46 பிள்ளைகளுடன் சிறையிலுள்ள தாய்மார்கள் குறித்த அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!

சிறைக்கைதிகள் நலன்புரி தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு கொடியை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அணிவிக்கும் நிகழ்வு  (2020.09.15) அலரி மாளிகையில் இடம்பெற்றது. 

சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.ஏ.டீ.சிறிசேன அவர்களினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நினைவு கொடி அணிவிக்கப்பட்டது.


கொடிகளை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் நிதி நேரடியாக சிறைக்கைதிகளின் நலனுக்காக செலவிடப்படவுள்ளது.

போதைப்பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு 46 குழந்தைகளுடன் சிறையிலுள்ள தாய்மார்கள் தொடர்பான அறிக்கையை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குறித்த சந்திப்பின்போது பிரதமரிடம் கையளித்தார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு அமைய குழந்தைகள் தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய விசேட வேலைத்திட்டம் குறித்து ஆராயுமாறும், அவர்களை விடுதலை செய்வதற்கான சாத்தியம் குறித்த சட்ட பின்னணி தொடர்பில் ஆராயுமாறும் பிரதமர் அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு துறையுடன் சம்பந்தப்பட்ட தலைவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இதுவரை விளக்கமறியலில் உள்ள போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கையின்போது அவர்களை முறையான ஒரு திட்டத்தின் கீழ் பணிகளில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் துறை சார்ந்த அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

அதற்கமைய போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளை பண்ணைகள் மற்றும் தொழிற்சாலைகளில் ஈடுபடுத்தி, முறையாக புனர்வாழ்வளிக்கப்பட்ட நற்பண்புள்ள நபர்களாக சமூகத்துடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். 

குறித்த சந்தர்ப்பத்தில் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, சிறைக்கைதிகள் நலன்புரி சங்கத்தின் முன்னாள் உப தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்.ஏ.டீ.சிறிசேன, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாடு) சந்தன ஏகநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு

No comments