கட்சியை சஜித்திடம் கையளியுங்கள் – ரணிலிடம் மீண்டும் கோரிக்கை

பலமானதொரு அரசியல் கூட்டணியை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்படி கோரிக்கையை கட்சியின் சார்பில் முன்வைத்தார் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”ஐக்கிய தேசியக் கட்சியின் 74ஆவது ஆண்டு நிறைவுவிழா 6 ஆம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே பங்கேற்றிருந்தனர். 

இந்நாட்டை ஆண்ட பிரதான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தற்போதைய தலைவர் மக்களின் கோரிக்கைக்கமைய மாற்றத்தை ஏற்படுத்த தவறியதாலேயே கட்சிக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை களமிறக்க வேண்டாம், ஐ.தே.க. வேட்பாளர் ஒருவரை முன்னிலைப்படுத்துமாறு நான் கோரிக்கை விடுத்திருந்தேன்.
அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. எனது வேண்டுகோள் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் கட்சிக்கு இன்று இந்நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதையும் கூறிக்கொள்கின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியை மீளக்கட்டியழுப்ப வேண்டும். எனவே, அக்கட்சியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்குமாறு தலைமைத்துவத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம். 

ஒன்றாக பயணிப்பதற்கான காலம் உதயமாகியுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிரான அனைத்து சக்திகளையும் ஒன்றிணைத்து பலமான கூட்டணியை அமைக்கவேண்டும். அந்த கூட்டணிக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சஜித் தலைமைத்துவம் வழங்குவார்.” – என்றார்.
sorku

No comments