முஸ்லிம்களின் தேசியப் பிரச்சினைகளின்போது சாய்ந்தமருது மக்கள் கட்சியுடன் கைகோர்த்து நின்றனர்: மு.கா. உயர்பீடக் கூட்டத்தில் ரவூப் ஹக்கீம்

சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம்களுடைய தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் காங்கிரஸ{டன் சேர்ந்திருந்திருந்தனர். தேசிய ரீதியான பிரச்சினைகளில் ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸை கைவிடாதவர்கள். இந்தக் கட்சியை காப்பாற்றுவதற்காக பலவழிகளில் உதவி செய்தனர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


கட்சியின் 29ஆவது பேராளர் மாநாட்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (21) தாருஸ்ஸலாமில் நடைபெற்ற கட்சியின் கட்டாய உயர்பீடக் கூட்டத்தில் விளக்கமளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் கூறியதாவது,

சாய்ந்தமருது நகரசபை பற்றிய வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்தவுடன் அது சம்பந்தமான நிறைய கதையாடல்கள் வந்துகொண்டிருந்தன. நான் ஊடகங்களுக்கு ஒன்றும் பேசப் போகவில்லை. ஆனால் இந்த விடயத்தை நான் கிட்டத்தட்ட ஒன்றரை வருடகாலமாக கையாண்டு வருகின்றோம். அதிலும் கடந்த ஆறு மாதகாலமாக இதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றோம்.

அதுவும் இதில் நாங்கள் நேர்மையாக நடந்து கொண்டதென்று இப்போது தங்களது தேவைகளுக்காக விமர்சனம் செய்தாலும் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கும், எங்களுடைய சாய்ந்தமருது கட்சியின் உறுப்பினர்களுக்கும் தெரியும். சில விடயங்களை செய்வதற்கு நான் எவ்வளவு இலகுவான முயற்சிகளை செய்தேன் என்று உங்களுக்குத் தெரியும். இதில் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், உயர்பீட உறுப்பினர்கள், கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் ஆட்களையும் பாராளுமன்றத்திற்கும், என்னுடைய வீட்டிற்கும் பல தடவைகள் அழைத்து பேசி ஒரு தீர்வைக் காண்பதற்கு முயற்சித்தோம்.

உண்மையில் நான் வருத்தப்படுகின்ற விடயம் என்னவென்றால், எல்லோரும் நினைக்கின்ற மாதிரி இப்படியானதொரு விடயத்தை புதிய அரசாங்கம் வந்து அப்பட்டமான சுயநல அரசியலில் அறிவிப்பைச் செய்யலாம் என்றதொரு சாத்தியப்பாடு சம்பந்தமாக நாங்கள் எல்லோரிடத்திலும் பேசியிருக்கின்றோம்.

எனவே, இது சம்பந்தமாக நாங்கள் முந்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக இது சம்பந்தமாக உளப்பூர்வமாக கவனத்தில் எடுத்து ஒரு தீர்வுக்கு வரவேண்டும் என்பதற்கான முயற்சிகளை செய்திருக்கின்றோம். அதேநேரம் முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவின் ஆலோசகருடன் சேர்ந்து நானும் ஹரீஸ் எம்.பி. மற்றும் செயலாளர், சம்பந்தன் ஐயா, சுமந்திரன் எம்.பி ஆகியோரையும் வைத்து கல்முனை தமிழ் பிரதேச செயலக விவகாரத்துடன் சேர்த்து முடிச்சிப் போடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியே அதை அமைச்சரவையில் கூறி, அதையும் காரணம் காட்டித்தான் நாங்கள் இதை இல்லாமல் செய்ய வேண்டுமென்று சொல்லியிருப்பது ஆபத்தான விடயம். ஜனாதிபதி இதை நுணுக்கமாகப் பார்த்திருப்பார் என்று எதிர்பார்;த்திருக்க முடியாது. ஜனாதிபதியின் காதுக்கு எட்டி அதை ரத்துச் செய்யவேண்டிய விவகாரத்துடன் முடிச்சிப் போடப்பட்டிருக்கின்றது. இதுபற்றி நாங்கள் உணர்ந்ததனால்தான் தொடர்ந்தும் சொல்லி வந்தோம்.

இதில் எத்தனையோ போராட்டங்கள் நடந்திருக்கின்றது. கல்முனையில் பௌத்த பிக்குமாரை கொண்டு சென்று அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து, உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து, கொழும்பிலிருந்து பௌத்த பிக்குகள் சென்று இதை பூதாகரமான பிரச்சினையாக்கி, யாருக்கும் இதன் அடி, நுனி தெரியாமல் குழப்பியடித்து என்னன்னவெல்லாம் செய்யலாமோ அவற்றை செய்துள்ளனர்.

சாய்ந்தமருது மக்கள் முஸ்லிம்களுடைய தேசிய பிரச்சினைகளில் முஸ்லிம் காங்கிரஸ{டன் சேர்ந்திருந்திருந்தனர். ஒருபோதும் முஸ்லிம் காங்கிரஸை அவர்கள் தேசிய ரீதியான பிரச்சினைகளில் கைவிடாதவர்கள். இந்த கட்சியை காப்பாற்றுவதற்காக தேசிய ரீதியில் அந்தஸ்து மானம், மரியாதை என்றும், முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் என்று வருகின்ற போதும் கட்சியுடைய தீர்மானங்களோடு நின்ற ஒரு ஊர் சாய்ந்தமருது என்றால் அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.

சாய்ந்தமருது விவகாரத்தில் நான் கொடுத்த ஒரு பொருத்தப்பாடு என்பதனால் அதனை நாங்களே செய்துதர வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறார்கள். அது எங்கள் தலைமீது சுமத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபையின் நிலைமை பற்றியும் கவனிக்க வேண்டிய நிலைமை இருந்தது. சாய்ந்தமருது தவிர்ந்த விடயத்தில் கல்முனை பிரதேசத்தின் இன விகிதாசார சமன்பாடு விடயத்தில் எல்லையிடல் விடயத்தில் சர்ச்சைகள் இருந்தன. இன விகிதாசார சமன்பாடு பற்றிய பிரச்சினை இருந்தது.

இது சம்பந்தமாகவும் நான் சில விடயங்களை பேசியிருந்தேன். இந்த விடயத்தை ஊதிப் பெருப்பித்து, அவசர குடுக்கையாக அரசாங்கம் நடந்துகொண்டது. முஸ்லிம் அரசியல் தலைமை என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் இதில் போய் மூக்கை நுழைத்தார்கள். வருகின்ற தேர்தலில் அரசியல் இலாபம் பெறுவதற்கு அத்தகையோர் எத்தனித்தார்கள். எல்லோருக்கும் அரசியல் ஆசை வந்துவிட்டது.

இது முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்து போகின்ற விடயம். கல்முனை, சாய்ந்தமருது இரண்டும் கட்சிக்கு முக்கியமானவை. இந்த விவகாரத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் கூடுதலான நேரத்தைச் செலவழித்துள்ளது. சாய்ந்தமருது பள்ளி நிர்வாகத்திற்கும் இது நன்கு தெரியும். பாராளுமன்றத்திலும் வெளியிலும் எனது வீட்டிலும் சம்பந்தப்பட்ட அமைச்சருடனும் சாய்ந்தமருது விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் முக்கியஸ்தர்களுடன் பல சந்திப்புகளில் நாங்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். இதில் நாங்கள் இதய சுத்தியுடன் ஈடுபட்டோம்.

சாய்ந்தமருது நகரசபை வர்த்தமானி அறிவித்தலில் சுத்தமான அரசியல் சுயநலம் மேலோங்கியிருந்தது. எங்களைப் பொருத்தவரை எல்லா விடயங்களையும் உரிய முறையில் கவனத்தில் எடுத்து, ஆக்கபூர்வமான தீர்வை அடையப் பெறுவதில் அதிக அக்கறை செலுத்தியிருக்கிறோம்.

சாய்ந்தமருது விடயத்தில் தனிநாடு கொடுத்த மாதிரி இனவாதிகள் பார்க்கின்றனர். இதனோடு கல்முனை செயலக விவகாரத்தை முடிச்சுப்போட்டு பார்க்கப்படுகிறது. அத்துடன் குரங்கு அப்பம் பிரித்த கதையாகவும் அது மாறிவிட்டது. அரசாங்கமும் ஆழம் தெரியாமல் காலைவிட்டு விட்டனர். காகம் வந்து அமர பனம் பழம் விழுந்த கதையாகிவிட்டதும் நினைவுக்கு வருகிறது. அரசாங்கத்திற்கு பக்கவாத்தியம் வாசிக்கும் இனவாதக் கும்பலின் கை ஓங்கிவிட்டது. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினையையும் யாரும் உதாசீனம் செய்துவிட முடியாது. அவர்கள் மத்தியிலும் அச்ச உணர்வொன்று இருக்கின்றது.

அம்பாறை மாவட்ட அரசியல் என்பதே ஒரு தேசியப் பிரச்சினை. அதனை சாய்ந்தமருது மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தற்காலிகமாக அரசியல் குளிர்காய வருகின்றவர்களுக்கு சோரம் போய்விடக் கூடாது. இதில் குதூகலிக்கக்கூடாது. சாய்ந்தமருது வர்த்தமானி விடயத்திலும் முஸ்லிம் காங்கிரஸ் சம்பந்தப்பட்டு விட்டதாக சிலர் நினைக்கலாம். அப்படியான எதுவும் இல்லை. மிகவும் கவனமாகத்தான் இந்த விடயத்தை கையாள வேண்டும். மொத்தத்தில் நாங்கள் மிகவும் நேர்மையாக நடந்துகொண்டிருக்கிறோம். இதற்கு தீர்வு காண்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ_ம் தமிழ் தேசிய கூட்டணியும் ஒன்றாக ஒத்துழைக்க வேண்டும். இதில் ஒளிவு மறைவுக்கு இடமில்லை என்றார்.

No comments