இக்கட்டான சூழ்நிலையில் காத்தான்குடி சம்மேளனத்தின் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்.


சிரேஷ்ட சட்டத்தரணி 
MIM.அஸ்வர் 

எமது நாட்டின்  இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாம் எமது மார்க்க சம்மந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரி ஏனைய விடயங்களாக இருந்தாலும் சரி  கவனமாகவும், புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என நாம் பணிக்கப்பட்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில்   அவசரமாக முடிவுகள் எடுக்க வேண்டிய தருணத்தில் காத்தான்குடியின் தாய் நிறுவனமான சம்மேளனம் இருப்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இப்போது நாம் சந்திக்கும் இக்கட்டான காலகட்டத்தில்  ஏழை, எழிய மக்களில் வறுமை, துன்பம், கஷ்டமான நிலையில் உதவாத சம்மேளனம் மற்றும் அரசியல்வாதிகள் எல்லாம் இருந்துதான் என்ன பயன் என்றே கேட்கவிரும்புகின்றேன்.

நான் உட்பட தனவந்தர்கள், வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள், பொது அமைப்புகள், ஊடகவியலாளர்கள், அரச நிறுவனங்கள், மற்றும் தனிநபர்கள் என பலரும் சமைத்த உணவு, அத்தியவசியப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள் என சகலவற்றினையும்  வறுமையான குடும்பங்கள், அவசியம் கொடுக்க வேண்டிய குடும்பங்கள், அயலவர்கள் , ஏழை, எளியோர் போன்றோருக்கு கொடுத்துதவி வருகின்றனர் இது பாராட்டுக்குரிய விடயமாகும்.

யார், எதனை செய்த போதும் சம்மேளனத்திற்கு என்று ஒரு கடமைப்பாடு விசேடமாக உண்டு. சம்மேளனம் ஊடாக நிவாரண உதவிகளை செயல்படுத்தப்படும் போதுதான் (குறிப்பாக  மஹல்லா றீதியாக ) எல்லா மக்களுக்கும் 
அது சரியாக சென்றடையும் என்பதுடன் மிக கூடுதலான நிதியை செலவு செய்யக் கூடிய திறன் சம்மேளனத்திற்கே உள்ளது என்பதே எனது கருத்தாகும்.

காத்தான்குடி சம்மேளனத்தின் கடந்த கால செயல்பாடுகள் வரவேற்கத் தக்கதாக அமைந்திட்ட போதிலும்  இவ்வாறான இக்கட்டான நிலைமையில் சம்மேளனத்தில் செயல்பாடு கூடுதலாக எதிர்பார்க்கப் படுகின்றது.

சம்மேளனத்தின் பெயரில் வங்கியில் இருக்கும் நிதியில் இருந்து நிவாரண பணியை முன்னெடுக்க முன்வர வேண்டும். இதைவிடுத்து நிதிகளை திரட்டி நிவாரணம் வழங்குவோம் என்று இருப்பது சரியான முடிவாக இருக்க முடியாது. சம்மேளனமானது இதற்காக வேண்டி அனர்த்தம், அத்தியவசிய சேவை என்ற அடிப்படையில் அவசரமாக ஒரு மசூறாவினை மேற்கொள்ள வேண்டும். இதற்காக வேண்டி சட்டத்தரணிகள், வைத்தியர்கள், பொறியியலாளர்கள், துறை சார்ந்தவர்கள், கல்வியாலர்க, வர்த்தகர்கள் மற்றும் முகாமைத்துவ துறை சார்ந்தவர்களும் என ஒரு சுயாதீனமான குழு ஒன்றினை ஏற்படுத்தி  அதனூடாக உடன் செயல் படல் வேண்டும்.

கொரோனாவின்  தாக்கம் முழு உலகையுமே உழுக்கிக் கொண் டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் இலங்கை அரசாங்கத்தின்  துணிகரமான செயல் பாட்டினால் கொரோனாவின் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களைப் பாதுகாக்கின்ற விடயத்தில் பாரிய அர்ப்பணிப்புடன் நாட்டின் சுகாதாரத்துறை செயல்பட்டு வருவதனை காண முடிகின்றது.

அதனடிப்படையிலேயே நாடு இன்று முடக்கப்பட்டு அதிலும் குறிப்பாக பொலிஸ் ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப் பட்டதனூடாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு இந்த  கொரோனாவின் தாக்கம் அதிகரித்து விடக் கூடாது  என்  அரசாங்கம் உயர்ந்த நோக்குடன் நாட்டின் சுகாதாரத்துறை, போலீஸ் துறைகள் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்து போராடி வருகின்றனர்.

இருந்தபோதிலும் இவ்வாறான சூழ்நிலையில் மக்களின் அன்றாட வாழ்வு கேள்விக்குறியாகவே உள்ளது. பொருளாதாரம் படைத்தவர்கள் தங்களது சக்திக்கு உட்பட்ட வகையில் பொருட்களை கொள்வனவு செய்து கொண்டாலும் அன்றாடம் தொழில் செய்பவர்கள், அங்காடி வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளிகள் தொழில் இன்றி வீடுகளில் முடக்கப்பட்டு இருப்பதனால் அவருடைய ஒருநாள் உணவுக்குக்  கூட பல்வேறு அசௌகரியங்களை கஷ்டங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக் கின்றார்கள் ஆகவேதான் காத்தான்குடியை பொருத்த மட்டில் இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக வேண்டி இது நிமிடம் வரைக்கும் காத்தான்குடி சம்மேளனம் ஒரு ஆக்கபூர்வமான புத்திஜீவிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை என்றே அறிய முடிகின்றது.
இது காலத்தின் தேவையாகும்.

சம்மேளனமானது இதற்காக வேண்டி மஹல்லா  ரீதியாக வசதிபடைத்தவர்கள் தவிர்ந்த ஏனைய குடும்பங்களுக்கு உடனடியாக ஏதோ ஒரு வகையில் மிகக் கூடுதலான நிதி அல்லது பொருட்களை  வழங்குவதற்கு முன் வர வேண்டும். இது தொடர்பில் மார்க் அறிஞர்களின் ஆலோசனைகளையும் சம்மேளனம் கவனத்தில் எடுப்பது முக்கியமாகும்.

இதுவரையில் சம்மேளனத்திற்குரிய வங்கியில் வைப்பிடப் பட்டுள்ள பணம் மற்றும் எல்லா வளங்களையும் ஒன்றுதிரட்டி எமது மக்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்து முழு நாட்டுக்கும் மட்டுமல்ல முழு உலகிற்கும் ஒரு முன்னுதாரணமாக  இருக்க வேண்டும் என நான் இந்தக் அறிக்கையால் உங்களை வேண்டிக் கொள்கின்றேன்.

No comments