கொரோனா நோய்க்கிருமி பரவுவதைத் தடுப்பது தொடர்பாகப் பல தீர்மானங்கள் இன்று அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளன:


அரசாங்கம் ஜனவரி முதல் பின்பற்றிய வழிமுறைகளின் மூலம் கொரோனா நோய் நாட்டிற்குள் வருவதனைத் தடுப்பதற்கு முடியுமாக இருந்தது. 

நோய்க்கிருமி பரவிய நாடுகளில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்காக செயலணி ஒன்றை உருவாக்கிய சில நாடுகளுள் இலங்கை முன்னிலை வகிக்கின்றது.

அந்த முன்னேற்றத்தை மேலும் அதிகப்படுத்தி மக்களின் சுகாதார நிலையை பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் இயலுமான அளவில் மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களும் நானும் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளோம். 


கொரோனா நோய்க்கிருமி பரவுவதைத் தடுப்பது தொடர்பாக இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே நாம் இந்த பணிப்புரையை விடுத்தோம்.

நோய்க்கிருமியின் பூகோள அளவிலான பரவுதல் தொடர்பாக நான் விளக்கியதுடன், ஐரோப்பாவில் பல நாடுகளில் வேகமாக அது பரவிக்கொண்டிருப்பதால் - பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் மிகப் பாரதூரமான நிலைமை காணப்படுகின்றது என்பதனையும் தெளிவுபடுத்தி- அதன் காரணமாக, ஐரோப்பியர்களுக்கு வீசா வழங்குவதை இரண்டு வாரங்களுக்கு இடை நிறுத்துமாறு பணிப்புரை விடுத்தேன்.


ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்களை 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தவும் இன்று தீர்மானம் எடுக்கப்பட்டது. 

கொரோனா நோய்க்கிருமி தொற்றுக்குள்ளானதாக இனம்காணப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களை சந்தித்தவர்களை அடையாளம் காணுவதற்காக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களைக் கண்காணிப்புக்கு உட்படுத்த மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மிக விரிவாக இன்று கலந்துரையாடப்பட்டது.


அவர்கள் பயணித்த இடங்கள் மற்றும் சந்தித்தவர்கள் பற்றி தொடர்ச்சியான விசாரணைகளை மேற்கொண்டு, அவர்களை நோய்த் தடுப்பு கண்காணிப்புக்கு உட்படுத்துமாறு நான் ஆலோசனை வழங்கினேன். 

நோய்க்கிருமி நாட்டினுள் பரவுவதைத் தடுப்பதற்கு மக்கள் அதிகளவில் கூடும் இடங்கள் மற்றும் விழாக்களை இயலுமானளவு குறைத்துக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது. 


நோய்த்தடுப்புச் செயலணிக்கு நிலையான செயலகமொன்றை நிறுவி, தகவல்களை ஒன்றுசேர்த்து, அய்வு செய்து, தீர்மானங்களை எடுக்குமாறு நான் பணிப்புரை விடுத்தேன்.

நோயை கண்டுபிடிப்பதற்காக  மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளைத் துரிதப்படுத்துவதற்கு உலக சுகாதார அமைப்பின் உதவிகளுடன் பரிசோதனை உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள விடயத்தையும் நான் இன்று குறிப்பிட்டேன். 

இலங்கையில் நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு நாம் மேற்கொண்ட வழிமுறைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க உலக சுகாதார அமைப்பு தயாராக உள்ளது என்பதனையும் நான் மேலும் குறிப்பிட்டேன்.

முகக் கவசங்களை எந்தவொரு இடத்திலும் பெற்றுக்கொள்ளும் வகையில்  முறையாக விநியோகிப்பதற்கான ஒரு பொறிமுறையை முன்னெடுப்பது பற்றியும் இன்று ஆராயப்பட்டது. கட்டுப்பாட்டு விலையின் கீழ் எந்தவொரு நபருக்கும் முகக் கவசத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வசதிகளை ஏற்படுத்துமாறு நான் ஆலோசனை வழங்கினேன். ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முகக் கவசங்களை உற்பத்தி செய்யக்கூடிய இயலுமை கொண்ட நிறுவனங்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இன்றைய கலந்துரையாடலின் போது குறிப்பிடப்பட்டது. 

நாளை தொடக்கம் பொதுபோக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்து மற்றும் புகையிரதங்கள் கிருமி ஒழிப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும். அதற்காகப் பாதுகாப்பு படையுனரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும். 

சீனா தற்போது மிகச் சிறப்பாக கொரோனா நோய்க்கிருமி பரவுவதைக் கட்டுப்படுத்தியுள்ளது. சமூகச் செயற்பாடுகள் மற்றும் நடைமுறைகளை நோய்த் தடுப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க சீனா முக்கியத்துவம் கொடுத்தது. அந்த நாடு பின்பற்றிய வழிமுறைகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துமாறு இன்று ஆலோசனை வழங்கப்பட்டது. 

அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளை முன்னெடுத்தல், மற்றும் பாடசாலை மற்றும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை இணையத்தின் ஊடாக வீட்டிலிருந்து பெறத்தக்க முறைகளைச் செயற்படுத்திப் பரீட்சித்துப் பார்க்க இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள முடியுமெனவும் நான் சுட்டிக்காட்டினேன்.

இலத்திரனியல், அச்சு மற்றும் சமூக ஊடகங்கள் என்பன - நோய்க்கிருமி தொடர்பாக மக்களைத் தெளிவுபடுத்த வேண்டுமே தவிர, சமூகத்தில் குழப்ப நிலையைத் தோற்றுவிக்கும் வகையில் செயற்படாதிருத்தலின் முக்கியத்துவம் பற்றியும் இன்று தெளிவுபடுத்தப்பட்டது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர, சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments