இஸ்லாம் குறித்த புரிந்துணர்வு நூல்கள் மூலம் சென்றடையட்டும் பிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானா

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சகோதர மதங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு இஸ்லாம் போதிக்கின்ற உண்மையான விடயங்கள் நூல்கள் மூலம் அவர்களை சென்றடைய வேண்டும் என்று பிரதி அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

லண்டன் வாழ் இலங்கைப் பிரஜையான ஹமீத் முனவ்வர் எழுதிய ‘விஞ்ஞானத்துக்கு அப்பால் ஓர் ஒளி’ எனும் நூலின் வெளியீட்டு விழா (11) சனிக்கிழமை கொழும்பு - 10, மாளிகாகந்தையிலுள்ள ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறியதாவது,

1400 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாம் கூறியவற்றை விஞ்ஞானிகள் 200, 300 வருடங்களுக்குள் ஆராய்ச்சி செய்து இஸ்லாம் கூறியவற்றை சரி என அடையாளம் கண்டு வருகின்றனர் என ஹமீத் முனவ்வர் எழுதிய நூலிலே தெட்டத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். நபி ஸல் அவர்களின் வாழ்வு கூறும் உண்மை என்னவெனில், ஆன்மீகமோ உனதுவியலோ அல்ல. அதைவிட, ஒரு மாமனிதராக இருந்து, இந்த உலகத்திலே வாழக்கூடிய வண்ணம் குர்ஆன் அடிப்படையில் அவர்கள் எமக்கு வாழ்ந்து காட்டினார்கள். அவ்வாறு அவர் நபி (ஸல்) அவர்களுடைய தொகுப்பிலே சிறப்பாக சொல்லி இருக்கின்றார்.

அறிய வேண்டிய அடிப்படையான பல விடயங்கள் எம் மத்தியில் இல்லை. அப்படியான விடயங்களைத் தொகுத்துத் தந்திருக்கும் இவ்வாறான நூற்களும் இப்போது இல்லை. இதனால் இந்தப் புத்தகம் ஒவ்வொரு வீட்டிலிலும் இருக்க வேண்டியது அவசியம்.

இந்தப் புத்தகத்தை சிங்கள மற்றும் ஆங்கில மொழி மாற்றி அச்சிடப்பட்டுள்ளதன் காரணமாக மாற்று மதத்தினருக்கு மத்தியில் உண்மையான புரிந்துணர்வினை ஏற்படுத்தலாம்.

இந்தப் புத்தகத்தை பல இடங்களிலும் பகிர்ந்தளிப்பதன் மூலமும் மாற்று மதங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்தி, இஸ்லாம் கூறுகின்ற உண்மையான விடயங்களை மாற்று மக்கள் மத்தியில் புரியவைப்பதற்கு ‘விஞ்ஞானத்திற்கு அப்பால் ஓர் ஒளி’ எனும் நூல் சிறந்தொரு நூல் எனவும் அவர் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் மௌலவி முபாறக், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் எம்.எம்.எம்.நாஜிம் மற்றும் சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிகேவா மற்றும் உலமாக்கள், கல்விமான்கள், நூலாசிரியரின் உறவினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

முதற் பிரதியை புரவலர் ஹாசிம் உமர், எழுத்தாளர் ஹமீட் முனவ்வரிடமிருந்து பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன்  மற்றும் ,முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் சாதிக் சிஹான் நன்றியுரையையும் நிகழ்த்தினர்.
No comments