அரச சேவையும் ராணுவத்தின்கீழ்’ – அபாய சங்கு ஊதுகிறது சஜித் அணி!

“சுயாதீனமாக இயங்கவேண்டிய அரச சேவையும் இன்று இராணுவத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது பயங்கரமானதொரு நிலையாகும். இதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது. ”  

–என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

”ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் இரண்டு ஜனாதிபதி செயலணிகள் உருவாக்கப்பட்டுள்ளன.முப்படைகளைச்சேர்ந்த உயர் அதிகாரிகள் இவற்றில் அங்கம் வகிக்கின்றனர். இதற்கான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் எமது நாட்டு அரச சேவை, இச்செயலணிகளின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. செயலணியால் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டிய நிலை அரச அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது. 

இது அரசியலமைப்புக்கு முரணான செயலாகும்.
அதேபோல் முப்படை தளபதிகளைவிடவும் சிரேஷ்ட நிலையிலேயே அமைச்சின் செயலாளர்கள் இருக்கின்றனர். எனினும், ஜனாதிபதியால் விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் இந்நிலைமை தலைகீழாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
செயலணியால் விடுக்கப்படும் உத்தரவுகளை அரச அதிகாரிகள் நிறைவேற்றதவறும் பட்சத்தில் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு முறையிடும் அதிகாரமும் செயலணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது பயங்கரமான நிலையாகும். நாட்டை மில்டரி ஆட்சியை நோக்கி அழைத்துசெல்லும் பயணத்தின் மற்றுமொரு அங்கமாகும். 

பாதுகாப்பான நாடு, ஒழுக்கமான மற்றும் சட்டத்தை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில்  பாதுகாப்பு அமைச்சில் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கல டயஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரத்ன,சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய, தேசிய புலனாய்வுத் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், அரச புலனாய்வுத் தகவல்கள் சேவையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே  உட்பட 13 பேர் அங்கம் வகிக்கின்றனர்.இவர்களால்  பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை, கட்டளைகளை ஏற்பதற்கு தயாரா என அரச சேவையார்களிடம் கேட்கின்றோம்.

சமூகவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தேடும் பொறுப்பும் இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூகவிரோத செயற்பாடுகள் என்றால் எவை என்பது பற்றி வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. ஊடகவியலாளர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆன்மீக தலைவர்கள், கருத்து சுதந்திரத்துக்காக பாடுபடுபவர்களை ஒடுக்குவதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம்.

பொதுத்தேர்தல் தொடர்பான உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான நாளிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தலையும் விடுத்து அரச சேவையை இராணுவத்தின்கீழ் அரசு கொண்டுவந்துள்ளது. இது அரசியலமைப்பை தலைகீழாக மாற்றிய செயலாகும். இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராயப்பட்டுவருகின்றது.” – என்றார்.sor.ku

No comments