ஹஜ்ஜூல் அக்பரின் கைது குறித்து கவலைப்படும் ஏழு அமைப்புக்களே! ஏனைய கைதிகள் பற்றிய நிலைப்பாடுதான் என்ன?
 கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டில் இடம் பெற்ற பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்களில் சிலர் விடுபட்ட நிலையில் இன்னும் பலர் இன்றுவரை சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டவர்கள் தொகை 300க்கும் அதிகமாக இருந்தாலும் அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது இங்கு கவலையுடன் குறிப்பிடத்தக்கதாகும்.

கைதுகள் நடந்து நான்கு மாதங்கள் கடந்து விட்ட நிலையில் சிறையில் இருப்பவர்களின் குடும்பங்கள் படும் கஸ்டங்கள் ஒரு கண்ணீர்க் காவியமாகும் (அவை வேறாக எழுதப்பட வேண்டும்)

பாதுகாப்புத் துறையினரோ அல்லது நீதித் துறையோ கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்களை இன்னும் சந்தேகததின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவாகளாகவே பார்க்கின்ற இன்றைய நிலையில் நமது சமூகத் தலைவர்களும் அரசியல் வாதிகளும் இவர்களை பயங்கரவாதிகளாகவும் குற்றவாளிகளாகவும் முடிவுசெய்து ஒதுங்கியிருப்பதும் இவர்களை ஓரங்கட்டி வைத்திருப்பதும் மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

வைத்தியர் சாபி சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டபோது நமது சமூகத்தலைவர்களும் அரசியல்வாதிகளும் பல்வேறுபட்ட அமைப்புக்களும் அவரது விடுதலைக்காக எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அவற்றுக்கான முன்னெடுப்புக்களும் பிரார்த்தனைகளும் பிடித்த நோன்புகளும் இந்த அப்பாவிக் கைதிகளின் மீது எடுக்கப்படவில்லை என்பது அப்போதைய கேள்வியாக இருந்தது.

அதனைப் போன்றுதான் காத்தான்குடியில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட அலியார் றியாழி அவர்களின் விடுதலைக்காக நமது சமூகமும் தலைமைத்துவங்களும் அடைந்த கவலையும் மேற்கொண்ட முயற்சிகளும் அவருக்கான பிணை விடுதலையைப் பெற்றுக் கொடுத்தது. அவர் விடுதலையான பின்னர் எல்லாம் முடிந்து விட்டது போலலும் எதுவுமே நடக்கவில்லை என்பது போலும் எல்லோருமே ஒதுங்கிக் கொண்டனர்

வைத்தியர் சாபியும் அலியார் றியாழியும் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்தான் என்பதில் எந்த சந்தேகமோ மாற்றுக கருத்துக்களோ இல்லை. அவர்களது விடுதலைக்காக நமது சமூகத்தலைவர்களும் அரசியல் வாதிகளும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியதுதான்.

ஆனால், அதனைப் போன்று சந்தேகத்தின் பெயரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஏனையவர்களின் விடுதலைக்காக இவர்கள் எந்த முயற்சிகளை எடுத்தார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை

வைத்தியர் சாபியும் அலியார் றியாழியும் விடுதலையான பின்னர் தூங்கிய நமது சமூகம் இப்போது உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்கள்; கைது செய்யப்பட்டதன் பின்னர் மீண்டும் விழித்துப் பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

'உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் அவர்களின் கைது குறித்து தாங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் விசாரணைக்கு பாதிப்பு இல்லாத வகையில் அவரை விடுதலை செய்யுமாறும் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் இலங்கை முஸ்லிம்களை மையப்படுத்திய பின்வரும் ஏழு அமைப்புக்கள்

01    அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா

02    சிறீலங்கா முஸ்லிம் கவுன்சில்

03    தேசிய சூறா கவுன்சில்

04    இலங்கை மலாயர் சம்மேளனம்

05    அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவை

06    அகில இலங்கை முஸ்லிம் லீக் இளைஞர் ஒன்றியம்

07    முஸ்லிம் மீடியா போரம்

 

கோரிக்கை விடுத்துள்ளதாக ஊடகங்கள் மூலமாக அறிய முடிகிறது.

உஸ்தாத் ஹஜ்ஜூல் அக்பர் ஒரு ஆளுமையுள்ள நல்ல மனிதர் சமூகத்திற்கு தேவையான ஒருவரும் கூட. அவரும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்.  ஆனால், அவரது விடுதலைக்காக குறித்த ஏழு அமைப்புக்களும் அடைந்திருக்கும் கவலையும் எடுத்திருக்கும் முயற்சிகளும் ஏனைய கைதிகளின் மீது காட்டப்படவில்லை எனும் போது இந்த அமைப்புக்கள் சொல்லவரும் செய்தி என்ன?

சிறையில் உள்ள ஏனையவர்கள் அனைவரும் உண்மையான குற்றவாளிகளா? அல்லது உஸ்தாத் ஹஐ;ஐ_ல் அக்பர் போன்று பிரபல்யம் இல்லாதவர்கள் என்பதாலா? ஏன்பன போன்ற கேள்விகள் தொக்கி நிற்கின்றன.

ஹஜ்ஜூல் அக்பர் எவ்வாறு சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளாரோ அவ்வாறுதான் ஏனைய கைதிகளும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஹஜ்ஜூல் அக்பர் கைது செய்யப்பட்டு ஓரிரு வாரங்களுக்குள் அவருக்காக அவரது விடுதலைக்காக குரல் கொடுக்க முடியுமாக இருந்தால் அதற்காக ஒன்று சேர முடியுமாக இருந்தால் கடந்த நான்கு மாதங்களாக சிறையில் வாடும் நமது உறவுகளுக்காக அவர்களது விடுதலைக்காக இந்த அமைப்புக்கள் ஏன் குரல் கொடுக்க முன்வரவில்லை அதற்கான முன்னெடுப்புக்களை ஏன் செய்யவில்லை. அவ்வாறான எந்த அறிக்கைகளையும் இதுவரை எம்மால் வாசிக்கவோ அல்லது கேள்விப்படவோ இல்லை.எனும் போது  இந்த அமைப்புக்கள் எங்கே இருந்தன எனவும் கேட்கத் தோன்றுகின்றன.

நாங்களும் முயற்சிக்கிறோம் என்று ஏனைய சாதாரண அமைப்புக்களைப் போல் இவர்களும் சொல்லிவிட்டு விலகிக் கொள்ள முடியாது. 

ஏனென்றால் குறித்த இந்த அமைப்புக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் முஸ்லிம்களின் நலனுக்காகவே நாங்கள் செயற்படுகிறோம் என்று சொல்லியே மக்கள் முன்னிலையில் செயற்பட்டு வருகிறார்கள்.

ஆகவே, எவ்வாறு ஹஜ்ஜூல் அக்பர் அவர்களின் விடுதலை விடயத்தில் முயற்சிகளை மேற்கொள்கின்றார்களோ அதே முயற்சிகளை சந்தேகத்தின் பெயரில் கைது செய்யபட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் கைதிகள் விடயத்திலும் மேற்கொள்ள வேண்டும். இதுவே இன்றைய காலத்தின் தேவையாகவும் இருக்கிறது.

நன்றி

(மதியன்பன்)

 

 

  

No comments