புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்புவதன் மூலமே நாட்டில் நிலையான அபிவிருத்தியை உருவாக்கலாம்-இரத்தினபுரில் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார தெரிவிப்புஎம்.எல்.எஸ்.முஹம்மத் இரத்தினபுரி நிருபர் 

இலங்கை 1948ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியாளர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றுக் கொண்ட போதிலும் முதலாளித்துவ அரசியல் சிந்தனைகளில்  இருந்து  இன்னும் நாம் விடுதலை பெறாமல்  இருக்கின்றோம்.கடந்த 71 வருடங்களாக எமது நாட்டை ஆட்சி செய்த அனைத்து ஆட்சியாளர்களும் நாட்டு மக்களை சர்வதேசத்தின் கடனாளிகளாவும், குற்றவாளிகளாகவும் மாற்றி விட்டார்கள்.சர்வதேச  வார்த்தகத்தின் கேந்திர ஸ்தானத்தில் அமைந்திருக்கும் எமது நாட்டை நிலையான அபிவிருத்தியை நோக்கி அழைத்துச் செல்ல வேண்டுமாயின் முதலில் மக்கள் நலனுக்காக மாத்திரம் உழைக்கும் புதியதொரு அரசியல் கலாச்சாரம் ஒன்றினை உருவாக்க நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கின்றோம்.இதற்கான கடைசி சந்தர்ப்பமே எதிர்வரும் நவம்பர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலாகும்",என மக்கள்  விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி  வேட்பாளருமான அநுர குமார திசாநாயக்க இரத்தினபுரியில் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனம் தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட மக்களை தெளிவூட்டும் முக்கிய கருத்தரங்கொன்று கடந்த வியாழக்கிழமை (19)இரத்தினபுரி நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.இதன்போதே ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சாந்த பத்மகுமாரவின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அநுர குமார திசாநாயக்க தொடர்ந்து உரையாற்றுகையில்

எமது ஆட்சியாளர்கள் மற்றும்  அரசியல்வாதிகள் அனைவரும் மக்களுக்கு சேவையாற்றுவதாகக் கூறிக்கொண்டு மக்களின் பணத்தை சுரண்டும் வங்குரோத்து அரசியல் வியாபாரத்தையே மேற்கொண்டு வருகின்றார்கள்.எமது நாட்டின்  பொருளாதாரம் படுபாதாளத்தை நோக்கி மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது.பொருளாதார  நெருக்கடிகளை தாங்கிக் கொள்ள முடியாமல் தாய்மார்கள் தமது கைக்குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்கின்றார்கள்.இலவசக் கல்வியும் சுகாதாரமும் இன்று மக்களிடம் இல்லை.பணம்தான் அனைத்தையும் விலை பேசிக் கொண்டிருக்கிறது.பெண்களின்  பாதுகாப்பும் உரிமைகளும் நாளுக்கு நாள்  பாரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.பெறுமதியான மனித வளங்கள் அனைத்தும்   மிகக் குறைந்த விலைக்கு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இன ஓற்றுமை என்ற பெயரில் பிஞ்சு உள்ளங்களில் இன முரண்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன.


 
இதே போன்றுதான் நாட்டின்   பௌதிக வளங்களும் இந்தியாவிற்கும்,சீனாவிற்கும்,அமெரிக்காவிற்கும் மற்றும் முதலாளித்துவ நாடுகளுக்கும் விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.உண்மையில்  சொல்லப்போனால் நாடு சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை பதவிக்கு வந்த அத்தனை அரசாங்கங்களும் மாறி மாறி மக்களின் பெறுமதியான வாக்குகளை பறித்துக் கொண்டார்கள்.நாளைக்கு பிறக்கவுள்ள  எமது குழந்தைகளுக்கு    உயிர் வாழ்வதற்கு இலங்கை என்ற ஒரு நாடு இருக்குமா? என்று சந்தேகப்பட வேண்டிய அளவுக்கு எமது தேசத்தின் நிலங்கள்  விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த மோசமான நிலையை மாற்றி அமைப்பதற்கு  இரத்தினபுரி மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்க வேண்டுமென அவர் தனதுரையில் வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து அவர் இங்கு உரையாற்றுகையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு தெரிவானால் முன்னெடுக்கவுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் பொருளாதார சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாகவும் நீண்ட விளக்கமளித்தார்.

No comments