சமூக விரோத அரசியல் கலாச்சாரத்தில் இருந்து, எமது அரசியல் குழுக்களையும், பிரமுகர்களையும், தனியாட்களையும் விடுவிப்பதென்பது ஒரே இரவுடன் அல்லது பகலுடன் நடந்து முடிகின்ற கைங்கரியமல்ல.


பிழையான அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே போராடுகின்றோம், தனி நபர்களுடனும், குழுக்களுடனும் பகைமை பாராட்டுவது எமது இலக்கு அல்ல.

நாங்கள் ஒரு பிழையான, கையாலாகாத, ஊழல் மோசடிகள் நிறைந்த, அநீதிகள் அடாவடித்தனங்கள் கோலோச்சுகின்ற வங்குரோத்து, சூதாட்ட, சரணாகதி அரசியல் கலாச்சாரத்திற்கு எதிராகவே எழுந்து நிற்கின்றோம், குரல்  கொடுக்கின்றோம்.

மேற்படி சமூக விரோத அரசியல் கலாச்சாரத்தில் இருந்து, எமது அரசியல் குழுக்களையும், பிரமுகர்களையும், தனியாட்களையும் விடுவிப்பதென்பது ஒரே இரவுடன் அல்லது பகலுடன் நடந்து முடிகின்ற கைங்கரியமல்ல.

ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஒவ்வொரு பிரஜையும் பொறுப்புக்கூறும் கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர், அந்தவகையில் வாக்காளர்கள் மத்தியில் மேற்படி சமூக விரோத அரசியல் கலாச்சாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் எமது முதற்கட்ட பணியாகிறது.

சமூக விரோத அரசியல் கலாச்சாரத்திற்கெதிராக போராடும் பொழுது அதன் முகவர்களோடும், அடியாட்களோடும் அல்லது பாமரத்தனமான ஆதரவுத் தளத்துடனும் மோதிக்கொள்கின்ற, அதிதீவிர முரண்பாட்டு  எதிர்வினையாற்றல்கள் எமது பாதையினை குறிப்பாக இளம் தலை முறையினரை வேறு திசைகளை நோக்கி திருப்பி விடும் அபாயமும் இருக்கின்றது.

அதிலும் குறிப்பாக  சிறுபான்மைச் சமூக தனித்துவ அடையாள அரசியல் இன மத மொழி வேறுபாடுகளை அல்லது உரிமைப் போராட்டங்களை மையப்படுத்திய அரசியல், நாடுதழுவிய பெரும்பனமை சமூகங்களின் பிழையான அரசியல கலாச்சாரத்தில் சங்கமித்து  இரண்டறக் கலந்திருக்கின்ற நிலைமைகளில் அதி தீவிர முரண்பாட்டு அணுகுமுறைகள், எங்கள் இலட்சியப் பயணத்தில் பாரிய தடைக் கற்களை, நெருக்கடிகளை ஏற்படுத்திவிடும் அபாயம் இருக்கின்றது.

இவாரனதொரு பாரிய பணியை முன்னெடுக்கும் பயணத்தில் புத்திஜீவிகள், கல்விச் சமூகம், இளைஞர்கள், யுவதிகள், ப்லாகளிக் கழக மாணவர் சமூகம், சன்மார்க்க அறிஞர்கள், வர்த்தக சமூகத்தினர் என சகல தரப்பினரும் கூட்டுப் பொறுப்புடன் இணைந்து செயற்படுகின்ற அவசியம் இருக்கின்றது, குறிப்பாக ஜனநாயக அரசியல் கட்டமைப்பில் ஊடகங்கள் முதன்மையான பங்களிப்பினை செய்தல் கட்டாயமாகும்.

மனிதர்களின் உணர்ச்சிகளை தூண்டிவிடுகின்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், கருத்து வெளியீடுகள் வன்முறைகளைத் தூண்டிவிடும் பிரயோகங்கள், பிரசுரங்கள் அறிவார்ந்த எமது பணியின் அடையாளங்களாக இருக்க முடியாது, இடம் பொருள் ஏவல் குறித்த சமயோசித சாமர்த்திய நகர்வுகள், அறிவார்ந்த விழிப்பூட்டல்கள், அழகிய கருத்துப் பரிமாறல்கள் எந்தவொரு இலட்சியப் பணியினதும் அடிப்படை அம்சங்களாகும்.

தேசத்திலும், சமூகத்திலும் கோலோட்சுகின்ற பிழையான வங்குரோத்து அரசியல் கலாச்சாரத்திற்குள் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எமது சகோதர இனத்தினர், எமது சகோதர சமூகத்தினர், விசுவாசக் கோட்பாடுகளில்  எமது சகோதரர்கள், உறவினர்கள்,நண்பர்கள் என்ற பரந்துபட்ட சிந்தனை எம்மிடம் இருத்தல் அவசியமாகும். அவர்களுடன் பகைமை பாராட்டுகின்ற வைராக்கிய, வஞ்சம் தீர்க்கும், பழி வாங்கும்  அரசியலை எம்மால் ஒரு போதும் செய்ய முடியாது.

No comments