் 90ரூபா களவெடுத்தவனிடம் ஆட்சியை கொடுக்கக்கூடாது. 

நல்லாட்சி நிந்தனையிலே சிறுவயதிலிருந்து வளர்க்கப்பட்டவர்களைக் கொண்ட ஒரு பாராளுமன்றத்திலேயேதான் நல்லாட்சியை நூறுவீதம் எதிர்பார்க்கமுடியும். மோசமான மஹிந்த ஆட்சியில் இருந்த அதே பாராளுமன்ற உறுப்பினர்களை நல்லாட்சி என்ற போர்வைக்குள் வைத்துக் கொண்டு நூறுவீதம் நல்லாட்சியை ஏற்படுத்த முடியாது. இதனை மைத்திரிபால சிறிசேன உணரத்தவறிவிட்டார். இது புரியாமல் அவசரப்படுகின்றார். இவ்வாறு அவசரப்படக்கூடிய மைத்திரி எவ்வாறு நாட்டு மக்களுக்கு பொறுப்புக்கூறக் கூடிய ஜனாதிபதியாக இருக்கடியும்?

நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையிலே தன்னைக் கொல்ல சதிசெய்ததாகவும் அதிலே அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். சதித்திட்டமெல்லாம் நிறைவேறுவதில்லை. சில திட்டங்கள் திட்டமிடப்பட்ட ஆரம்ப கட்டத்திலேயே கைவிடப்படுகின்றன. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியானதிற்கு பின்னர் ஒரு புலி உறுப்பினர் மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய அவரின் பாதுகாப்பு வலயத்தினுள்ளே சென்று துப்பாக்கியும், கையுமாக மாட்டிக் கொண்டார். அப்படிப்பட்டவனையே பின்னர் மன்னித்தவர் மைத்திரிபால சிறிசேன. அவ்வாறு இந்தக் கொலைத் திட்டத்தையும் நாட்டு நலனுக்காக மன்னித்து அரசைக் கொண்டு செல்லவேண்டும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலிலே, தான் தோற்று இருந்தால் மஹிந்த தன்னை 08அடி ஆழத்தின் கீழ் கொன்று புதைத்திருப்பார் எனக் கூறியவர் மைத்திரிபால சிறிசேன. தற்போது அவ்வாறான கொலைகாரனுக்கு ஆட்சி அதிகாரங்களை வழங்கியிருப்பது தவறானது ஆகும். தன்னுடைய உயிரையும்; துச்சமென மதித்து நாட்டு மக்களைப் பாதுகாக்க கடந்த ஜனாதிபதித் தேர்தலில் குதித்த மைத்திரிபால சிறிசேன தற்போது உயிருக்குப் பயந்து மஹிந்தவிடம் ஆட்சியைக் கொடுத்தேன் என்பது கோழைத்தனமானது. மைத்திரி உயிருக்குப் பயந்தவர் என்று எடுத்துக் கொள்வதா? அல்லது மைத்திரி உயிருக்கு துணிந்தவர் என்று நாங்கள் எடுத்துக் கொள்வதா? 

தன்னைக் கொல்லஏதாவது சதித்திட்டம் இடம் பெற்றிருந்தால் அதனைத் தீட்டிய அமைச்சரை எச்சரித்துவிட்டு தன்னுடைய பாதுகாப்பில் குறையிருந்தால் அதனை சீர் செய்துவிட்டு மக்கள் வழங்கிய ஆணையை மதித்து ரணிலின் அரசை வழிநடத்தி சென்றிருக்க வேண்டும். உயிர் இருக்கும், உயிர் போகும் நாம் அழிந்தாலும் நாடு பாதுகாக்கப்பட வேண்டும். 

முஸ்லிம் கட்சிகளும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த சந்தர்ப்பத்திலே நிதானமாக சிந்திக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்திலே எவ்வாறு முஸ்லிம் சமூகம் இன்னல் பட்டது, அவமானப்பட்டது என்பதை சீர்தூக்கிப்பார்க்க வேண்டும். ரணிலின் ஆட்சி காலத்திலும் இவை இடம்பெற்றன. ஆனால் மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்கள் மிகவும் அவமானப்படுத்தப்பட்டார்கள். முஸ்லிம்கள் தொப்பி அணிந்து கொண்டு வீதியில் செல்லும்போது தொப்பி கழற்றப்பட்டு அவமானப்பட்டார்கள். முஸ்லிம் பெண்கள் பர்தா கழட்டப்பட்டு தெருவிலே அவமானப்பட்டார்கள். பன்றியிலே அல்லாஹ் என எழுதப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள். பள்ளிவாயலிலே பன்றியுடைய இரத்தம், தலைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்க முடியாது. சவூதிக்குச் சென்றுவிடுங்கள். அதுதான் உங்களது தாயகம் எனக் கூறி இந்த நாட்டின் சொந்த வித்துக்களான முஸ்லிம்களின் பிரஜா உரிமையும், பிறப்புரிமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டது.

இந்த மாதிரியான மிகக் கேவலமான அவமானங்கள் ரணில் ஆட்சியிலே இடம் பெறவில்லை. ஆனால் சொத்து இழப்புக்கள், உயிரிழப்புக்கள் ரணிலின் ஆட்சியில் ஏற்பட்டது உண்மை. ஆனால் மேற்சொன்ன அவமானங்கள் ரணிலின் ஆட்சியிலே இடம்பெறவில்லை. அப்படி ஏற்பட்டிருந்தாலும் ஒப்பீட்டளவில் குறைவு. ரணிலின் ஆட்சியிலே வன்செயலுக்கு காரணமாகவிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள். திகன வன்செயலின் பிரதான சூத்திரதாரி எனக் கருதப்பட்ட மஹசோன் பலயக அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க போன்றோர் கைதுசெய்யப்பட்டனர். பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். முஸ்லிம்களின் பிரச்சனையை காது கொடுத்து கேட்டு ரணில் முடிந்தளவு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால் முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயல்கள், அவமானங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் மஹிந்தவிடம் போய்; சொன்னநேரமெல்லாம் 'சின்ன, சின்னப் பிரச்சனைகளை பெரிது படுத்தவேண்டாம்' என முஸ்லிம் தலைவர்களிடம் மஹிந்த மிக கவனயீனமாக பதில்களை வழங்கினார்.

முஸ்லிம் தலைவர்கள் மஹிந்தவிடம் எவ்வளவுதான் முஸ்லிம்களின் பிரச்சனைகளை எடுத்துரைத்த போதும் வோக்மேன் பூட்டியவனின் காதில் ஊதிய சங்காக பலனற்றுப் போனது. எனவே மஹிந்தவின் காலத்தில் நடைபெற்ற வன்செயல்களையும், ரணிலின் காலத்தில் ஏற்பட்ட வன்செயல்களின் அளவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்து ரணிலுக்கு தங்களின் ஆதரவினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வழங்கவேண்டும். அதில் எந்தத்தவறும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இழைத்துவிடக் கூடாது.

தற்போது ஏற்பட்டுள்ள ரணில், மஹிந்த பிரச்சனையில் ரணிலின் ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களை மஹிந்த பணம் கொடுத்து தனது பக்கம் ஈர்த்துக் கொள்வார் என்ற கதை உலாவுகின்றது. மஹிந்தவின் துபாயிலுள்ள பணம் சீசல்ஸ்யிலுள்ள பணம் எல்லாம் இதற்கு செலவழிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா மஹிந்தவை ஆட்சிக்குக் கொண்டுவர பெருமளவு பணம் செலவழிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனா தனது அதிகாரத்தை இலங்கையிலேநிலைநிறுத்தி இந்து சமுத்திரப் பிராந்தியத்திலே தனது ஆதிக்கத்தை அதிகரிப்பதற்கு ஒருபோதும் அமெரிக்காவோ, ஐரோப்பாவோ விரும்பப்போவதில்லை. இந்தியாவும் இதனை விரும்பப்போவதில்லை. எனவே சீனா மஹிந்தவுக்கு பணம் செலவழித்தால் அமெரிக்கா, இந்தியா போன்ற ஜனநாயகத்தை விரும்பும் நாடுகள் ரணிலுக்கு பணம் செலவழிப்பார்கள். அதிமாத்திரமல்லாமல் கடைசியாக ரணிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர். எனவே பணம்தான் பிரதமரைத் தீர்மாணிக்கும் என்றிருந்தால் பண விவகாரத்திலும் ரணில் பலவீனமாக இருப்பார் என்று சொல்வதற்கில்லை. 

பிரதமரின் வாஸ்தலமான அலரி மாளிகையும் இப்போது ஒரு விவாதப் பொருளாகியுள்ளது. ரணில் அலரிமாளிகையை விட்டு வெளியேற மறுத்துவருவது இன்று சர்ச்சையாகவுள்ளது. மஹிந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் முடிவுகள் வெளிவர முன்னரே அதிகாலை வேளை கௌரவமாக அலரி மாளிகையை விட்டு வெளியேறி தனது வெதமுல்லையிலுள்ள கால்ட்டன் இல்லத்தை அடைந்து அங்கு யன்னலில் ஏறி ஆதரவாளர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். இதுமாதிரி ரணிலும் ஜென்டில்மேனாக அலறி மாளிகையைவிட்டு வெளியேற வேண்டுமென மஹிந்தவின் ஆட்கள் கூறுகின்றனர்.

மஹிந்த தோல்வியடைந்த பின்னர் தானே அலறிமாளிகையை விட்டு வெளியேறினார். ஆனால் ரணில் இன்னும் தோல்வியடையவில்லையே. பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தினால்தானே ரணில் தோல்லியடைய முடியும் அல்லது வெற்றிபெறமுடியும்? காத்திரப் பிரகாரம் எமது நாட்டிற்கு துரதிஸ்டமான எதிர்காலம் இருந்து ரணில் பாராளுமன்ற வாக்கெடுப்பிலே தோல்வியைத் தழுவுவாராக இருந்தால் அவர் பாராளுமன்றத்திலிருந்து நேரடியாக தனது சொந்த வீட்டுக்குப் போவாரே ஒழிய மீண்டும் அலறி மாளிகைக்கு செல்லமாட்டார்.  மஹிந்தவைவிட ஆயிரம் மடங்கு ரணில் ஒரு ஜெண்டில்மேன். ஆனால் ரணில் அலறி மாளிகைக்குள்ளிலிருந்து முடங்கிக் கிடக்காமல் தனக்கு பாராளுமன்றத்தில் உள்ள செல்வாக்கை அதிகரிப்பதற்காக அலறி மாளிகையை விட்டு வெளியேறி துடிப்புடன் செயற்படவேண்டும்.அலறி மாளிகையை ரணில் பெரிதாக தூக்கிப்பிடிக்கத்தேவையில்லை. அலறி மாளிகை ஒரு அதிகாரமில்லை. அது ஒரு கட்டிடம்தான். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்சொன்ன காரணங்களினால்தான் பிரதமர் ரணிலை அகற்றினேன் எனக் குறிப்பிட்டாலும் இதற்கு ஓர் உள்வேலைத்திட்டம் (ஹைடிங் அஜந்தா)ஒன்று இருக்கும். அதுதான் அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த, மைத்திரியை ஜனாதிபதியாக்குவது. எனவே எதிர்வரும் ஜனவரிமாதம் 10ம் திகதியிலிருந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு எந்த நிமிடமும் ஜனாதிபதி தேர்தலை நடாத்தும் அதிகாரம் கிடைத்துவிடும். எனவே தற்போது தனக்கும், மஹிந்தவுக்கும் உள்ள உறவில் நாள் செல்லச் செல்ல விரிசல் ஏற்படும் என்பதால் ஜனாதிபதியின் காலம் 05வருடம் முடியும்வரை காத்திராமல் கூடிய விரையில் ஜனாதிபதி தேர்தலை நடாத்தவே மைத்திரி விரும்புவார். எனவே மஹிந்த மைத்திரி ஆட்சி ஆகக் கூடியது 03மாதகாலத்திற்கே இருக்கப்போகின்றது. இந்த 03மாத காலத்திற்கு முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் மஹிந்த தரப்பிற்கு கட்சி தாவி சந்தர்ப்பவாத அரசியல் செய்யத் தேலையில்லை. வெற்றியோ, தோல்வியோ ஒரே தரப்பில் இருந்து கொள்வதுதான் சிறந்தது. அப்போதுதான் முஸ்லிம் சமூகம் தங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை மதிக்கும். அதேபோல இந்த நாடும் முஸ்லிம் சமூகத்தை மதிக்கும்.

ஒரு தடவை மாத்திரம் தான் ஜனாதிபதியாக இருப்பேன் என்று கூறி தனது நிறைவேற்று அதிகாரங்களைக் குறைக்கும் அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்து இரண்டு நாட்கள் தண்ணீர் சாப்பாடு இல்லாமல் தனது நிறைவேற்று அதிகாரத்தை பாராளுமன்றம் குறைப்பதைப் பார்த்துவிட்டுச் சென்ற மைத்திரி, தற்போது மீண்டும் ஜனாதிபதி ஆக எல்லாவிதமான கைங்கரியங்களையும் அடிமட்டத்திற்கு இறங்கி செய்வது வியப்பாக இருக்கின்றது. நிறைவேற்று அதிகாரம் தனக்கிருந்தாலும் அதனை ஒருபோதும் பிரயோகிக்கமாட்டேன் என்று கூறிய ஜனாதிபதி இன்று தனது நிறைவேற்று அதிகாரத்தை தன்னை இந்நாட்டு ஜனாதிபதியாக்கிய ரணிலுக்கு எதிராக பாவிப்பது எந்தவகையில் நன்றியுடையதாக இருக்கும். இன்று ரணிலை அதிகாரமில்லாமலாக்கி அவரின் பாதுகாப்பை எடுத்து,அவருக்கு கரண்ட், தண்ணீர் இல்லாமல் செய்வதற்கு தனது நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி பாவிக்கின்றார். நிறைவேற்று அதிகாரத்தைப் பாவிக்க எவ்வளவு சந்தர்ப்பம் மைத்திரிக்குக் கிடைத்தும் பாவிக்கவேண்டிய அந்த சந்தர்ப்பங்களில் பாவிக்காது ரணிலுக்கு அதனை பாவிப்பது என்பது மைத்திரியின் கோழைத்தனத்தை காட்டுகின்றது. மைத்திரிக்கு எதிரியார்,கருத்து முரண்பட்ட நண்பன் யார் என்று தெரியவில்லை. ரணில் ஒரு கருத்து முரண்பட்ட நண்பன். அவர் எதிரியல்ல. ஆனால் மஹிந்த எதிரி. இந்த துல்லியமான வித்தியாசத்தை மைத்திரி உணரவில்லை. நிறைவேற்று அதிகாரத்தை காட்டவேண்டியவர்களுக்கு காட்டவேண்டிய நேரத்தில் காட்டாமல் மைத்திரி இப்போது ரணிலின் மீது காட்டுகின்றார்.

எனவே அடுத்த பாராளுமன்றம் கூடும்போது முதல்வன் படத்தில் வருவதுபோல் மஹிந்த 'ஒருநாள் முதல்வரா' அல்லது நிரந்தர முதல்வரா என்பது தெரியும். ரணிலோ, மஹிந்தவோ யார் பிரதமராக வந்தாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது செய்து கொண்டிருக்கின்ற வேலைக்குரிய பிரதிபலனை கூடிய விரைவில் அனுபவிப்பார் என்பது உறுதி.

ஆக்கம்:
மர்சூக் அகமட்லெப்பை

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.