காத்தான்குடி சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கை சிறுபிள்ளைத்தனமானதும்,நகைச்சுவையானதுமாகும் அபிமான் ஆசிரியர்


காத்தான்குடி சம்மேளனம் வெளியிட்ட ஊடக  அறிக்கை  சிறுபிள்ளைத்தனமானதும், நகைச்சுவையானதுமாகும் அபிமான் ஆசிரியர்

கடந்த 23.06.2020 அன்று காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களிள் சம்மேளனம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பாக...

மேற்படி அறிக்கையானது சிறுபிள்ளைத்தனமானதும் இந்த 2020ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவையானதுமாகும்.

உங்களின் இந்த அறிக்கையில் உள்ள அனைத்து விடயங்களும் அப்பட்டமான பொய் என்பதை இந்த ஊரிலுள்ள புத்தி ஜீவிகள் நன்கு அறிவர். அதில் உள்ள எல்லாவற்றுக்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லையென்பதால், மௌலவீ அப்துர் ரஊப் தரப்பினர்தான் இந்த ஊரில் எதிர் வினைக் குழுக்களை உருவாக்குகின்றார்கள் என்ற விடயம் சம்மந்தமாகவே  இங்கு எழுத விரும்புகிறேன். அதற்கு முன்னர்...

இந்த ஊரிலுள்ள 50 வயதுக்கு மேற்பட்ட சகலரிடமும் குறிப்பாக உலமாக்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். 

தயவு செய்து மழுப்பாமல் அல்லாஹ் றசூலுக்குப் பயந்து நெஞ்சிலே கை வைத்து உண்மையை கூறுங்கள். 

1990க்கு முற்பட்ட காலப்பகுதியில் நமது ஊரிலே ஆங்காங்கே ஒரு சிலர் வஹ்ஹாபிஸ கொள்கையை பின் பற்றிக் கொண்டிருந்தாலும் 1990ம் ஆண்டுக்குப் பின்னர்தான் வஹ்ஹாபிஸம் பூதாகாரமெடுத்தது. 

1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் நமது ஊரிலே புனித புஹாரி ஷரீப் ஓதி கந்தூரி கொடுத்தல், புனித புர்தா ஷரீபஹ் ஓதுதல், ரபீஉனில் அவ்வல் மாதம் வந்து விட்டால் சுப்ஹான மௌலித் ஓதுதல், மீலாத் விழா கொண்டாடுதல், ராதிப் மஜ்லிஸூகள் நடாத்துதல். கப்ர் சியாரத் செய்தல்,கத்தம்- பாத்திஹா ஓதுதல் மற்றும் தல்கீன் ஓதுதல் போன்ற செயல்கள் இருந்தனவா...? இல்லையா.....? 

பொது மக்களை விடுங்கள். உலமாக்களான நீங்கள் இப்படியான  செயல்களை செய்தீர்களா இல்லையா.....? 

அப்போதெல்லாம் இந்த விடயங்களை  செய்தல் உங்களுக்கு ஆகுமானதாக இருந்ததால்தானே செய்தீர்கள். 

1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவைகளை ஆகுமானவை அல்ல என்று நீங்கள் கை விட்டிருப்பதும், உங்களில் சிலர் அவைகளை ஷிர்க் என்றும் குப்ர் என்றும், பித்அத் என்றும் பிரச்சாரம் செய்வதும் ஏன்.........?

அன்று சரி என்று செய்த செயல்கள் இன்று பிழையாகிப் போனதன் காரணம் என்ன.....? அப்படியாயின் 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் நீங்கள் குப்ரிலா இருந்தீர்கள்.......? பின்னர் நீங்கள் எங்கே எப்போது தவ்பா செய்து மீண்டும் கலிமாச் சொல்லி மீண்டீர்கள்.......,? யார் உங்களுக்கு கலிமா சொல்லித் தந்தார்....,.?   தயவு செய்து பகிரங்கமாக தெரிவியுங்கள்.

இனி சம்மேளனத்தின் அறிக்கை விடயத்துக்கு வருகிறேன். 

எப்போதுமே நாங்கள் சம்மேளனத்தின் அறிக்கைகளை கணக்கெடுப்பதே இல்லை. ஆனால் இந்த அறிக்கையில் ஊரிலே எதிர் வினைக்குழுக்களை உருவாக்குவது மௌலவீ அப்துர் ரஊப் தரப்பினரே என்ற ஒரு வாக்கியத்துக்காகவே காலத்தின் மற்றும் எமது சமுகத்தின் நன்மை கருதி இதனை வெளியிடுகிறேன்.

முன்பெல்லாம் காத்தான்குடி உலமா சபையினராலோ அல்லது சம்மேளனத்தினாலோ ஏதாவது அறிவித்தல் விடுக்கப்பட்டால் மக்களிடம் அதற்கு ஒரு மரியாதை இருந்தது. ஆனால் இப்போது ஆகக்குறைந்தது சமுக ஊடகங்களிலாவது உங்களின்  மேற்படி அறிக்கைக்கு ஆதரவாக யாராவது எழுதுவார் என்று பார்த்தால் ஒருவரையுமே காணோம். இதிலிருந்தே ஊரிலும் சமுகத்திலும் உங்களுக்குள்ள மதிப்பும் மரியாதையும் புலனாகிறது.

உங்கள் சம்ளேனத்திலே உலமாஉகளும் இருக்கின்றபடியால் கேள்விகளை பொதுவாகவே கேட்கிறேன். 
தயவு செய்து மழுப்பாமல் மறைக்காமல் அல்லாஹ் ரசூலுக்குப் பயந்து உண்மையை வெளியிடுங்கள்.
(வினா 01)  
1979ஆம் ஆண்டு மௌலவீ அப்துர் ரஊப் அவர்களினால் முதன் முதலாவதாக சூபிஸ ஞானம் பற்றிய கருத்துக்கள் முன் வைக்கப்பட்டபோது, அவ்வேளையில் இருந்த சிரேஷ்ட உலமாக்களில் பலருக்கு இது சூபிஸ ஞானம் அல்லது மஃரிபா ஞானம் என்று தெரிந்திருந்தும் ஓர் அரசியல் வாதிக்குப் பயந்து அல்லது அந்நேரத்தில் மௌலவீ அப்துர் ரஊப் அவர்களுக்கு
அந்த இளம் வயதிலேயே உலமாக்களின் சூரியன் என்றும் ஈழத்தின் சொற் கொண்டல் என்றும் கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டு பெரும் மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்பட்டு வந்ததை கண்டு பொறுக்க முடியாத பொறாமை காரணமாக அவர் பேசிய விடயம் சம்பந்தமாக அவரை அழைக்காமலும் விசாரிக்காமலும் உடனே கொழும்புக்குச் சென்று, அந்த நேரத்தில் பதிவு செய்யப்படாத ஓர் அமைப்பாகவும் பொது மக்களிடம் கண்மூடித்தனமான ஓர் மரியாதையையும் கொண்டிருந்த அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபையை வற்புறுத்தி ஒரு பக்கச்சார்பாக எதுவித விசாரணையுமின்றி முர்தத் பத்வா வழங்கி ஒற்றுமையாக இருந்த ஊரை முதன் முதலாக இரண்டாக்கி ஒன்றுக்கு மற்றது எதிர் வினைக்குழுவாக உருவாக காரணமாக அமைந்தது உங்களது உலமாக்களா.......? மௌலவீ அப்துர் ரஊப் தரப்பினரா........?

இதனிடையே நீங்கள் செய்த சிறு சிறு கைங்கரியங்கள் நிறை உள்ளன. அவற்றையெல்லாம் எழுதினால் இந்தப்பிரசுரம் நீண்டு விடும். எனவே முக்கியமான கேள்விகளை மட்டும் இங்கு தொடர்கிறேன்.

(வினா 02)
2004ஆம் ஆண்டு சம்மேளனமாகிய நீங்கள் ஈமானிய நெஞ்சங்கள் என்ற பெயரிலே ஓரு குழுவை உருவாக்கி, கடற்கரை வீதியில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிகாட்டல் நிலைய(ம்?)த்திலே பாதுகாப்பு தரப்பினரை அழைத்து எம்மைப்பற்றி பல தப்பான கருத்துக்களை அவர்களுக்கு கூறி எங்கள் சூபிஸ சமுகத்தின் மீது அப்போதிருந்த அரசியல் தலைமையின் உதவியுடன் புனித றமழான் மாதம் 17ஆம் நோன்பு தினமன்று அந்த ஈமானிய நெஞ்சங்கள் தாக்குதல் நடாத்த காரணமாக இருந்தீர்களே.
சுமார் ஏழு நாட்கள் இந்த கலவரம் நீடித்ததே.
சூபிஸ சமுகத்தினரின் பல வீடுகள் உடைக்கப்பட்டனவே.
உங்களது சம்மேளன காரியாலயத்துக்குப் பின்னால் அமைந்துள்ள மெத்தைப் பள்ளிவாயலுக்கு எமது சூபிஸ மக்கள் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டு உங்கள் வஹ்ஹாபிஸ கொள்கை வழி வாழ வேண்டும் என பலவந்தமாக கலிமஹ் சொல்லிக் கொடுத்தீர்களே.
இந்த அக்கிரமம் ஒருநாள் இரண்டு நாள் அல்ல ஏழு நாட்கள் நடந்தனவே. உங்கள் மெத்தைப் பள்ளிவாயல் ஒரு கொலைக்களமாக இந்த ஏழுநாட்களும் இருந்ததே. எமது இளைஞர்கள் பலவந்தமாகக் கடத்தி கொண்டுவரப்பட்டு அவர்கள் மரணமடைந்து விட்டார்கள் என்று செய்தி வரும் அளவுக்கு தாக்கப் பட்டார்களே. அந்த இளைஞர்களை விடுவிக்கவோ அல்லது அமைதியை உருவாக்கவோ ஊரை வழிநடாத்துவதாகச் சொல்கின்ற நீங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த வன்முறையை நிறுத்த என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.....? 

ஈமானிய நெஞ்சங்கள் என்ற குழுவை நாங்கள் உருவாக்கவில்லை என இப்போது நீங்கள் நழுவப் பார்க்கலாம். சரி அப்படியே நீங்கள் உருவாக்கவில்லை என வைத்துக் கொண்டாலும் கூட,  குறைந்த பட்சம் பொலீஸில் முறைப்பாடாவது செய்தீர்களா......?
(வினா 03)  
2004 ஆம் ஆண்டு செய்யப்ட்ட சமாதான ஒப்பந்தத்தின் பிறகு சமாதானமாக வாழ விரும்பிய ஊர் மக்கள் எமது தரப்பு உலமாஉகளுக்கும் பிரசங்கம் செய்வதற்கு சந்தர்ப்பம் கொடுத்து காத்தான்குடியில் மட்டுமல்ல அயல் கிராமங்களிலும் எமது உலமாஉகளும் ஜும்அஹ்ஓதி, காத்தான்குடி மக்களோடு அதற்கு முன்னர் இருக்காத வகையில் அயல் கிராமத்து மக்கள் சந்தோசமாக இருந்த வேளை, தீவிரப்போக்குள்ள வஹ்ஹாபிகளின் தூண்டுதலால் எமது உலமாஉகளுக்கு வழங்கி வந்த ஜும்அஹ் ஓதும் வாய்ப்பை தடை செய்து, ஏற்பட்ட சமாதானத்துக்கு வேட்டுவைத்து மீண்டும் ஊரை பிளவு படுத்தி எதிர்வினையாற்றியது நீங்களா.......?மௌலவீ அப்துர் ரஊப் அவர்களின் தரப்பினரா..........?

(வினா 04 
முக்கியமானது)
2004--2006 காலப் பகுதியில் காத்தான்குடியில் எப்படியான சூழுல் நிலவியது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிய வேண்டியதில்லை.
என்றாலும் சுருக்கமாகச் சொல்கிறேன். 

அதாவது நீங்கள் உருவாக்கிய குழுவே உங்களின் கட்டுப் பாட்டை மீறி உங்களை அதிகாரம் செலுத்தும் சக்தியாக மாற்றம் பெற்று கடைசியில் தடி எடுத்தவனெல்லாம் சண்டியன் என்ற நிலை உருவானது.

இதனிடையே மௌலவீ அப்துர் ரஊப் அவர்களின் தரப்பினருக்கும் உங்களுக்குமிடையில் இன்னும் சில சந்தர்ப்பங்களில் அந்த நேரத்தில் இருந்த உலமா சபை (வெறுமனே பொடியன்மார் தலைவர் செயலாளராக இருந்த கால கட்டம்) அவ்வப்போது பேச்சுவார்த்தைகள் நடந்தன. அந்த நேரத்தில் இருந்த நகரபிதா முபீன் சேர் அவர்களும் சில கூட்டங்களுக்கு தலைமை தாங்கினார்கன். ஆனால் நடைபெற்ற எல்லாக் கூட்டங்களிலும் எமது சூபிஸ சமுகத்தை கொத்தடிமையாக வைத்திருக்கும் பாணியிலேயே உங்களின் ஆணவமும் அதிகாரமும் கலந்த நிபந்தனைகளிருந்ததால் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தன.

பின்னர் 2005ம் ஆண்டு நகரசபை கட்டடத்தில் (தற்போது நூதனசாலை) கொழும்பிலிருந்து  அ.இ.ஜ.உ சேந்த 03 உலமாஉகளை நீங்கள் அழைத்து மேற்படி முபீன் சேர் தலைமைதாங்க ஒரு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திலே எமது ஞானபிதா அன்னவர்கள் ஒரு வேண்டுகோள் விடுத்தார்கள்.

நான் பேசுவது ஹக்கு. அ.இ.ஜ.உ. சபையால் நீங்கள் திறமை சாலிகள் என கருதுகின்ற உலமாஉகள் 10 பேரை அழையுங்கள். இதேபோல் நானும் எனது தரப்பில் 10 உலமாஉகளை அழைக்கிறேன். எனக்கு வஹ்ததுல் வுஜூத் சம்பந்தமாக பேசுவதற்கு 02 மணிநேரம் தாருங்கள். பின்னர் உலமாஉகள் என்னிடம் கேள்விகளை கேட்கலாம். அல்லாஹ்வின் உதவியால் என்னால் பதில் அழிக்க முடியும். ஒரு கேள்விக்கேனும் என்னால் பதில் தர முடியவில்லையென்றால், நான் ஒரு வாள் தந்து சுய வாக்குமூலும் தருகிறேன் என்னை வெட்டி விடுங்கள். பிரச்சினை முடிகிறது என்று கூறினார்கள்.

இதைவிட பட்டவர்த்தனமாக ஒரு மனிதன் எப்படிச் சொல்ல முடியும்......? சரி மொலவீ இப்படி ஒரு பாரதூரமான சவால் விடுகிறாரே. ஓரு வாய்ப்பை கொடுத்துத்தான் பார்ப்போமே என்று நீங்கள் ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுத்தீர்களா.......? 

குறிப்பு!

மேற்படி சவால் ஒரு முறை பல அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடமும் ஞான பிதா அவர்களின் காரியாலயத்தில் வைத்து விடுக்கப்பட்டது.

(வினா 05)
2006ஆம் ஆண்டு மற்றொரு கலவரத்தை தாங்கள் அரங்கேற்றினீர்கள். இதுவும் 07நாட்கள் நீடித்தது. இதன்போது இடையில் ஒரு நாள் அப்போது பிரதேசத்துக்கு பொறுப்பான டி.ஐ.ஜீ மற்றும் காலம் சென்ற (சுட்டுக் கொல்லப்பட்ட) ஏ.எஸ்பி ஜமால்தீன், பிரதேச செயலாளர் கிராம சேவகர்கள் எமது தரப்பு மற்றும் நீங்களும் கலந்து கொள்ள கூட்டம் ஒன்று ஏற்பாடாகி இருந்தது. அக்கூட்டத்திலே நான்தான் டி.ஐ.ஜீ யை நோக்கி சேர் இவர்களுக்கு எங்களோடு ஏதும் பிரச்சினை உள்ளதா என்று கேளுங்கள் என  கூற, அவரும் அப்படியே கேட்க உடனே சபீல் நளீமி இல்லை என்று சொல்ல அப்படியாயின் இவர்களோடு பேசிப்பயனில்லையே பிரச்சினைக்குரியவர்களை  நீங்கள் அழையுங்கள் அல்லது இவர்களை அழைத்து வரச் சொல்லுங்கள் என்றேன். அவ்வாறே சொல்லப்பட உங்களது அணி வெளியே சென்றது. பாவம் அரை மணிநேரம் சென்ற பிறகும் கூட உங்களால் அவர்களை அழைத்து வர முடியவில்லை. பின்னர் நீங்கள் மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட (Ten commandment) போன்ற உங்களின் வழமையான பல்லவியாகிய பத்து கட்டளைகளோடு வந்தீர்கள். நான் உடனே சேர் இது எங்களுடைய சமுகத்தை அடிமைப்படுத்துகின்ற செயல் என்று கூற இந்தப் பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்தது. இதன்போது ஏ.எஸ்.பீ.ஜமால்தீன் என்னை அழைத்து நீங்கள் கொஞ்சம் தீவிரமாகப் பேசுகிறீர்கள் அவதானமாக இருங்கள். இந்தக்கயவர்கள் உங்களை கொல்லவும் தயங்கமாட்டார்கள் என எனக்கு அறிவுறை கூறிச் சென்றார். ஒரு சில நாட்களின் பின் அவர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை கேள்விப்பட்டேன். இங்கே எனது கேள்வி என்னவென்றால் எதிர்வினைக்குழுவை தன் வசம் வைத்திருந்தது நீங்களா.....? நாங்களா......?

இதன்பிறகு ஊரின் நடந்த தொடரான கொலைகள் மற்றும் எமது ஞான பிதா அவர்களை கடத்த முயற்சித்து கடத்தல் முயற்சி தோல்வி கண்டதால் எமது அலுவலகத்தில் தாக்குதல் நடந்தது எல்லாம் ஊர் அறிந்த விடயம். இதன்பின்னர் நாங்கள் சுன்னத் வல் ஜமாஅத் மாநாடு ஏற்பாடு செய்து காத்தன்குடியில் உள்ள சுன்னத் வல்ஜமாஅத் வழி செல்லும் உலமாஉகளுக்கு அழைப்பு விடுத்து அவர்கள் வருவதற்கு தயாராகிய வேளை அவர்களை போகக்கூடாது என தடுத்தது யார்.......? தயவு செய்து பதில் சொல்லுங்கள். அல்லாஹ் சகலதையும் அறிந்தவன்.

2014 ஜனவரி 01ஆம் திகதி நாங்கள் சர்வ மத தலைவர்களை அழைத்து மீலாத் விழா நடாத்த ஏற்பாடு செய்தபோது அதை நிறுத்தும்படி நகர சபைக்கும் பொலீசுக்கும் கடிதம் அனுப்பியது யார்......? இதுதான் நீங்கள் அனைத்து மதத்தினரையும் சர்வமத தலைவர்களையும் மதிக்கின்ற லட்சணமா.....? உங்களுடைய சம்மேளன கட்டடத்துக்கு முன்னால் அஸ்பர் பலாஹி தலைமையில் எமது மீலாத் விழாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தபோது நீங்கள் எங்கே இருந்தீர்கள்...? இந்த ஆர்ப் பாட்டத்தை நிறுத்த நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.....? சொல்வீர்களா.....?

எங்களிடம் நீங்கள் ஒரு சந்தர்பப்த்திலே வேண்டுகோள் விடுத்தபோது எமது மக்களிடம் நாங்கள் ஸகாத் நிதி சேகரித்து தந்து உதவினோம். ஆனால் எமது சூபிஸ சமுகத்தின் ஏழைகள் உங்களிடம் உதவி கேட்டால் முர்த்தத்துக்கு உதவ முடியாது என பைலை மூடுகின்றீர்கள். அப்படியானால் எனக்கு ஒரு சந்தேகம். முர்த்த்துகளின் காசை வாங்கி உங்களின் (முஸ்லிம்களுக்கு) ஸகாத் கொடுக்கலாமா......? அய்யாமாரே தயவு செய்து சொல்லுங்கள்.

இறுதியாக.........

இந்த ஊரின் நன்மைக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் (எமது ஞானபிதா அன்னவர்களும் சூபிஸ சமுகமும்) சமுக மற்றும் அரசியல் ரீதியாக பல விட்டுக் கொடுப்புக்களையும் தியாகங்களையும் செய்திருக்கிறோம். 

ஆனால் நீங்கள் கேவலம் கெட்டவர்கள். எமது சூபிச சமுகத்தில் ஒருவர் மரணித்தால் அவரின் ஜனாஸா அறிவித்லைக்கூட அறிவிப்பதற்கு அனுமதிக்க கூடாது என்று உங்களின் பள்ளிவாயல்களுக்கு உத்தரவிட்டுள்ளீர்கள். 
இதுதான் நீங்கள் ஊரை வழி நடத்தும் லட்சணமா......?

அடுத்து  ஒரு விடயம். 

இதை சொல்லிக்காட்டக் கூடாது என்றுதான் நாங்கள் பல சந்தப்பங்களில் தவிர்த்து வந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் பச்சோந்திகள். அதனால்தான் நீங்களே எங்களை சொல்லிக்காட்ட வைத்து விட்டீர்கள். 

2017 அலியார் சந்தி கலவரத்தின் பின்னர் ஸஹ்ரானை கைது செய்யும்படி நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது இதற்கு ஆதரவாக உங்களின் சம்மேளனம் சார்பாக எத்தனை பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டீர்கள். அல்லது உங்களின் சமுகத்திலிருந்து எத்தனை பேர் கலந்து கொண்டார்கள் சொல்லமுடியுமா.....? 

ஆனால் ஈஸ்ட்டர் குண்டு தாக்குதலுக்குப்பிறகு காத்தான்குடி மக்கள் ஸஹ்றானுக்கு எதிராக முன்னரே ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள் என ஓர் அரசியல்வாதி உட்பட நீங்களும் எமது ஆர்ப்பாட்ட படத்தினை காட்டி நல்ல பெயர் வாங்கினீர்களே. இது எந்த  ஊரு நியாயம்...?. அய்யாமாரே வாயை திறவுங்கள். இன்னும் நிறைய உள்ளன. விரிவை அஞ்சி தவிர்த்திருக்கிறேன்.

முற்றிலும் நனைந்த பின் முக்காடு எதற்கு என்பதுபோல். நாங்களும் விரக்தியின் விளிம்புக்கே வந்து விடடோம். அதன் பிரதி பலிப்புதான் இப்படியான பிரசுரம் வரக் காரணம். இனி என்ன நடந்தாலும் சரியே.  அல்லாஹ் போதுமானவன்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.
HM அமீர் (அபிமான் ஆசிரியர்)
தீன் வீதி, காத்தான்குடி.
077 515 9942                 

No comments