பேச்சு,ஆளுமை,வியூகம்,சானக்கிய காய் நகர்த்தல் என தற்காலத்திற்கு பொருத்தமான தலைமையாக கருதப்படும் Rauff Hakeem அவர்கள் பற்றி....


முஹம்மத் அஜாஸ்

ரவூப் ஹக்கீம் அவர்கள் வெறுமனே ஓர் அரசியல்வாதி - Politician அல்ல, மாறாக ஓர் அரசியல் மேதை - Statesman ஆவார் என்பதை நிரூபிக்கும் மிகச்சிறந்த ஒரு செவ்வியை Vot 24 x 7 தளத்திற்கு வழங்கியுள்ளார். 


பொறுப்புவாய்ந்த ஒரு தேசியத் தலைவர் பொதுத் தளத்தில் எவ்வாறு அரசியல் பேச வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள ஹக்கீமின் இந்தச் செவ்வி நிச்சயமாக உதவும்.


கடும் விமர்சனங்களுக்கு உட்பட்டுள்ள மஹிந்தவையும் மோடியையும் இணைத்துப் பூகோள அரசியலை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது என்பதை ஹக்கீமிடமிருந்து நான் இன்று கற்றுக் கொண்டேன்.


தேசிய அரசியல் தலைமைகளின் மொத்த ஆளுமையையும் கவனத்திற் கொள்ளாமல் நமக்குப் பிடிக்காத அவர்களின் சில பக்கங்களை மட்டும் நாம் கடுமையாக விமர்சனம் செய்வது தவறானது என்பதை நானும் உணர்ந்து கொண்டேன். 


நாம் வெறுக்கும் மஹிந்த, சம்பிக்க போன்றோரையும் கண்டபடி விமர்சித்து ஒதுக்காமல் அவர்களிடமிருக்கும் மிகச்சில நல்ல விஷயங்களையேனும் தேடி, அவதானித்து, அவற்றினூடாக நாம் அவர்களை நெருங்கி, நம்மீது அவர்கள் கொண்டுள்ள தப்பெண்ணங்களைக் களையவே முயற்சிக்க வேண்டும். எவரையும் முற்றுமுழுதாகப் புறக்கணித்துவிடக் கூடாது. சில கட்டங்களில் அவர்களிடமே நாம் மீண்டும் செல்ல வேண்டிய சூழ்நிலைகளும் ஏற்பட்டு விடலாம் என்பதையும் எப்போதும் மனங்கொள்ள வேண்டும். 

தமிழ் - முஸ்லிம் உறவுகள் குறித்து அற்புதமான ஒரு கருத்தை வெளியிட்டார். நாம் உள்ளகச் சமூக விமர்சனங்களைச் செய்ய வேண்டும், தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் அத் தவறுகள் நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், நாம் பாதிக்கப்பட்டுள்ள இந்தச் சூழலில் தமிழ்ச் சமூகம் வெளிப்படையாக, மிகவும் பக்கபலமாக நமக்கு ஆதரவாக உள்ளது, அவர்கள் பாதிக்கப்பட்டிருந்த போது நாமும் இவ்வளவு காட்டமாக, இவ்வாறான குரலை அவர்களுக்காக உயர்த்தினோமா ? அவர்களுக்குத் துணையாக நின்றோமா என்று நம்மை நாமே சுயபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது... என்றெல்லாம் மிகவும் வெளிப்படையாகப் பேசினார்.


நம்பிக்கைகளைக் கட்டியெழுப்புகிற அழகான, ஆழமான வெளிப்படுத்தல்கள். 


தமிழ் - முஸ்லிம் உறவுகள் மீண்டும் துளிர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 


சகல கருத்துவேறுபாடுகளையும் மறந்து, முஸ்லிம் அரசியல்வாதிகளும், மொத்த முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையாகப் பயணிக்கவேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.


 

No comments