ஹிஸ்புல்ழாஹ் தொடர்பில் அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்த கருத்துக்கு சுதந்திரக் கட்சி காத்தான்குடி மத்திய குழு கடும் கண்டனம்!ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ழாஹ் தொடர்பில் மு.கா. தலைவரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்துள்ள கருத்துக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காத்தான்குடி மத்திய குழு தமது கண்டனத்தினை வெளியிட்டுள்ளது. 

சு.க. காத்தான்குடி மத்திய குழுவின் செயலாளர் MAC ஹம்தூன் JP இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“ தேர்தல் காலங்களில் காத்தான்குடிக்கு விஜயம் செய்யும் அரசியல் பிரமுகர்கள் பொது மேடைகளில் உரையாற்றும் போது நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். அண்மையில் காத்தான்குடியில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அதன் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீம் மிகவும் அநாகரீகமான முறையில் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ழாஹ் தொடர்பில் விமர்சனம் செய்திருந்தார். 
இது தொடர்பில் எமது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். பொது மேடைகளில் இவ்வாறு உரையாற்ற முன்னர் அவர்களை அழைத்து வரும் உள்ளூர் அரசியல்வாதிகள் தமது தலைமைத்துவத்துக்கு முதலில் அரசியல் நாகரீகத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். 
காத்தான்குடி கலாச்சார ரீதியில் நாகரீகமான – கௌரவமான ஊராகும். இங்கு நாகரீகமற்ற முறையில் அரசியல் தலைவர்கள் உரையாற்றுவதன் மூலம் எமது ஊரின் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படுகின்றது. 
கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்ழாஹ் எமதூருக்கும் எமது சமூகத்துக்கும் முழு தேசியத்திற்கும் கடந்த முப்பது வருடங்களாக அளப்பரிய சேவைகளை ஆற்றிய – ஆற்றி வருகின்ற மூத்த அரசியல் தலைமைத்துவம். அவர் தொடர்பில் மிகவும் மட்டமான முறையில் அரசியல் வங்குரோத்து அடைந்தவர் போல் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றியமை எமக்கு கவலை அளிக்கிறது.
ஒரு கட்சியின் தலைவர் அவரது அரசியல் கொள்கைகள், தீர்மானங்கள், எதிர்கால நகர்வுகள் தொடர்பிலேயே தமது ஆதரவாளர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். எந்த உடன்பாட்டுடன் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றோம்? என்பது தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்காது ஹிஸ்புல்ழாஹ்வை விமர்சிப்பதற்காகவே காத்தான்குடி வந்திருந்தார். 
எமது அரசியல் தலைமைத்துவம் கடந்த முப்பது வருடங்களாக எமதூருக்கு ஆற்றியிருக்கின்ற சேவைகளில் ஒரு வீதமாவது இந்த நாட்டுக்கோ – முஸ்லிம் சமூகத்திற்கோ ஆற்ற முடியாத மிகவும் கீழ்த்தரமான அரசியல் செய்கின்ற இவ்வாறான தலைவர்கள் மிக நிதானமாக உரையாற்ற பழகிக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments