தேர்தல் முடிவும் காத்தான்குடி கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களும்

(மர்சூக் அகமட் லெவ்வை) 
கொரோனாவால் பாராளுமன்றத் தேர்தல் நடக்குமா? இல்லையா? நடக்குமா? இல்லையா? என்ற கேள்வி கடைசி வரைக்கும் இருந்தபோதிலும் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. சிங்கள பௌத்த பேரினவாதம் அசுரத்தனமாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்திருக்கின்றது. 

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கின்றது. 19ஆவது திருத்தத்திற்கு கை, கால் இருக்குமாக இருந்தால் தற்போது அது பாராளுமன்றத்தில் இருந்து நடந்து வந்து பாராளுமன்றத்தின் பிரதான வாசலில் நின்று கொண்டிருக்கும், அங்கிருந்து வெளியேறுவதற்கான பஸ்சை எதிர்பார்த்து. 

எமது ஊரிலும் தேர்தல் முடிவுகள் எமக்கு சாதகமாக அமையவில்லை என ஒவ்வொரு தரப்பினரும் கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதனால் தேர்தல் காலங்களில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை தீர்மானிக்க நடுநிலையான ஒரு பலமான அணி தேவை என்ற கருத்தும் ஓங்கி வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. 

இந்தத் தேர்தலுக்கு முன்னர் அதிபர் சங்கத்தினால் வேட்பாளர்களை ஒற்றுமைப்படுத்த ஒரு முயற்சி பரவலாக எடுக்கப்பட்டது. இம்முயற்சியின் இறுதியிலே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஸ்தாபகர் அப்துர் ரஹ்மானுக்கும் ஒரு இணக்கப்பாடு உண்டாவதற்கான சூழல் உருவானது. 

நகர சபை தவிசாளர் உட்பட அதன் அதிகாரத்தை கைமாற்றுவதற்கான ஒரு பேச்சுவார்த்தையில் அது கைகூடாமல் பேச்சுவார்த்தை அத்தோடு முடிந்தது. ஆனால் நகர சபை அதிகாரத்தை ரஹ்மான் தரப்பிற்கு வழங்கி ஒரு ஒற்றுமையை ஊருக்குள் கொண்டு வந்திருக்க வேண்டும். 

நகர சபை தவிசாளர் தனது பதவியை ராஜினாமாச் செய்ய முன் வந்திருக்க வேண்டும். இன்று தேர்தல் முடிவைப் பார்க்கின்றபோது இந்த ஒற்றுமை வந்திருந்தால் ஹிஸ்புல்லா பாராளுமன்ற உறுப்பினர் ஆகியிருப்பார். நகரசபைத் தவிசாளர் முழுமனதோடு இராஜினாமாச் செய்திருந்தால் இந்தத் தோல்வி ஏற்பட்டிருக்காது. இந்த தியாகத்தை தவிசாளர் ஹிஸ்புல்லாவுக்காக செய்ய மாட்டாரா? ஹிஸ்புல்லாஹ் வெற்றியில் தவிசாளருக்குக் கூட அக்கறை இல்லாவிட்டால் இந்த ஊரில் யார்தான் அக்கறை எடுத்திருப்பார்? நகரசபைத் தவிசாளர் நியமிக்கும் விடயம் எங்களது கையில் இல்லை, அது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் கையிலேயே உள்ள விடயம் என்று கூறப்பட்டது. 

ஹிஸ்புல்லாவின் வெற்றியில் ஆளும் தரப்புக்கு அக்கறை இருப்பதாக தேர்தல் காலங்களில் கூறப்பட்டது. இது உண்மை எனில் ஹிஸ்புல்லாவின் வெற்றியை உறுதிப்படுத்த இந்த நகரசபைத் தவிசாளர் நியமனத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடனடியாக செய்திருக்கும். ஹிஸ்புல்லாவின் வெற்றியில் ஆளும் தரப்புக்கு அக்கறை இருந்தபடியால் தானே பசீர் சேகுதாவூத் தனது கட்சியில் போட்டியிட ஹிஸ்புல்லாவுக்கு இடம் கொடுத்தார். எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் ரஹ்மானை வெல்ல வைப்போம் என்று ஹிஸ்புல்லா சொன்னதை ரஹ்மான் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். 

ஹிஸ்புல்லாவை பொரறுத்தவரைக்கும் தேர்தல் முடிந்த பின் நீ யாரோ, நான் யாரோ என்று நடக்கின்ற மனப்பாங்கு உள்ளவர். எனவேதான் ரகுமானும் உடனடியாக சாத்தியமாகக் கூடிய நகர சபை அதிகாரத்தை கோரியிருப்பார். 

சென்ற நகர சபைத் தேர்தலிலும் ஹிஸ்புல்லாவுக்கும் ரஹ்மானுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. ஆனால் ரஹ்மானுடைய கொள்கைக்கு ஒத்து வராத காரணத்தினால் அந்தப் பேச்சுவார்த்தையை ரஹ்மான் முடித்துக்கொண்டார். ஆனால் நகரசபை அதிகாரங்களை சென்ற முறை வாங்க மறுத்த ரஹ்மான் இந்த முறை ஹிஸ்புல்லாவிடமிருந்து பெற்றுக் கொள்வது எனறளவுக்கு ரஹ்மான் இறங்கி வந்ததே பெரிய விடயம். ரஹ்மான் தந்த இந்த வாய்ப்பை ஹிஸ்புல்லா பயன்படுத்தாமல் விட்டது பெரிய துரதிர்ஷ்டமே. 

மேலும் இந்தத் தேர்தலில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்கும், ரஹ்மானும் இந்த தேர்தலில் ஹிஸ்புல்லா வெல்வது என்றால் 33 000 வாக்குகளைப் பெற வேண்டும் என்று ஆணித்தரமாகக் கூறினார்கள். ஆனால் ஹிஸ்புல்லாவோ தான் வெல்வதற்கு 28 000 வாக்குகள் இருந்தால் போதும் என்று மக்களை பிழையாக வழி நடத்தினார். மக்களும் இதனை நம்பி 28 000 வாக்கு போதும் என்ற மனநிலையில் வாக்களித்தனர். ரகுமானும் சிப்லியும் ஹிஸ்புல்லாவுக்கு 33 000 வாக்குகள் தேவை என்று கூறியதை மக்கள் செவிமடுத்திருந்தால் மக்களும் 33 000 வாக்குகளை ஹிஸ்புல்லாவுக்கு அளித்து இன்று ஊருக்கு ஹிஸ்புல்லா MP ஆகியிருப்பார். ஹிஸ்புல்லாவைத் தவிர வேறு யார் சொன்னாலும் இந்த ஊர் மக்கள் செவிமடுக்க மாட்டார்களே! 

மேலும் ரஹ்மான் தரப்பினர் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பிலே வெல்லாது என்று பிரச்சாரம் செய்து வந்தனர். ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் வேறு எந்த கட்சியுடனும் இம்முறை கூட்டு வைத்து போட்டியிடவில்லை, ஒரு கட்சியுடன் கூட்டு வைத்துத்தான் முஸ்லிம் காங்கிரஸ் வென்ற வரலாறு இருக்கின்றது, சென்ற 2015ஆம் ஆண்டு NFGG உடன் கூட்டு வைத்துத் தான் முஸ்லிம் காங்கிரஸ் வென்றது, இம்முறை NFGG உடன் கூட்டு இல்லை என்றபடியால் முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று முழுமையாக நம்பினர். ஆனால் NFGG இல்லாமலே முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றது ரஹ்மானின் தவறான அனுமானத்தை காட்டுகின்றது. 

ஹிஸ்புல்லா முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறிய போதும் முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் ஆசனத்தை இழக்கும் என்றனர், அது நிகழவில்லை. அமீர் அலி முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறிய போது முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பில் ஆசனத்தை இழக்கும் என்றனர், அது நிகழவில்லை. NFGG முஸ்லிம் காங்கிரசை விட்டு வெளியேறிய போது மட்டக்களப்பில் ஆசனத்தை முஸ்லிம் காங்கிரஸ் இழக்கும் என்றனர், அது நிகழவில்லை. ஏனெனில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு அஷ் ஷஹீதுகளின் இரத்தத்தில் உருவானது

ஹிஸ்புல்லா 31 000 வாக்குகளைப் பெற்றது என்பது ஒரு இமாலய சாதனைதான். ஹிஸ்புல்லா இதற்கு முதல் தனித்து நின்றதும் இல்லை, 20 000 வாக்குகளுக்கு மேல் பெற்றதும் இல்லை. ஹாட்ரிக். 

ஹிஸ்புல்லா பிள்ளையானுடைய வாக்குகளை குறைவாக மதிப்பிட்டதும் அவருடைய தோல்விக்கு ஒரு பிரதான காரணம். ஆனால் ரஹ்மானும் சிப்லியும் பிள்ளையானுடைய வெற்றியை உறுதியாகக் கூறினர். ஆனால் இதிலே யாருமே அனுமானிக்காத விடயம் வியாழேந்திரனுடைய வெற்றி. ஹிஸ்புல்லா மொட்டு கட்சியிலே வேட்பாளராக வராததற்கு வியாழேந்திரனின் கடுமையான எதிர்ப்பு தான் பிரதான காரணமாக சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இல்லாமலே தன்னால் மொட்டு கட்சியை வெல்ல வைக்க முடியும் என்ற தன்னம்பிக்கையோடு வியாழேந்திரன் சாதித்துக் காட்டியிருக்கின்றார். தமிழர் கூட்டமைப்பிலுள்ள யாரும் இலகுவாக அரசாங்கத்தோடு கட்சி தாவுவதில்லை. ஆனால் ஹிஸ்புல்லாதான் வியாழேந்திரனை தமிழர் கூட்டமைப்புக்கு பாரிய துரோகத்தை மேற்கொள்ள வைத்து அரசாங்கத்தோடு சேர்த்து விட்டவர். அதுவே இன்று ஹிஸ்புல்லாவுக்கு வினையாக வந்துள்ளது. வளர்த்த கடா. 

சென்ற 8ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீர் அஹமட் மெத்தை பள்ளிவாயலுக்கு தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்களினால் அது தடுத்து நிறுத்தப்பட்டு குழப்பம் விளைவிக்கப்பட்டது. இதற்கு "காத்தான்குடி மக்கள் தங்களது பிரதிநிதியை இழந்து சோகத்தில் இருக்கின்ற நேரத்தில், மூன்றாம் கத்தம் கூட முடியாத வேளையில் ஹாபீஸ் நன்றியுரை நிகழ்த்த வந்தது முறையல்ல" என ஹிஸ்புல்லாவினால் நியாயம் கற்பிக்கப்படுகின்றது. 

இவ்வாறுதான் 2001ஆம் ஆண்டு தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறைக்கு செல்கின்ற வழியில் காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகைக்காக வருகை தந்தபோது பள்ளிவாயலை இழுத்து மூடி ரவூப் ஹக்கீமுக்கு பல இன்னல்களை மேற்கொண்டனர். ரவூப் ஹக்கீம் ஜும்ஆத் தொழுகையை காத்தான்குடியில் நிறைவேற்ற இருக்கின்றார் என்ற செய்தியை அறிந்த ஹிஸ்புல்லா அன்று காலையிலேயே சகல பள்ளிவாயல் ஒலிபெருக்கிகளிலும் "ரவூப் ஹக்கீம் இன்று ஜும்ஆத் தொழுகையை காத்தான்குடி மீரா ஜூம்ஆ பள்ளிவாயலில் நிறைவேற்ற வருகின்றார்" என அறிவித்து ஊரிலுள்ள தனது சகல காடையர்களையும் அங்கு திரட்டி குழப்பம் விளைவித்தார்.

அன்றைய தினம் எந்தத் தேர்தல் முடிவடைந்து ஊர் துக்க தினத்தில் இருக்கவும் இல்லை. அது ஒரு சாதாரண காலம். அது ஒரு சாதாரண ஜும்ஆத் தொழுகை. அந்தத் தொழுகையின் பின் ரவூப் ஹக்கீம் எந்தவித நன்றி தெரிவித்து உரையாற்ற இருக்கவும் இல்லை. எந்த முஸ்லிமும் பிரயாணத்தின் போது ஏதாவது ஒரு ஜும்ஆப் பள்ளிவாயலில் ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றுவது வழக்கம். அவ்வாறான சூழலிலேயே ஜும்ஆவை இவர்கள் குழப்பினர். 

இதேபோல் அதே மீரா ஜூம்ஆப் பள்ளிவாயலில் கருணாவின் ஏற்பாட்டில் 103 முஸ்லிம்கள் தொழுகையின் போது படுகொலை செய்யப்பட்டனர். பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அதே கருணாவை அதே மீரா ஜூம்ஆ பள்ளிவாயலிற்கு அழைத்துவந்து ஹிஸ்புல்லா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். உண்மையில் ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் உணர்ச்சி வசப்படுபவர்கள் என்றால் அன்றைய தினமே பொங்கி எழுந்து கருணாவை அடித்து விரட்டி இருக்க வேண்டும், ஒலிவாங்கியை பறித்தெடுத்து தடுத்திருக்க வேண்டும். ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் உணர்ச்சிவசப்பட வேண்டியதற்கு உணர்ச்சிவசப்பட மாட்டார்கள், உணர்ச்சி வசப்படக் கூடாததற்கு உணர்ச்சி வசப்படுவார்கள். "103 பேரும் கொல்லப்பட்ட துக்க காலம் முடிந்துவிட்டது, இனி கருணாவை பள்ளிவாயலுக்கு கூட்டி வரலாம்" என ஹிஸ்புல்லா முடிவெடுத்தாரோ தெரியவில்லை. இந்த துக்கம் போக பத்து வருடம் போதுமா? இது போகக்கூடிய துக்கமா? 

இதிலிருந்து விளங்குவது ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்களின் உணர்ச்சி அவர்களது அரசியல் நன்மை கருதியதாகத்தான் இருக்கும்.

இம்முறை தமிழர்களின் வாக்களிப்பு அதிகரித்ததைப் பார்க்கின்றபோது ஹாபிஸ் MP ஆனதே பெரிய விடயம். முஸ்லிம் சமூகம் என்ற ரீதியில் மாவட்டத்துக்கு ஒரு முஸ்லிம் MP வந்தான் என்று சந்தோஷப்படாமல் பிரதேசவாதத்தை கக்குகின்றனர். 

பள்ளிவாயல் என்றும் பார்க்காமல் மெத்தைப் பள்ளியிலே அன்று தூஷண வார்த்தைகள் பாவித்திருக்கின்றனர். ரவூப் மௌலவி கூட பள்ளிவாயல் என்ற காரணத்திற்காக தொண்டைக்குழி வரை வந்தது தூஷனத்தை நிறுத்திக்கொண்டார். அர்ஷு நடுங்குகிற அளவுக்கு தூசனம் சொல்ல ஆற்றல் கொண்ட ரவூப் மௌலவியே பள்ளிவாயல் என்ற ஒரே காரணத்துக்காக தூஷனத்தை நிறுத்திக்கொண்டார். தூஷண விடயத்தில் மின்ஹாஜ் மொளலவியோடு ஒப்பிடுகிற போது ரவூப் மௌலவி எவ்வளவோ மேல். ரவூப் மௌலவியுடைய இந்த கண்ணியம் மற்றவர்களுக்கும் வேண்டும். இந்த கலாச்சாரத்தை மாற்றத்தான் சிப்லியும் ரஹ்மானும் பாடுபடுகிறார்கள். 

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட உடனே மக்கள் இரண்டு விடயங்களைப் பரவலாக பேசினார்கள். 
இத்தேர்தலில் ஹிஸ்புல்லா தோல்வி அடைவார். 
இத்தேர்தலில் ஹாபிஸ் நசீர் அஹமட் வெற்றி அடைவார். 
மக்களின் பரவலான தொடர்ச்சியான இந்தப் பேச்சு அல்லாஹ்விடத்தில் துஆவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் முடிந்த கையோடு, ஹிஸ்புல்லா தோற்ற கையோடு ரஹ்மான் மீதும் சிப்லி மீதும் வசைபாட தொடங்கிவிட்டனர். சென்ற 2015ஆம் ஆண்டு தேர்தலில் தோற்று தேசியப்பட்டியல் மூலம் ஹிஸ்புல்லா தெரிவுசெய்யப்பட்ட போது "அல்லாஹ் நாடினால் எவ்வாறேனும் MPஐ வழங்குவான், இதனை சிப்லியாலோ, ரகுமானாலோ தடுக்க முடியாது" என்றார்கள். இம்முறையும் அல்லாஹ் நாடினால் ஹிஸ்புல்லாவுக்கு MP வழங்குவான் என்று ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் எழுதினார்கள். சிப்லியாலோ, ரகுமானாலோ தடுக்க முடியாது என்றார்கள். இப்போது ஹிஸ்புல்லாஹ் ரஹ்மானாலும் சிப்லியாலும் தான் தோற்றார் என வசை பாடுகிறார்கள். முகப்புத்தகத்தில் எழுதுகின்றார்கள். 

அல்லாஹ்வின் நாட்டத்தால்தான் தோற்றார் என்ற கழாகதிரை ஏற்றுக்கொள்கிறார்கள் இல்லை. வெற்றியடைந்தால் அது அல்லாஹ்வின் ஏற்பாடு, தோல்வியடைந்தால் அது அல்லாஹ்வின் ஏற்பாடு இல்லை, சிப்லியினதும் ரஹ்மானினதும் ஏற்பாடு. 

ஹிஸ்புல்லா வென்றுவிட்டார் என்றவுடன் ஆதரவாளர்கள் ஊரையே இரண்டாக்கினார்கள். எதிரிகளின் வீடுகளுக்கு வெடிகளைத் தூக்கி வீசினார்கள். இரண்டு மணித்தியாலம் ஹிஸ்புல்லா MPயாக இருந்ததற்கே இவ்வளவு அட்டகாசம் என்றால் 5வருடம் MPயாக இருந்தால் என்னவாகியிருக்கும். இந்த கலாச்சாரம் மாற வேண்டும் என்றுதான் சிப்லியும் ரஹ்மானும் பாடுபடுகிறார்கள். 

சிப்லிக்கோ ரஹ்மானுக்கோ ஏசி எழுதவேண்டாம். இவ்வாறு ஏசி எழுதினால் அவர்கள் உங்களோடு சேர்ந்து ஒற்றுமையாக செயற்பட முன்வர மாட்டார்கள். மாறாக ஹிஸ்புல்லாவுக்கு அடுத்த அடியை வழங்குவதற்கு ஒரு ரொக்கட் லோன்ஜர் தயாரிப்பதற்கு தான் சிந்திப்பார்கள். 

ரஹ்மானும் சிப்லியும் ஹிஸ்புல்லா தோல்வியடைவார் என்றுதான் சொன்னார்களே ஒழிய ஹிஸ்புல்லா தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சொல்லவில்லை. 

ஹிஸ்புல்லாவுக்கு ஆளுநர் பதவி கிடைத்தபோது என்னுடைய தத்துவ ஆசிரியர் பசீர் சேகுதாவூத் "இலங்கையிலே ஒருவர் ஆளுநராக செல்கிறார் என்றால் அத்தோடு அவருடைய அரசியல் பயணம் முடிந்து விட்டது என்றுதான் அர்த்தம். அரசியலில் ஓய்வு எடுப்பவர்கள் தஞ்சமடையும் இடம் தான் ஆளுநர் பதவி. இப்படியான ஒரு பதவியை ஏன் ஹிஸ்புல்லா விரும்பினார் என்பது எனக்கு விளங்கவில்லை. இதற்குமேல் அவருக்கு அரசியல் சரிவராது" என ஒரு ஊடக அறிக்கையை பஷீர் வெளியிட்டதையும் நான் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

எனவே எமது ஊருக்கு எம்பி கிடைக்க வேண்டுமென்றால் தகுதியான ஒரு அமைப்பு களத்தில் நின்று வேலை செய்ய வேண்டும். அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் ஹிஸ்புல்லா தானும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அடம்பிடித்தால் ஊரின் ஒற்றுமை அவ்வளவுதான். இந்த மாகாண சபைத்தேர்தலில் இருந்தாவது அந்த நடுநிலையான அமைப்பு வேலை செய்ய வேண்டும். இதை விட்டுவிட்டு ஐந்து வருடங்களின் பின்னர் அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போதும் ஊருக்கு MP வேண்டும், ஊர் ஒற்றுமைப் படவேண்டும் என கோசம் எழுப்பினால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் தான் ஏறும். 

ப்ரியத்துடன், 
மர்சூக் அகமட் லெவ்வை
முன்னாள் நகரமுதல்வர் காத்தான்குடி.
11.08.2020

No comments