ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்தநாள்

(02.05.2018)

1951 செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு ஒரு சில மணித்தியாலங்களே கடந்திருந்த நிலையில் செப்டெம்பர் 03 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஜனனம் நிகழ்ந்தது. 

பல்லேவத்த கமராலலாகே அல்பிரட் சிறிசேன மற்றும் யாப்பா அப்புஹாமிலாகே தோன நந்தாவதி ஆகியோருக்கு மகனாக பிறந்த மைத்திரிபால சிறிசேன, 12 பேர்களை கொண்ட குடும்பத்தில் மூத்த புதல்வனாவார். அவரது தந்தை இரண்டாம் உலக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ வீரர் என்பதுடன், தாயார் பாடசாலை ஆசிரியருமாவார். 1940களின் இறுதியில் தனது குடும்ப உறுப்பினர்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களுக்கு டி.எஸ்.சேனாநாயக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்ட விளை நிலங்களில் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்காக பொலன்னறுவைக்கு குடிபெயர்ந்தார். 

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மைத்திரிபால சிறிசேன, பொலன்னறுவை தோப்பாவெவ மகா வித்தியாலயத்திலும் பொலன்னறுவை றோயல் கல்லூரியிலும் கல்வி கற்றார். மாணவ பருவத்திலேயே செயற்திறன்மிக்க கொமினியுஸ்ட் கட்சியின் அரசியல் செயற்பாடுகளுடன் இணைந்தமை அவரின் வாழ்வின் சிறப்பம்சமாக விளங்கியது. 

இடதுசாரி அரசியலின் ஊடாக அரசியல் பயிற்சி பெற்ற அவர், 1967 ஆகஸ்ட் மாதம் பொலன்னறுவை தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அணி செயலாளராக தனது அரசியல் வருகையை பதிவு செய்தார். 

1989 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற மைத்திரிபால சிறிசேன 1989 மார்ச் மாதம் 09 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 

1989 முதல் 1994 வரையான ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியின் போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய அவர், 1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் அதிக வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானதன் பின்னர் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக பதவியேற்றார். 

1997 ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி, பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக பதவி வகித்ததுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் துணை செயலாளர் பதவிக்கு தெரிவானார். 

2000 ஆம் ஆண்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 2001 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தெரிவானார். 

2004 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சபை முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன 2005 ஆம் ஆண்டு விவசாய, சுற்றாடல், மகாவலி அபிவிருத்தி அமைச்சராக தெரிவு செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டு விவசாய, நீர்ப்பாசன, மகாவலி சுற்றாடல் துறை அமைச்சராகவும் 2007 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றத்தின் போது விவசாய அபிவிருத்தி, கமநல சேவைகள் அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்ட அவர், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டார். 2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகவும் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

2010 ஆம் ஆண்டு சுகாதார அமைச்சராக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேன 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 06 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவானார். 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியின் எல்லையற்ற அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்கியமை, சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்தியமை, தகவல் அறியும் சட்டம், ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தல் உள்ளிட்ட நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கான விரிவான நிகழ்ச்சித் திட்டங்களும் மொரகஹகந்த – களுகங்கை பாரிய அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களும் அவரது வழிகாட்டலின் கீழ் கடந்த மூன்றரை வருட காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பொலன்னறுவையில் மிகவும் பின்தங்கிய கிராமம் ஒன்றில் விவசாய சமூகத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன அரசியலுடன் முன் எப்போதும் குடும்ப ரீதியான தொடர்புகளற்ற பொதுமக்கள் மத்தியில் இருந்து உருவான தலைவராவார். 

மிகவும் நட்புறவும் எளிமையும் கொண்ட மைத்திரிபால சிறிசேன இலங்கையின் கிராமிய பிரதேசத்தில் உள்ள பாரம்பரியங்களையும் பௌத்த பண்பாடுகளையும் சேவை மிகுந்த அர்ப்பணிப்பையும் கொண்டிருப்பதுடன் மக்கள் சேவை அவரது வாழ்க்கையில் முக்கிய பண்பாக விளங்குகிறது. 

மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட அரசியல் அனுபவத்தினைக்கொண்ட மைத்திரிபால சிறிசேன கடந்த ஒரு தசாப்த காலமாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கூட்டணி அரசாங்கம் பெற்ற அனைத்து தேர்தல் வெற்றிகளுக்கும் முக்கிய உந்துசக்தியாக விளங்கினார். 

மனிதாபிமான பண்புகளையும் தூய அரசியல் பண்புகளையும் கொண்டுள்ள மைத்திரிபால சிறிசேன மக்கள் போராட்டங்களுக்கும், நீதிக்காகவும் நேர்மைக்காகவும் குரல் கொடுக்கும் தலைவராகவும் இருந்து வருகிறார். அத்தோடு விவசாயிகளுக்காகவும் கிராமப்புற மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார். அநீதிக்கு எதிராக மைத்திரி ஆட்சி எனும் நீதியான ஆட்சியாக, ஊழலுக்கு எதிராக வெளிப்படைத் தன்மையுடன் செயற்பட்டுவரும் உண்மையான மானிட பண்புகளை மதிக்கின்ற, கலாசார, சமூக முறைமையின் ஊற்று என்று அவரைக் குறிப்பிட முடியும். 

இதேவேளை கோட்டை ஜனாதிபதி மாளிகை வளாகத்திலுள்ள அரச மரத்தைச் சுற்றி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தங்க வேலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் இன்று (03) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. 

ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது தனிப்பட்ட அன்பளிப்பின் பேரில் இந்த தங்க வேலி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்த அரச மரத்தை அண்மித்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள புத்தர் சிலையையும் ஜனாதிபதி இன்று திரைநீக்கம் செய்து வைத்தார். 

தனது 67 ஆவது பிறந்த தினத்தை சமய கிரியைகளுக்கு முன்னுரிமையளித்து கொண்டாடுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நேற்றும் இன்றும் ஜனாதிபதிக்கு ஆசீர்வாதம் வேண்டி நாட்டின் பல முக்கியமான விகாரைகளிலும் சமயஸ்தலங்களிலும் சமய கிரியைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ad

(ஜனாதிபதி ஊடக பிரிவு)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.