முடியுமானால் என்னை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தகுதியுடைய ஒருவரை நியமியுங்கள் ஏறாவூர் நகர முதல்வர் அப்துல் வாசித்

முடியுமானால் என்னை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தகுதியுடைய, ஆளுடைமிக்க தவிசாளர் ஒருவரை நியமியுங்கள்" என மட்டக்களப்பு- ஏறாவூர் நகர சபையின் முதல்வர் ஐ. அப்துல் வாசித் இன்று நடைபெற்ற சபை அமர்வில் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

'முதல்வர் பதவிக்காக நான் எவரிடமும் அடிபணியப்போவதில்லை" என்றும் அவர் கூறினார்.

இவ்வருடத்திற்கான முதலாவது மற்றும் சபையின் 22 ஆவது அமர்வு நடைபெற்ற வேளையில் முதல்வரினால் இச்சவால் விடுக்கப்பட்டது.

இன்றைய அமர்வில் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
முதல்வரை பதவியிலிருந்து மாற்றுவதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் சத்தியக்கடதாசிகளில் கையொப்பமிட்ட சர்ச்சையான நிலையில் இச்சபை அமர்வு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சபையில் கடந்த மாத அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் நடவடிக்கைளையும் ஆராயும்போது முதல்வரின் தனிப்பட்ட அனுமதிக்கடிதத்துடன் ஒரு குழு சபை நடவடிக்கைகளை பார்வையிடுவதற்காக வருகைதந்தபோது உறுப்பினர் சறூஜ் கேள்வியெழுப்பினார். 'தவிசாளரது தனிப்பட்ட அனுமதியில் எவரையும் சபைக்கு அனுமதிக்க முடியாது. அவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

அவ்வேளையில் அவ்விடயத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் அரைமணி நேரத்திற்கு மேலாக வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. சபை கடும் கொந்தளிப்பாகக் காணப்பட்டது.
அவ்வாறிருக்க பார்வையாளர்கள் சபை நடவடிக்கைகளுக்கு இடமளித்து சுயமாக சபையைவிட்டு வெளியேறினர்.
அப்போது உறுப்பினர் எம்எஸ். சுபைர் இருதரப்பினரையும் சமரசப்படுத்தி விசேட உரையாற்றிவிட்டு சபையிலிருந்து வெளியேறினார்.

இச்சபையில் பெரும்பான்மை உறுப்பினர்களைக்கொண்ட எதிரும்புதிருமாக இருக்கும் முதலிரு அணிகளும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவானவர்களே. எனினும் முதல்வருக்கெதிரான தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டு பிரதேச மக்களுக்கு அநியாயம் செய்யும் வகையில் நடந்துகொள்ளாது உங்களது கட்சிக்குள் உங்களது இச்சைகளை தீர்த்துக் கொள்ளுமாறு அவர் தனது உரையில் கேட்டுக்கொண்டார்.

பின்னர் சபையின் செலவினம் குறித்து ஆராயும்போது மீண்டும் சூடான வாதப்பிரதிவாதம் மற்றும் சொற்போர் நடைபெற்றது.

முதல்வர் அப்துல் வாசித் முடிவுரையாற்றுகையில் --அரசியல் முரண்பாடுகள் இயற்கையானவை. எனினும் பிரதேசத்தை பேதமின்றி அபிவிருத்திசெய்ய ஒன்றிணைந்து செயற்படுமாறு உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

No comments