ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஓரிருவரை கைது செய்ததுடன் அப்பணி நிறைவு பெறவில்லை பின்னணி ஆராயப்படுகின்றது. சந்தேக நபர்களை தேடிச்செல்லப்பட்டு கைது செய்யப்படுகின்றனர் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச


நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்பு கூடியவிரைவில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்கும் என நம்புகின்றோம் – என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச கண்டி தலதாமாளிகைக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
”தேர்தலை நடத்துவதற்காகவே தேர்தல் ஆணைக்குழு இருக்கின்றது. எனவே, பொதுத்தேர்தலை நடத்துவதற்கு அவ்வாணைக்குழு தயாராக வேண்டும். தேர்தலை நடத்த வேண்டும் என்பது ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்டவர்களின் கடமை மற்றும் பொறுப்பாகும். தேர்தல் என்பது கட்டாயம் நடத்தப்படவேண்டும்.எனவே, நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர், அதனை செய்வார்கள் என நினைக்கின்றோம்.
ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக எதிரணியே தேர்தலை கோரவேண்டும். நாம் எதிரணியில் இருக்கும்போது இதனையே செய்தோம். ஆனால், தற்போது எதிரணி தேர்தலுக்கு அஞ்சுகின்றது. அதனை ஒத்திவைக்க முயற்சிக்கின்றது. எனவே, களநிலைவரம் என்னவென்பது மக்களுக்கு தற்போதே புரிந்துவிட்டது.
அதேவேளை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஓரிருவரை கைது செய்ததுடன் அப்பணி நிறைவு பெறவில்லை. பின்னணி ஆராயப்படுகின்றது. சந்தேக நபர்களை தேடிச்செல்லப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்.” – என்றார்.sor.ku

No comments