கிழக்கில் இருந்த முஸ்லிம் அடையாளம் இந்த அரசாங்கத்தினால் இல்லாமலாக்கப்பட்டுள்ளது


கிழக்கில் இருந்த முஸ்லிம் அடையாளம் இந்த அரசாங்கத்தினால் இல்லாமலாக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்றார்கள். இந்த அடையாளத்தைக் கூட இந்த அரசாங்கம் இல்லாமலாக்கியுள்ளது என திருகோணமலை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கு மாகாணசபையின் கீழ் முன்பள்ளிப் பணியகம் செயற்பட்டு வருகின்றது. இந்தப் பணியகத்திற்கான தவிசாளர் மற்றும் மாவட்டங்களுக்கான செயலாற்றுப் பணிப்பாளர்கள் ஆகியோர் ஆளுநரினால் நியமிக்கப்படுவார்கள்.

எமது நல்லாட்சி அரசாங்கத்தில் எல்லா இன மக்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏ.அமீர்தீன், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ்.உதுமாலெப்பை போன்றோர் எமது ஆட்சிக் காலத்தில் இதன் தவிசாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தார்கள். எவ்வித பிரச்சினைகளும் இன்றி இந்தப் பணியகத்தின் செயற்பாடுகள் இருந்தன.

தற்போது இந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள முன்பள்ளிப் பணியக தவிசாளர் மற்றும் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர் நியமனங்களில் எந்தவொரு முஸ்லிம் பிரதிநிதித்துவமும் இல்லை. கிழக்கு மாகாணம் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் மாகாணம் என்ற அடையாளச் சின்னம். இந்த அடையாளம் வேறு மாகாணங்களில் இல்லை. கிழக்கு மாகாணத்தில் பாரம்பரியமாக இருந்து வந்த இந்த அடையாளம் இப்போது அரசாங்கத்தினால் இல்லாமல் செய்யப் பட்டுள்ளது.

அரசாங்கத்தின் ஒவ்வொரு செயற்பாடும் தொடர்ச்சியாக முஸ்லிம்களை ஓரங்கட்டும் செயற்பாடாகவும் அவர்களது உரிமைகளை மறுதலிக்கும் செயற்பாடுகளுமாகவே இருந்து வருகின்றது. அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் முஸ்லிம் கட்சிகளோ அல்லது அரசாங்கத்துக்கு சார்பாக போட்டியிடும் எந்தவொரு வேட்பாளரோ இதுவரை இது தொடர்பாக வாய்திறக்கவில்லை.

அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளினதும் அரசாங்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களினதும் நோக்கம் தாங்கள் இந்த அரசாங்கத்தில் இருந்து ஏதாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே தவிர சமுகம் சார்பான இப்படியான பிரச்சினைகளுக்காக குரல் எழுப்பி சமுக நலன் பேணும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதல்ல என்பதை பொதுமக்கள விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் கிண்ணியாவைச் சேர்ந்த எம்.எம்.எம்.தௌபீக், புல்மோட்டையைச் சேர்ந்த ஏ.பீ.தௌபீக் ஆகியோர் மாவட்ட செயலாற்றுப் பணிப்பாளர்களாக செயற்பட்டுள்ளனர். தற்போது இந்த அடையாளம் நமக்கு இல்லை. இந்த அடையாளத்தை இந்த அரசாங்கம் நம்மிடம் இருந்து பறித்து விட்டது. இதனை மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

No comments