கண்டியில் வெற்றிபெற்றால் நாடுபூராகவும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டும்: கடுகண்ணாவையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்


 

கடந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைத் தவிர, எல்லா ஆசனங்களையும் நாங்கள் வெற்றிகொண்டோம். இம்முறையும் நாங்கள் கண்டியில் வெற்றிபெற்றால் நாடுபூராகவும் எங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (02) கண்டி, கடுகண்ணாவையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அங்கு தொடர்ந்து உரைாயற்றிய அவர் மேலும் கூறியதாவது;

 

ஜனாதிபதி தேர்தலில் நாம் தேர்ந்தெடுத்த வேட்பாளர் வழக்கம்போல் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் அல்லது எதிர்க்கட்சித் தலைவராகவோ இருக்கவில்லை. முதன்முறையாக ஐக்கிய தேசிய முன்னணியினூடாக அவ்வாறால்லாத செயற்திறன்மிக்க, எல்லா வேலைகளையும் முழுமூச்சாக செய்து முடிக்கக்கூடிய ஒருவரை தேர்ந்தெடுத்திருக்கிறோம்.

 

இது தொடர்பாக முதலிலிருந்தே என்னுடைய தீர்க்கதரிசனம் இருந்ததுடன் அதனை நானே முன்மொழிந்தேன். நாம் பங்காளிக் கட்சிகள் என்ற வகையில், எங்களது கூட்டணிக் கட்சியை வெற்றிபெறச் செய்யவேண்டும். திறமையான ஒரு தலைவருடனே நாம் முன்னோக்கிச் செல்லவேண்டும்.

 

ஒக்டோபர் 26ஆம் திகதி ஏற்பட்ட அந்த ஆட்சி மாற்றத்தையடுத்து ஜனநாயத்தை பாதுகாப்பதற்காக பாரிய போராட்டங்கள் நடத்தவேண்டி ஏற்பட்டது. சஜித் பிரேமதாசவுக்கு எந்தளவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை அவ்வாறான சந்தர்ப்பங்களில் காணமுடிந்தது. அதன் பின்னணியிலேயே இவ்வாறான மாற்றத்தை செய்வதற்கு நாங்கள் தயாரானோம்.

 

எமது கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மற்றும் மூதூர் பிரதேசங்களில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆகக்கூடுதலான வாக்கு வீதங்கள் நிரூபணமானது. அதேபோன்று இம்முறையும் கூடுதலான வாக்கு வீதத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை செய்துள்ளோம்.

 

இந்த மாவட்டத்தின் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நெடுஞ்சாலைகள் அமைச்சராக இருந்த காலத்தில் செய்த அபிவிருத்திகள் போன்று வேறு யாரும், இந்த அமைச்சு பதவியில் இருந்தபோது செய்யவில்லை. இப்போது எல்லா கிராமங்களிலும் சிறுவீதிகள் காபட் செய்யப்பட்டுள்ளன. எனது முன்னோடி அமைச்சர் என்ற வகையில், உயர்கல்வி அமைச்சில் ஆரம்பித்து வைத்த வேலைகளையும் நான் இன்று செய்கிறேன்.

 

உயர் கல்வித் துறையில் ஒருகாலமும் நிகழாத பாரிய திட்டங்கள் நாம் செய்திருக்கிறோம். பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் தொகையை 6,000 இனால் அதிகரித்திருக்கிறோம். ஒரே நேரத்தில் 400 பேர் தங்கக்கூடிய 84 மாணவர் விடுதிகளை கட்டியிருக்கிறோம். இவ்வாறான பாரிய அபிவிருத்திகளை இந்த மாவட்டத்தில் செய்துள்ளோம்.

 

கண்டி மாவட்டத்தில் 4 இலட்சம் குடும்பங்கள் பயனடையக்கூடிய வகையில் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்களான கண்டி வடக்கு திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதேபோன்று 24,000 மில்லியன் ரூபா இந்தியா வங்கியின் கடனுதவியில் குண்டசாலை ஹாரகம திட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் 2 இலட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும்.

 

அதேபோன்று சிறியளவிலான நீர் வழங்கல் திட்டங்கள் பலவற்றை ஆரம்பித்துள்ளோம். கலஹா நீர் வழங்கல் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். ஹதரலியத்த குடிநீர் திட்டத்தின் வேலைகளையும் ஆரம்பித்துள்ளோம். இந்த திட்டங்கள் நிறைவடையும்போது கண்டி மாவட்டத்தில் 85% சுத்திகரிக்கப்பட்ட நீரை பெற்றுக்கொடுக்க முடியும்.

 

கொழும்பு - கண்டி அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி வேலைகள் தாமதமானாலும், ஏனைய பகுதிகளின் வேலைகளை முடித்து அடுத்த வருட முற்பகுதியில் மக்கள் பாவனைக்கு கையளிக்க முடியும். இவைகளை செய்வதற்கு காலதாமதம் ஆனாலும் வெளிப்படையாக செய்யவேண்டியுள்ளதால் நல்லாட்சி அரசாங்கத்தில் தாமதம் ஏற்பட்டது.

 

எந்த அரசாங்கமும் முதலீடு செய்யாத அளவில் இவ்வாறான பாரிய திட்டங்களை செய்வதற்கான சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைத்துள்ளது. எமது நாடு தொடர்பாக சர்வதேச மட்டத்தில் இருந்த கண்ணோட்டத்தை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. கடந்த ஒக்டோபர் சம்பவத்தின் பின்னாலுள்ள செயன்முறையை பார்க்கும்போது நீதித் துறையில் சுதந்திரத்தை நிறுவ முடிந்ததை காணலாம்.

 

பாராளுமன்றத்தில் சபாநாயகர் ஆசனத்தை உடைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மிளகாய் பொடியால் தாக்கிய கலாசாரத்தை உருவாக்கிய கட்சி, அதேபோல் பெரும்பான்மை இல்லாமல் பின்கதவால் ஆட்சி அதிகாரத்தை பறிப்பதற்கு முயற்சி செய்தவர்கள்தான் இப்போது முன்கதவால் வந்து எங்களுக்கு ஆட்சியைத் தரவேண்டும் என்று கேட்கிறார்கள்.

 

நாட்டிலுள்ள மக்களுக்கு 6 மாதங்கள் கடந்த பின்னர் எல்லாமே மறந்து விடுகிறது. கடந்த ஆட்சிக் கவிழ்ப்பில் 52 நாட்கள் இவர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவதற்று எடுத்த முயற்சிகள், செய்த வன்முறைகளை பார்க்கும்போது ஒருகாலமும் இவர்களுக்கு ஆட்சியை பெற்றுக்கொடுக்க மாட்டோம். எங்களது போராட்டத்தில் நாம் வெற்றியடைந்தோம்.

 

எங்களது போராட்டத்தில் நாம் வெற்றியடைந்ததனாலேயே, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இளைய தலைவர், சேவை செய்யக்கூடிய ஒருவர், மக்களை ஒற்றுமைப்படுத்தி செயற்படக்கூடிய ஒருவரை அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைவோம். 

 

ஊடகப்பிரிவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

llllllllll

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget