எனது வேலைகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது ! ஜனாதிபதி

தேவையற்ற அதிகார தலையீடுகள் மற்றும் அதிக சட்டதிட்டங்களை நீக்கி உள்நாட்டு தொழில் முயற்சியாளர்களுக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும் நாட்டில் புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்த வேண்டியுள்ளதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

இதன்மூலம் வர்த்தக துறைக்கு வசதிகளை வழங்கக்கூடிய எளிமையான வினைத்திறன்மிக்கதும் முறையானதுமான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டும். இதற்காக விரிவான உதவியை வழங்குவதற்கு சட்டத்துறையை சேர்ந்தவர்களுக்கு முடியுமென்றும் நேற்று முன்தினம் (14) நீர்கொழும்பில் நடைபெற்ற “தேசிய சட்ட மாநாடு 2020”தில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வருடாந்தம் ஏற்பாடு செய்யும் மாநாட்டின் இவ்வருட கருப்பொருள் “இலங்கை நீதி மற்றும் வர்த்தக மையம்: நோக்கு, சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்பதாகும்.

விரிவான பல்வேறு துறைகளினூடாக துரிதமாக அபிவிருத்தியடைந்துவரும் தொழிநுட்ப முறைமைகள் பூகோள வர்த்தக மற்றும் தொழிற்துறைகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த மாற்றங்களுடன் இலங்கையும் முன்னோக்கிப் பயணிக்க வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார். துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி புதிய மாற்றங்களின் ஊடாக வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

துரித தொழிநுட்ப மாற்றங்களுடன் உலகின் மிக முக்கிய சந்தையாக ஆசியா கேந்திர நிலையமாக திகழ்கிறது. ஆசியாவின் எழுச்சியை எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்கு அதிகபட்சம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காக சிறிய நடுத்தர மற்றும் நீண்டகால அடிப்படையில் முறைமைகளை உருவாக்க வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இந்த நோக்கத்தை அடைந்துகொள்வதற்கு தனது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளதாக தெரிவித்தார்.

தகவல் தொழிநுட்பத்துறை நிறுவனங்களுக்கு தற்போது குறிப்பிடத்தக்க வரிச் சலுகை வழங்கப்பட்டுள்ளது. இத்துறையின் முதலீட்டிற்கும் அதிக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். தேசிய அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு பொருளாதாரத்தின் முழுமையான உள்ளாற்றலுக்கும் தேவையான சீர்திருத்தங்களை செய்வதற்கும் அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. வர்த்தக சட்டத்திட்ட முறைமையை முன்னேற்றுவதும் அவசியமானதாகும். அதன்மூலம் வர்த்தகத்துறையை இலகுவாக மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், முறைகேடுகள், துஷ்பிரயோகங்களை தடுக்கவும் முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நீதித்துறை சுயாதீனமாக செயற்படுவது சட்ட ஆட்சிக்கு முக்கியமானதாகும். சட்டத்தின் உதவியை நாடுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ள விலை குறித்தும் கவனத்திற்கொள்ள வேண்டிய காலம் உருவாகியுள்ளது. நாட்டின் சாதாரண மக்களுக்கு அவர்களது பிரச்சினைகளை உடனடியாகவும் இலகுவாகவும் கட்டுப்படியான விலையிலும் தீர்த்துக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.

தாமதமாகும் நீதி நிராகரிக்கப்பட்ட நீதியாக கருதப்படும். அது நீதியை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்காக அக்கறை காட்டும் தரப்பினரை விருத்தியடைய செய்துவிடும். எனவே இலங்கையின் சட்ட முறைமையை உலகில் சிறந்த நிலைக்கு மாற்றுவதற்கு நீதித்துறையும் அரசாங்கமும் சட்டத்துறையும் இணைந்து முழுமையான தீர்வை முன்வைக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளதென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

நீதித்துறையின் நடவடிக்கைகள் மற்றும் சட்ட நடைமுறைகளில் நிறைவேற்றுத்துறை அல்லது சட்டவாக்கத்துறை தலையிடுவது ஜனநாயகத்திற்கு பாதிப்பானதாக அமையும். அதேபோன்று நிறைவேற்றுத்துறை மற்றும் சட்டவாக்கத்துறையின் நடவடிக்கைகளுக்கு நீதித்துறை தேவையற்ற தலையீட்டை செய்யாதிருப்பதும் முக்கியமானதாகும்.

நிறைவேற்றுத்துறையும் சட்டவாக்கத்துறையும் ஜனநாயக நடைமுறைகளினூடாக மக்களினால் தெரிவு செய்யபட்டுள்ளன. குறிப்பாக நிறைவேற்றுத்துறைக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான மக்கள் ஆணை உள்ளது. எனவே மக்களின் இருப்புக்காகவும் சுபீட்சத்திற்காகவும் நிறைவேற்றுத்துறை மேற்கொள்ளும் அபிவிருத்தி முயற்சிகளுக்கு நீதித்துறை தடைகளை ஏற்படுத்தாது இருப்பது முக்கியமானதாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

சுபீட்சமானதொரு எதிர்காலத்தை உருவாக்கவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு சட்டத்துறை சமூகத்தின் முழுமையான ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

“தேசிய சட்ட மாநாடு 2020” வெளியீடு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

சபாநாயகர் கருஜயசூரிய, நீதி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நீதி அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா ஆகியோரும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிங்க இத்ததிஸ்ஸ உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.lnw


No comments