பதவியை இராஜினாமாச் செய்வதில் முபீன் இழுத்தடிப்பு தலைவர் ரஊப் ஹக்கீமின் கவனத்திற்கும் பொறியியலாளர் சிப்லி கொண்டு சென்றதாக தெரிவிப்பு

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்வதில் யு.எல்.எம்.என்.முபீன் இழுத்தடிப்புச் செய்கின்றார் என கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாறூக் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக இன்று கருத்து தெரிவிக்கையில் காத்தான்குடி நகர சபை தேர்தல் நிறைவுற்றதன் பின்னர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு 4633 வாக்குகளைப் பெற்று விகிதாசாரப்பிரதி நிதித்துவத்தின் அடிப்படையில் 3 உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றது.

அந்த மூன்று ஆசனங்களை எவ்வாறு பங்கிடுவது என்பது சம்பந்தமாக எனது வீட்டிலே நடைபெற்ற கூட்டத்தில் நாங்கள் ஏற்கனவே வைத்த முன்மொழிவுகளின் பிரகாரம் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உறுப்பினர்களை தெரிவு செய்வது என்ற விடயம் வந்த போது அவ்வாறில்லாமல் அரசியல் அனுபவமுள்ள இருவரை முதலில் அனுப்புவது என தீர்மானிக்கப்பட்டு அதிலே என்னையும் அதே போன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் முபீன் அவர்களையும் தெரிவு செய்து உறுப்பினர்ளாக அனுப்புவது என ஏகமனதாக அக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் போது ஒப்பந்தமொன்றும் செய்யப்பட்டது.

அதன் பிரகாரம் முதல் ஒரு வருடத்திற்கு இரண்டு பேரும் அனுப்புவது என்றும் ஒருவருடம் முடிவுற்றதன் பின்னர் மற்றயவர்களுக்கு புரிந்துனர்வு அடிப்படையில் இவ்விரண்டு பேராக குறைந்தது ஆறுமாதங்களாவது நகர சபை உறுப்பினர் பதவியை எமது கட்சியில் போட்டியிட்ட அனைவருக்கும் கொடுப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒரு வருடம் பூர்த்தியான நிலையில் முபீனுடன் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசுவதற்கு நான் முயற்சி செய்தும் பலனிக்காத நிலையில் ஐந்து பேர் கொண்ட குழுவினை நியமித்து முபீனை சந்திக்க அனுப்பியிருந்தேன். எனினும் அவர் அந்த குழுவையும் சந்திக்க மறுத்துவிட்டார்.

எனினும் திடீரென அந்தக் குழுவினர் அவரை சந்தித்தனர் அதன் போது அந்த சுழற்சிமுறை ஒப்பந்தத்தில் தான் விருப்பமின்றியே கையொப்பமிட்டதாகவும் தான் அந்த உறுப்பினர்; பதவியை இராஜினாமச் செய்ய போவதில்லையெனவும் கூறியிருந்தார்.

அந்த ஒப்பந்தத்துக்கும் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கும் மாறு செய்கின்ற ஒரு விடயத்தை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். தொடரச்சியாக அவரின் பதவியை இராஜினாமாச் செய்கின்ற விடயத்தில் கொடுத்த வாக்குக்கு மாற்றமாக செயற்பட்டுக் கொண்டு வருகின்ற விடயம் தொடர்பில் கட்சியின் தேசியத் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும் சொல்லியிருப்பதோடு எழுத்து மூலமும் கூறியிருக்கின்றோம். அந்த கடிதத்தில் முபீனும் அவரது வாகன சாரதி தௌபீக் ஹாஜியாரும் தவிர்ந்த அனைவரும் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கையொப்ப மிட்டுள்ளனர்.
அக் கடிதத்தில் முபீன் அவர்கள் உடனடியாக இராஜினாமச் செய்ய வேண்டும் புதிய இரண்டு பேரை அந்த இடத்திற்கு நியமிக்க வேண்டுமெனக் கூறியே அந்தக் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளோம்.
அதற்கு இன்னும் ஆக்க பூர்வமான முடிவு கிடைக்க வில்லை. மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை தலைவர் ரஊப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பாக பேசியுள்ளோம். அந்த ஒப்பந்தத்தின் கடிதத்தின் பிரதியையும் கொடுத்துள்ளோம்.

இரண்டு புதியவர்களுக்கு சுழற்சி முறையில் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் பதவியை வழங்க நடவடிக்;கை எடுக்குமாறு நாங்கள் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் கேட்டுள்ளோம்.

ஒருவருடம் முடிந்த நிலையில் நான் ராஜினாமாச் செய்ய முற்பட்ட போது புதியவர்கள் இருவரில் யாரை அனுப்புவது என்ற சஞ்சலம் ஏற்பட்டு விடும் என்பதால் நானும் முபீனும் ஒரே நேரத்தில் இராஜினாமாச் செய்து ஒரே நேரத்தில் புதியவர்கள் இருவருக்கு கொடுப்பது என்ற விடயத்தை நடைபெற்ற கூட்டமொன்றில் முன் மொழிந்ததற்கிணங்க எனது இராஜினாமாவைக் கூட பிற்போட வேண்டி ஏற்பட்டது.

இருவரும் ராஜினாமாச் செய்து புதியவர்கள் இருவருக்கு சந்தர்ப்பத்தைக் கொடுக்க வேண்டும்.
முபீன் இன்னும் இழுத்தடிப்புச் செய்யக் கூடாது. 

வழங்கப்பட்ட வாக்குறுதிக்கேற்பவும் செய்யப்பட்ட ஒப்பந்தத்துக்கு ஏற்பவும் நடந்து கொள்ள வேண்டும் என மேலும் அவர் தெரிவித்தார்.

No comments