நீண்ட கால நிவாரணம்: எப்படி சாத்தியமாக்குவது? - பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்-


நிலவும் சூழ்நிலையில் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்கும் குடும்பங்களுக்கான மனிதாபிமான உதவிகளைைச் செய்கின்ற நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு இளைஞர் குழுக்களும் சமூக நிறுவனங்களும் இதனை மேற்கொள்கின்றன. 
4000 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்கு
ப.மு.நி.சம்மேளனமும் ஏற்பாடுகளை செய்து வருவதாகவும்  முன்னாள் ஆளுநர்  ஹிஸ்புல்லா அவர்கள்  இதற்கென  பெருந்தொகை  நிதிப் பங்களிப்பினை செய்துள்ளதாகவும் ஏனைய பலரும் நிதி பங்களிப்புகளை செய்து வருவதாகவும் தெரிகிறது. 

இவை அனைத்தும் பாராட்டுக்குரியவை! இந்த உயர்ந்த மனித நேயப் பணிகளை முன்நின்று மேற்கொள்கின்ற,  அவற்றுக்கு உதவி செய்கின்ற அனைவருக்கும் இறைவன் நிறைவான கூலிகளை வழங்குவானாக.

இடர் காலங்களின் போது நிவாரணங்கள் வழங்கும் வேலைத்திட்டங்கள் நமக்கு புதிதல்ல. கடந்த காலங்களில் இது போன்ற ஏராளமான நிவாரணப் பணிகள் ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக நமது சமூகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் நாம் தற்போது எதிர்கொண்டுள்ள சூழல் முற்றிலும் வித்தியாசமானது. 
உதாரணமாக, வெள்ளம் ஏற்படும்போது நாம் மேற்கொள்ளும் நிவாரணப் பணிகள் ஓரிரு வாரங்களில் நிறைவடைந்து விடும். பாதிக்கப்பட்ட மக்களும் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விடுவார்கள். 

ஆனால், தற்போதைய சூழலில் முழு உலகமும் முடக்கப்பட்டுள்ளது. இது நாம் ஒருபோதும் கண்டிராத சவால் நிறைந்த சூழலாகும். 
இது எப்போது சீராகும்; எப்போது இயல்பு வாழ்க்கை  திரும்பும் என்று எவராலும் எதிர்வு  கூற முடியவில்லை. நம் நாட்டின் நிலைமை சீராகி பொருளாதார  நிலைமைகள்  வழமைக்கு திரும்புவதற்கு குறைந்தபட்சம் 6 மாதம் அளவில் செல்லலாம் என நேற்றைய ஒரு அறிக்கை கூறுகிறது. 
 
இந்த சூழ்நிலையில் நமது நிவாரண பணிகளை முற்றிலும் வித்தியாசமாக திட்டமிட்டு ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது.
தற்பொழுது பரவலாக வழங்கப்பட்டு வரும் உலர் உணவுப் பொதிகள் ஒரு சில நாட்களுக்கே போதுமானதாகும். சில நேரம் இன்னும் ஓரிரு தடவைகள் இதனை வழங்கலாம். அப்போதும் கூட அது ஒரு முழுமையான தீர்வைத் தரப் போவதில்லை. ஏனெனில்,  தற்போதைய நிலவரங்களை பார்க்கும் போது மூன்று மாதங்களுக்காவது இதனை தொடர்ச்சியாக வழங்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது. 

இந்த இடத்தில்தான் நமது நிவாரண நடவடிக்கைகளை வேறு ஒரு கோணத்தில் நாம் திட்டமிட வேண்டியுள்ளது. 

நாம் தற்போது முகம் கொடுத்துள்ள நிலைமை உலகளாவிய அளவில்  பிரகடனம் செய்யப்பட்டுள்ள 'அவசரகால' நிலைமை ஆகும்.
இச்சூழலில் எல்லோருடைய தொழில் நடவடிக்கைகளுமே முடக்கப்பட்டுள்ளன. 
எல்லோரது வருமானமும் ஸ்தம்பித்து உள்ளது. எல்லோருக்குமே தேவைகள் இருக்கின்றன.

 இச்சூழலில் உணவு மற்றும் மருத்துவ தேவை என்பன தவிர்க்கமுடியாத அவசியமான, அடிப்படையான விடயங்களாகும். 
மருத்துவ சேவைகளை அரசாங்கம் நூறுவீதம் இலவசமாக வழங்குகின்றது. இந்நிலையில் 'நாளாந்த உணவு' என்கின்ற அடிப்படை தேவை  விடயத்திலேயே நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
அப்படியென்றால் யாருக்கான உணவுத் தேவையை நிறைவு செய்ய வேண்டியது நம்மொருவரினதும் கடமையாக மாறுகிறது?எப்படிப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக உதவ வேண்டியது நமது சமூகக் கடமையாக இருக்கின்றது?

இந்த இடத்தில்தான் நாம் ஊன்றிக் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் உள்ளது. அதாவது,  "வெளி உதவி கிடைத்தாலேயன்றி உணவின்றி  பட்டினி கிடக்கக் கூடிய"  அடிமட்ட கஷ்ட நிலையிலுள்ள குடும்பங்களை நாம் மிகக் கவனமாக அடையாளம் காண வேண்டும். அவர்களின் அடிப்படை உணவுத் தேவைகளுக்கான தொடர்ச்சியான உதவிகளை அடுத்த மூன்று மாதங்களுக்காவது வழங்குவதற்கு நாம் திட்டமிட வேண்டும். இவ்வுதவியினை பெற தகுதியான குடும்பங்களை ஒவ்வொரு பள்ளிவாயல்  மஹல்லா அடிப்படையில் தேர்ந்தெடுப்பதே பொருத்தமாகும்.

காத்தான்குடி மற்றும் அயல் கிராமங்களிலுள்ள பள்ளிவாயல் மஹல்லாக்களில் மொத்தமாக 18741 குடும்பங்கள் இருக்கின்றன. 

பட்டினி அபாயத்தை எதிர்கொள்ளும் குடும்பங்களை மிக கவனமாக தெரிவு செய்தால் அதன் எண்ணிக்கை 2000 அளவில் இருக்க முடியும் என்று அண்ணளவாக கணிக்கப்படுகிறது. இது மொத்த குடும்ப எண்ணிக்கையில் அண்ணளவாக 10% ஆகும். இந்த 2000 குடும்பங்களும் தமது அடிப்படை உணவுத் தேவைகளை நிறைவு செய்வதற்கான தொடர்ச்சியான உதவிகள் வழங்கப்பட வேண்டும். 
சராசரியாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதமொன்றுக்கு 25,000 ரூபாய்க்கு குறையாத உதவிகள் செய்யப்படவேண்டும். நிறுவன ரீதியாக பணம் சேர்த்து பொருட்களை பொதி செய்து இந்த 2000 குடும்பங்களுக்கும் நீண்ட காலத்திற்கு நிவாரணங்கள் வழங்குவது என்பது சாத்தியமாகாது.

 இதற்கு மாற்று வழியாக வேறு ஒரு அணுகுமுறை தேவைப்படுகிறது 
அதாவது,   அடையாளம்  காணப்படும் இந்த 2000 குடும்பங்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாதத்திற்கு அல்லது இரண்டு மாதங்களுக்கு அல்லது முற்றாக மூன்று மாதங்களுக்கு என பொறுப்பேற்க கூடிய வசதியும் மனோநிலையும் உள்ளவர்களை அடையாளப்படுத்த வேண்டும். 
வழமையாகவே நிதியுதவி செய்யும் தனவந்தர்களோடு மாத்திரம் இதனை மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை. 25000, 50000, 75000  என உதவி செய்யக்கூடிய நிலையிலுள்ள அனைவரும் இதற்கு கடமைப்பட்டவர்களே.
பள்ளிவாயல்கள் மூலமாகவும் சமூக ஊடகங்கள் மூலமாகவும் இதற்கான பொது அழைப்புகள் விடுக்கப்பட வேண்டும். தாமாக முன்வந்து ஒவ்வொரு குடும்பங்களது உணவுத் தேவையை பொறுப்பேற்பதன் முக்கியத்துவமும் பெறுமதியும் பரவலாக உணர்த்தப்பட வேண்டும், ஊக்கப்படுத்தப்பட வேண்டும்.

இன்னுமொரு முக்கிய விடயம்!

இந்த மனிதாபிமானப் பணிகளை 'முஸ்லீம்கள் குடும்பங்கள்' என மாத்திரம் மட்டுப்படுத்தவும் கூடாது. எமது அயல் பிரதேசங்களில் உள்ள சகோதர சமூகங்களைச் சேர்ந்த ஏராளமான குடும்பங்களும் இதே கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள். அவர்களிலிருந்து  1000 குடும்பங்களையாவது இதில் இணைத்துக் கொள்ள வேண்டும். 

மொத்தத்தில் 3000 குடும்பங்களை 3 மாதங்களுக்கு பராமரிக்கும் திட்டமாக இது மாற வேண்டும்.

இதனை மிக சரியாக ஒழுங்குபடுத்தவும் ஊக்கப்படுத்தவும் முடியுமென்றால்,  இந்த மூவாயிரம் குடும்பங்களையும் பராமரிப்பதற்கு அவசியமான மனோநிலையும் வசதியும் கொண்ட தனவந்தர்களையும் தனி நபர்களையும் அடையாளப்படுத்துவது சாத்தியம் என்றே நம்புகின்றேன்.


இத்திட்டம் முறையாக ஒருங்கிணைக்கப்பட முடியுமென்றால் வெளிநாட்டில் உள்ள நமது சகோதரர்களே ஏராளமான குடும்பங்களின் விடயங்களை பொறுப்பேற்க முன் வருவார்கள்.

எனவே, இந்த ஆலோசனைகள் பற்றிய எல்லோரது கருத்துக்களும் மிக மிக அவசியமாகும். அந்த வகையில்,
ஏற்கனவே களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்ற சகோதரர்கள் பலரோடும் நேற்றைய தினம் உரையாடினேன். அவர்கள்  இந்த ஆலோசனைகளை பெரிதும் வரவேற்றார்கள். அதுபோலவே நமது சம்மேளன, சமூக பிரதிநிதிகளுடனும் பேச உத்தேசித்துள்ளேன்.

நாம் எதிர்கொண்டுள்ள மிகவும் சவால் மிக்க இந்த சூழலில் நமது மனிதநேயப் பணிகளை அர்த்த பூர்வமாகவும் தொடர்ச்சியாகவும் ஒழுங்கமைத்துக் கொள்வதற்கு இந்த ஆலோசனைகள் உதவும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இந்த ஆலோசனைகள் தொடர்பான உங்களது அபிப்பிராயங்களையும் மேலதிக ஆலோசனைகளையும் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.

நமது தூய எண்ணங்கள்  நிறைவேற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்!

குறிப்பு:
உங்களது அபிப்பிராயங்களையும் மேலதிக ஆலோசனைகளையும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அவர்களின் முகநூல் பக்கத்தின் பின்னூட்டலில் பதிவிடுங்கள்..

No comments