கசப்பான உண்மை.........


 
bitter truth கசப்பான  உண்மை.

கிழக்கிலிருந்து அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கி அதற்கு தலைவராக வந்த போது தெற்கிலிருந்த முஸ்லிம் தலைவர்களுக்கு அது பிடிக்கவில்லை.

தெற்கு என்பது இலங்கையின் அரசியல் பரிபாஷையில் வட கிழக்கு தவிர்ந்த அனைத்தும்.

பதியுதீன் மஹ்மூத், ஏ சீ எஸ் ஹமீத், எம் எச் முஹம்மத் கடைசியில் ஏ எச் எம் பெளஸி உட்பட இன்னும் பலருக்கு அஷ்ரப் கண்ணுக்குள் விழுந்த கந்தல் போல இருந்தார்.

அந்த எரிச்சலுக்கு அவர் கிழக்கான் என்பதை தவிர வேற வலுவான காரணம் ஒன்றும் அப்போது இருக்கவில்லை.

அஷ்ரபால் எம் பி பதவிகளை பெற்றுக்கொண்ட சட்டத்தரணி ஸுஹைர் மற்றும் அசூர் போன்ற தெற்கின் மேட்டுக்குடி முஸ்லிம் பிரமுகர்கள் சந்தோசமாக இருந்தார்கள். ஆனால் சிலவேளை அந்த பதவிகள் கிடைத்திராவிட்டால் அவர்களும் கூட கிழக்கான் என்ற துவேசக்கருத்துகளை வெளியிட்டிருக்க கூடும்.

அந்த காலப்பகுதிகளில் கிழக்கு முஸ்லிம்களுக்கு அஷ்ரபின் மீதான கிழக்கான் விமர்சனம் பெருத்த எரிச்சலை உண்டு பண்ணியது.

2000 ம் ஆண்டு இறைவனின் விதிப்படி அஷ்ரபின் மரணத்தால் ரஊப் ஹகீம் தனது 40 வது வயதில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரானார்.

அதன் பின்னர் கோசம் மாறி ஒலிக்கத்தொடங்கியது.

கிழக்கில் உள்ள மாற்று முஸ்லிம் கட்சிகளின் அரசியல் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் ஹகீமை கண்டியான் என்று அழைக்கத்தொடங்கினார்கள்.

முன்னர் தெற்கில் உள்ள முஸ்லிம் தலைவர்களும் மக்களும் கிழக்கான் எம்மை ஆள வருவதா என்று கேட்ட கேள்விகளில் சொற்கள் இடம் மாறி பிரதியீடாகின.

கண்டியான் கிழக்கானை ஆள வருவதா என்று கேட்க தொடங்கினார்கள்.

ஹகீம் ஒரு சட்டத்தரணி மும்மொழிகளிலும் புலமை கொண்ட முதிர்ச்சியான அரசியல்வாதி.

அவரை அறிவால், அரசியல் சாணக்கியத்தால், புலமையால், மொழி வளத்தால் போட்டியிட்டு வெல்ல முற்படுதல் நேர்மையான அரசியல் தலைவர்களுக்கு அழகாகும்.

ஹகீமை விடவும் ஆளுமையாக போற்றப்பட்ட அஷ்ரபை தெற்கின் விமர்சனங்களால் ஒரு போதும் வீழ்த்த முடியவில்லை, ஒரு கட்டத்தில் ஆனானப்பட்ட பதியுதீன் மஹ்மூத் அவர்களே அஷ்ரபின் திறந்த வெளி வாகன பவனியில் ‘பச்சையும் வேண்டாம் நீலமும் வேண்டாம்’என்ற கோசத்தோடு ஊர்வலம் போனார்!

நமக்கென்று ஒரு அரசியல் வரலாறு இருக்கிறது.
நாமெல்லோரும் நடந்து வந்த வழித்தடமிருக்கிறது.

இந்த பின்னணியில் பழையனவற்றையெல்லாம் முற்றாக மறந்து அற்பமான சதி வலைகளில் விழுந்து கொண்டு சேறு பூசி விளையாடுகிற படு மோசமான அரசியல் கலாச்சாரத்தை நோக்கி முஸ்லிம் சமூகத்தை கொண்டு சேர்க்க முயலாதீர்கள்.

1.அது மிகவும் அருவருப்பாய் இருக்கிறது.

2. அது அவ்வளவு இலகுவில் சாத்தியப்படக்கூடியதும் அல்ல.

ஏனென்றால் பட்டறிவு பெற்றிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகம் ஓரளவு புத்தி ஜீவித்துவ அரசியல் நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.

அதற்கு இந்த கிழக்கு, தெற்கு வேறுபாடுகள் தெரியாது.

அதனைப்பேசுகிறவர்களை, எழுதுகிறவர்களை கண்டால் அருவருப்பாய் இருப்பதாக சொல்கிறார்கள்!

எதிலும் வெற்றி அல்லது அடைவு என்பது பலூனை போல வீக்கமாக ஆகிவிடக்கூடாது.

அது நிரந்தரமற்றது.

ஆரோக்கியமான போட்டியும், விமர்சனமும் ஒரு சமூகத்தின் நிலையான வெற்றிக்கு வழிசமைக்கும்.

எண்ணத்தில் எழுத்தில் நிதானம் கொள்வோம்.

ஏகாந்தி

No comments