ஏப்ரல் 21 தாக்குதலுடன் காத்தான்குடி முஸ்லிம்களை இணைத்து பேசாதீர்கள் - காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் வேண்டுகோள்.
(எம்.பஹ்த் ஜுனைட்)

மனிதாபிமானமற்ற மிலேட்சத்தனமான பயங்கரவாத சம்பவம் ஒன்றை உயிர்த்த ஞாயிறு தினமாகிய ஏப்ரல் 21 அன்று இலங்கை எதிர் கொண்டது. இஸ்லாத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட இத் தற்கொலை தாக்குதலை இலங்கை முஸ்லிம்கள் வன்மையாக கண்டித்திருந்தனர். குறிப்பாக காத்தான்குடி முஸ்லிம்கள் இத்தாக்குதலுக்கு மிகவும் வன்மையாக கண்டித்தனர். இப்பயங்கரவாத செயலில் ஈடுபட்ட ஒரு சிலர் ஏதோவொரு வகையில் காத்தான்குடியோடு தொடர்புபட்ட காரணத்தினால் இத்தாக்குதலுடன் ஒட்டு மொத்த காத்தான்குடி சமூகத்தையும் இணைத்து பேசுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.சீ.எம்.ஏ. சத்தார் தெரிவித்தார்.

சம்மேளனத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் எல்லா மதங்களும் சமயங்களும் சமாதானத்தையும், சகவாழ்வையும் போதிப்பது போன்றே இஸ்லாமிய மார்க்கமும் அல் குர் ஆனும் போதிக்கிறது. அதன் அடிப்படையிலே முஸ்லிம்களாகிய நாங்களும் இத் தாக்குதலை முற்று முழுதாக கண்டித்திருந்தோம்.

கடந்த காலங்களில் உள்நாட்டு யுத்தத்தினாலும், அரசியல் பழிவாங்கல்களினாலும், நிர்வாக பயங்கரவாதத்தினாலும் இலங்கை முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் இலங்கை அரசாங்கத்தின் மீது எவ்வித கோபமும் கொள்ளவில்லை. மாறாக இலங்கையின் சட்டத்தையும், நீதியையும் மதிக்கும் சமூகமாகவே அன்றில் இருந்து இன்று வரை வாழ்ந்து வருகிறோம். இவ்வாறான ஒரு மனிதாபினமற்ற பயங்கரவாத செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டிய எந்த தேவையும் இலங்கை முஸ்லிம்களுக்கோ காத்தான்குடி சமூகத்திற்கோ இல்லை என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறோம்.

குறிப்பாக காத்தான்குடி சமூகம் கட்டுக்கோப்பான, சட்டத்தை மதித்து நடக்கக் கூடிய சமூகம். துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் செய்த மிக மோசமான காரியத்தால் ஒட்டுமொத்த காத்தான்குடி சமூகத்தை பயங்கரவாதிகளாக, தேச துரோகிகளாக, குற்றவாளியாக பார்ப்பது கவலைக்குரிய விடயம்.

காத்தான்குடி மக்கள் இலங்கையின் அனைத்து மூலை முடுக்குகளிலும் வியாபாரம் செய்யக்கூடியவர்கள், பயணிக்கக் கூடியவர்கள் அவர்களை வெளியூர் சகோதரர்கள், பிற மத சகோதரர்கள், பாதுகாப்பு தரப்பினர், அதிகாரிகள் சந்தேகத்தோடும் ,வெறுப்போடும் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அத்துடன் ஏப்ரல் 21 சம்பவத்துடன் காத்தான்குடி முஸ்லிம்களையோ, ஊரின் பெயரையோ இணைத்து பேச வேண்டாம் என இலங்கை வாழ் அனைத்து இன மக்களிடமும், அரசியலவாதிகளிடமும், அரசாங்கத்திடனும் கேட்டுக்கொள்வதோடு குறிப்பாக ஊடகங்கள், ஊடகவியலாளர்கள் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடாமல் உறுதி செய்யப்பட்ட உண்மையான செய்திகளை மக்களுக்கு வழங்க வேண்டும் வீணான வதந்திகளை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்க வேண்டாம் எனவும் இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் சம்மேளனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க். ஏ.எல்.எம்.சபீல்(நளீமி) மற்றும் சம்மேளனத்தின் நிர்வாக உறுப்பினர்கள், காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபை உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.

No comments