தமிழ் மொழியை செம்மொழியாக்கிய தமிழக முதுசம்(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

1924ஆண்டு ஜுன் மாதம் 03ஆம் திகதி நாகப்பட்டிணம் மாவட்டத்தின் திருவாரூருக்கு அருகே அமைந்துள்ள திருக்குவளை கிராமத்தில் முத்துவேலன்- அஞ்சுகம் தம்பதிகளின் மகனாக தட்சணாமூர்த்தி எனும் இயற்பெயர் தாங்கிய, கலைஞர் கருணாநிதி பிறந்தார்.

தனது பள்ளிக்காலத்திலேயே முத்தமிழ் வித்தகராகத் திகழ்ந்த கலைஞர் கருணாநிதி, 1941ஆம் ஆண்டு ‘மாணவன் நேஷன்’ எனும் மாத இதழின் ஆசிரியராக எழுத்துலகில் நுழைந்தார்.

சிறந்த ஆளுமை மிக்க எழுத்தாளரான கலைஞருக்கு எழுதாத நாள் என ஒருநாள் கூட அவரது வாழ்நாளில் இருந்ததேயில்லை. தன் உடன்பிறப்புகளுக்கு கடிதம், எதிர்க்கட்சியினருக்குப் பதில் அறிக்கை என எப்போதும் எழுதிக் கொண்டே இருப்பார்.  அவர் எழுதிய ‘உடன் பிறப்புக்கு கடிதம்’ என்ற தொடர் உலகின் நீண்ட தொடர்களில் ஒன்றாகும். ‘தென்பாண்டிச் சிங்கம், பொன்னர் சங்கர்’ உள்ளிட்ட ஆறு சரித்திர நாவல்களுடன் பத்துக்கும் மேற்பட்ட சமூக நாவல்களையும் எழுதியுள்ளார். ‘பழனியப்பன், நச்சுக்கோப்பை, உதயசூரியன், தூக்குமேடை’ உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார். ‘அரும்பு, குப்பைத்தொட்டி, சாரப்பள்ளம் சாமுண்டி’ உட்பட 37 சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘தொல்காப்பியம், திருக்குறள்’ போன்றவைக்கு உரை எழுதியுள்ளார். கருணாநிதி, தன்னுடைய சுயசரிதையை ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற பெயரில் 6 பாகங்களாக எழுதியுள்ளார். ‘இனியவை இருபது’ என்ற பயணநூலையும் எழுதியுள்ளார். கருணாநிதி எழுதிய கவிதை நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

முத்துவேல் கர்ணாநிதியின் கைவண்ணத்தில் உருவான ‘தூக்குமேடை’ நாடகத்தால் ஈர்க்கப்பட்ட நடிகவேள் எம்.ஆர். ராதா, ‘கலைஞர்’ எனும் அடைமொழியை முதல் முதலில் வழங்கி கருணாநிதியை சிறப்பித்தார். அந்த கலைஞர் என்ற பட்டம் இன்று வரை அழைக்கப்படுகிறது. அவருக்கு முத்தமிழ் அறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்றத் தலைவர், தமிழ் இனக் காவலர் என்றும் பல பெயர்கள் உள்ளது. ஆனால், ‘கலைஞர்’ என்று அழைப்பதையே அவர் மிகவும் விரும்பினார். 1942ஆம் ஆண்டு ‘முரசொலி’ என்ற மாத இதழைத் தொடங்கினார். அதில் ‘சேரன்’ என்ற புனைப்பெயரில் புரட்சிகரமான பல கருத்துகளுடன் கட்டுரைகள் எழுதினார்.

கதாசிரியர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என 75 படங்களில் பணியாற்றியுள்ள கருணாநிதி, 1947இல் ‘ராஜகுமாரி’ திரைப்படம் முதல் 2011இல் வெளியான‘பொன்னர் சங்கர்’ வரை 64 ஆண்டுகள் திரைத்துறையில் கோலூன்றினார். ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் கருணாநிதி எழுதிய பகுத்தறிவு வசனங்கள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. திரைக்கதை வசனப் புத்தகங்கள் முதன்முதலில் அச்சிட்டு வெளியானது பராசக்தி தமிழ் திரைப்படத்தின் மூலமாகத்தான்.

தன்னுடைய இளவயதில் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான அழகிரிசாமியின் பேச்சின்பால் ஈர்க்கப்பட்டு, கம்யூனிஷ சித்தாந்தத்தில் ஆர்வம் காட்டிய அவர், பின்னாளில் மாபெரும் திராவிட இயக்கத்தின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவராகத் திகழ்ந்தது மாத்திரமல்லாமல், ஹிந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மாணவர்களை ஒன்று திரட்டி அவ்வப்போது பேரணிகளை நடத்தி, துண்டுப் பிரசுரங்களையும் வெளியிட்டு அரசியலில் தீவிரத்தைக் காட்டினார். தமிழகத்தில் திராவிடர் இயக்க மாணவர் அணியை முதல் முதலாக கலைஞர் கருணாநிதி தொடங்கினார்.

தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலுல் வெற்றி பெற்றவர் என்ற சாதனைக்குரியவர் கருணாநிதியே. 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து, பின்னர் குளித்தலையில் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்று சட்டமன்றத்தில் திமுக அடியெடுத்து வைக்கவும், தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.

1960 இல் ‘முரசொலி’யை நாளிதழாக மாற்றியதோடு, 1962 இல் சட்டசபை தி.மு.க. துணைத் தலைவரானார். பின்னர் தி.மு.க.வில் பொருளாளராக பதவியேற்றார்.

1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்றதன் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றதுடன்  அண்ணாதுரை அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

1969இல் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தின் முதல்வராகப் பொறுப்பேற்று,  பி.யு.சி. வரை இலவச கல்வி கொண்டு வந்ததோடு, தி.மு.க.வின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1971, 1989, 1996, 2006 என 5 முறை தமிழகத்தின் முதல்வராக, தமிழகத்தை நீண்ட காலம் ஆட்சி செய்த பெருமைக்குரியவர்தான் கலைஞர் கருணாநிதி. ஒரு கட்சியின் தலைவாரக 50 ஆண்டு தொடர்வது என்பது மிக பெரிய சாதனையாகும். அதை திமுக தலைவராக இருந்து கலைஞர் முத்திரை பதித்துள்ளார்.  

தெற்கு தேய்கிறது வடக்கு வாழ்கிறது என்கிற முழக்கத்துடன் அரசியலுக்குள் நுழைந்த திமுக, காலப்போக்கில் மத்தியில் யார் ஆட்சி புரிய வேண்டும் என்பதை நிர்ணயம் செய்பவராகக் கருணாநிதி திகழ்ந்தார். வடக்குக்கு வழிகாட்டுபவராக அவரே இருந்தார். பிரதமர்களாக வி.பி.சிங், தேவ கௌடா, மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர்களாக வி.வி.கிரி, கே.ஆர்.நாராயணன் உள்ளிட்டோரின் பதவிகளுக்கு காரணமாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. பிரதமர் பதவியை அலங்கரிக்கக்கூடிய வாய்ப்பு ஒருமுறை அவருக்கு கிடைத்தும், ‘என் உயரம் எனக்குத் தெரியும்’ என்று தேவ கௌடாவை, கலைஞர் பிரதமராக்கினார். 

1957 முதல் 2016 வரை இடம்பெற்ற 13 சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியே காணாத கருணாநிதி, 2016இல் மாநிலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றிவாகை சூடினார்.

1987ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ‘உலகத் தமிழ் மாநாடு’ முதல் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ‘செம்மொழி’ மாநாடு வரை தமிழின் மேல் உள்ள பற்றுக்காக அவர் நடத்திக் காண்பித்த மாநாடுகள் ஏராளம்.

‘நேரம் தவறாமை’ கருணாநிதியின் முக்கிய பண்புகளில் ஒன்று எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.

அதுதவிர, தனது 92 ஆவது வயதிலும் ‘ராமானுஜர்’ என்ற தொலைக்காட்சித் தொடருக்கான எழுத்துருவாக்கத்தை கலைஞரே எழுதினார். அவரது வாழ்நாளில் ஓய்வு என்று கலைஞர் என்றும் வீட்டில் முடங்கி இருந்ததில்லை. ‘நீண்ட தூரம் ஓடினால்தான், அதிக தூரத்தை தாண்ட முடியும்’  என்பது கலைஞருக்கு பிடித்த பழமொழி. ஆளும்கட்சியில் இருந்த காலத்தைவிட எதிர்க்கட்சியில் இருந்தபோதுதான் அதிகம் உழைத்தார். பண்டிகை நாட்களில்கூட அறிவாலயத்தில் அமர்ந்து கட்சிப் பணிகளைப் பார்க்கக் கூடியவர். ‘ஓயாமல் உழைத்த தொண்டன் இங்கு ஓய்வெடுக்கிறான்’ என்ற வாசகமே தன்னுடைய கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகம் என்று கலைஞர் கருணாநிதி எழுதியுள்ளார்.

திமுகவின் பொதுக்கூட்டங்களை மாலை நேரப் பல்கலைக்கழகங்கள் என்று கூறுவர். அதில் முதன்மைப் பேச்சாளராக கருணாநிதி திகழ்ந்தார். என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’ என்று ஆரம்பிக்கும் அவர் ஆற்றிய உரைகள் அனைத்து மக்களையும் அன்போடு கட்டிப்போடுபவையாக இருந்தன.

அவர், இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து சென்னையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றதோடு, இலங்கையில் நடந்த போரை தடுத்து நிறுத்தக் கோரி சென்னையில் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார்.

மதுரையில் இந்திராகாந்திக்கு கறுப்புக்கொடி காட்டிய போது நடந்த அசம்பாவிதங்களுக்காக குற்றம்சாட்டப்பட்ட அவர், 40 நாள் சென்னை ஜெயிலில் அடைக்கப்பட்டு, சிறைவாசம் கூட அனுபவித்திருக்கிறார்.

இவ்வாறு கலைஞரது வாழ்நாளில் ஏற்பட்ட சோதனைகள் ஒன்றல்ல; இரண்டல்ல! ஆனால், அவைகள் எவற்றையும் கண்டு அஞ்சி, மனம் தளர்ந்துவிடாது, அவற்றை சாதனைகளாக மாற்றி, தமிழுக்காக, தன் இனத்துக்காக என அரிய பல சேவைகளைச் செய்த கலைஞர் கருணாநிதி, மறைந்தாலும் மக்கள் மனங்களில் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கிறார் என்பதற்கு அவரது சேவைத் தடங்கள் சான்று பகர்கின்றன.

அகவை 92 இலும் ஓயாமல் எழுதிக் கொண்டிருந்த படைப்பாளியான கலைஞர் கருணாநிதி, தனது 94 ஆவது வயதில் (7) செவ்வாய்க்கிழமை மாலை 6.10மணியளவில் காவேரி மருத்துவமனையில் காலமானார்.

அவரின் மறைவுக்கு இந்திய அரசு ஏழுநாட்கள் துக்கம் அனுஷ்டிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதோடு, இறுதிச் சடங்கு நடைபெறும் புதன்கிழமையன்று (ஆகஸ்ட் 8) ஒரு நாள் விடுமுறை யும் வழங்கப்பட்டது.

மு.க. முத்து, அழகிரி, ஸ்டாலின், செல்வி, தமிழரசு, கனிமொழி ஆகிய ஆறு பிள்ளைச் செல்வங்களின் தந்தையான கலைஞர் கருணாநிதியின் உடல் தேசியக் கொடியால் போர்த்தப்பட்டு, அரச மற்றும் முழு இராணுவ மரியாதையுடன் 21 பீரங்கி வேட்டுகள் முழங்க மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தின் உள்ளே புதன்கிழமை (8) மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

கருணாநிதியின் இழப்பு தமிழ் நாட்டுக்கு மட்டுமல்ல, தமிழ் உலகுக்கே பேரிழப்பு!

No comments