அல் குர்ஆனை றஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்த வலேரியா பொரொகோவா காலமானார்.

எம்.ஐ.அப்துல் நஸார் 


அல்குர்ஆனை றஷ்ய மொழிக்கு மொழிபெயர்ப்புச் செய்த பிரபல மொழிபெயர்ப்பாளர் வலேரியா (ஈமான்) பொரொகோவா தனது 79 ஆவது வயதில் மொஸ்கோவில் காலமானார்.


பொரொகோவா கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆந் திகதி திங்கட்கிழமை காலமானதாகவும், அவருக்கான இரங்கல் கூட்டம் மொஸ்கோவிலுள்ள பள்ளிவாயலொன்றில் செப்டம்பர் மாதம் 4 ஆந் திகதி புதன்கிழமை இடம்பெற்றதாகவும் றஷ்ய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.


றஷ்யாவின் சர்ஸ்கோயே செலோவில் 1940 ஆம் ஆண்டு பிறந்த பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பமொன்றில் பிறந்த பொரொகோவா அரச மொழிகள் கற்கை நிலையத்தில் வெளிநாட்டு மொழிகள் தொடர்பில் பட்டம் பெற்றதோடு 18 ஆண்டுகளாக விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். அதன் பின்னர் அவர் றஷ்ய இயற்கை விஞ்ஞான கற்கை நிலையத்திலும் கடமையாற்றினார். 


1975 ஆம் ஆண்டு சிரியாவைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்துகொண்ட அவர் 1981 ஆம் ஆண்டு மொஸ்கோவிலிருந்து சிரியாவுக்குச் சென்றார். அங்கு இஸ்லாத்தைத் தழுவிய அவர் தனது முதற்பெயராக ஈமான் (நம்பிக்கை) என்ற பெயரையும் ஏற்றுக்கொண்டார். 


சிரியாவில் அல்குர்ஆனை றஷ்ய மொழிக்கு மொழிபெயர்க்கும் பணியினை தொடங்கினார். 1991 ஆம் ஆண்டு அந்தப் பணியினை பூர்த்தி செய்தார். அம் மொழிபெயர்ப்பு 12 பதிப்புகளைக் கண்டுள்ளது. 


இந்த அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு முன்னாள் சோவியத் குடியரசு உள்ளடங்கலாக பல நாடுகளின் இஸ்லாமிய அறிஞர்களின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments