எங்கே செல்கிறது நமது நாட்டு அரசியல்


வை எல் எஸ் ஹமீட் 

பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் புகழ்பூத்த ஒரு சட்ட அறிஞர். கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர். ராணுவத்தளபதி சம்பந்தப்பட்ட அமைச்சர் அழுத்தம் பிரயோகிக்கவில்லை; வேண்டுகோளே விடுத்தார்; என்று தெட்டத்தெளிவாக கூறியபின்னும் அவர் அழுத்தம் கொடுத்தார்; அவர் கைதுசெய்யப்பட வேண்டும்; என்று கூறுவது எவ்வளவு கீழ்மட்ட அரசியலாகும்.


ஒருவரைக் கைதுசெய்யும்போது கைதுசெய்பவர்கள் யார்? என்ன காரணம் என்பவற்றைக் கூறவேண்டும். அவ்வாறு செய்யாத சூழ்நிலையில் அவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் தொடர்பாக தகவல்களை விசாரிப்பதில் சட்டரீதியாக பிழையேதும் இல்லை; என்பது சட்டத்தில் கடலான ஜீ எல் பீரிஸ் அவர்களுக்குத் தெரியாதா?


கண்டியிலும் கருத்தடை செய்யப்பட்டதாக எஸ் பி திசாநாயக்க ஒரு புரளியை கிளப்புகிறார். குறித்த கருத்தடை என்பது ரகசியமாக செய்யக்கூடிய ஒன்றல்ல; என்று மருத்துவ நிபுணர்கள் கூறியும் இன்னும் இவ்வாறு கதை கூறிக்கொண்டிருக்கிறார்கள். எஸ் பி திசாநாயக்க ஒரு இனவாதியாக கடந்த காலத்தில் அறியப்பட்ட ஒருவர் அல்ல. அரசியலுக்காக அவரும் இனவாதம் பேசுகிறார்.


டாக்டர் ஷாபி அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது ஒரு பயங்கரவாதத்தோடு தொடர்பான குற்றச்சாட்டு அல்ல. அது இறைவரித் திணைக்களத்திற்குரிய விடயம். 8000 பெண்களுக்கு கருத்தடை செய்தார்; என்று யாரும் முறைப்பாடு செய்ததாகத் தெரியவில்லை. பத்திரிகை செய்தியை வைத்து கைதுசெய்தபின் முறைப்பாட்டைக் கோருகிறார்கள். எங்குமே நடக்காத ஒருவிடயம்.


முறைப்பாடு செய்திருந்தால்கூட அது தொடர்பான ஆரம்ப விசாரணைகளைச் செய்து அவர்மீது நியாயமான சந்தேகம் இருப்பின் மாத்திரமே கைதுசெய்யமுடியும். 


ஒரு புறம் மருத்துவ நிபுணர்கள் இக்குற்றச்சாட்டு உண்மையாக இருக்கச் சாத்தியமில்லை; எனும்போது மறுபுறம் விசாரணை முடிவு தெரியாதபோது, இப்பொழுதான் முறைப்பாடு கோரப்பட்டு, முறைப்பாடு  செய்யப்பட்டுக் கொண்டிருக்கும்போது முன்னாள் ஜனாதிபதி அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நஷ்டஈடு வழங்கவேண்டுமென கூறுகின்றார். 


முதலாவது முறைப்பாடு உண்மையா? இவ்வாறு முறைப்பாடு உண்மையாக இருக்க சாத்தியமா? என்பதுபற்றி எதுவும் தெரியாத நிலையில் இவ்வாறான ஓர் அறிவிப்பு ஏன்? நஷ்ட ஈடு எதிர்பார்ப்பில் அதிகமான முறைப்பாடு செய்யப்படட்டும் என்பதற்காகவா?


அன்று ஒக்ஸ்போட்டில் படித்த பண்டாரநாயக அரசியலுக்காக இனவாதத்தைக் கையிலெடுத்தார். அன்றில் இருந்து இன்றுவரை இனவாதமே அரசியலில் பிரதான முதலீடாக இருக்கின்றது. அது ஜீ எல் பீரிஸ் போன்ற சர்வதேசத்தால் அறியப்பட்ட சட்டமேதைகளையும் விட்டுவைக்கவில்லையென்றால் நம் நாட்டு அரசியல் எங்கே சென்றுகொண்டிருக்கிறது?


இம்முறையும் இனவாதம்தான் தேர்தலுக்கான மூலதனம் என்றே பொது எதிரணி தீர்மானித்திருப்பதுபோல்தான் தெரிகிறது.


இது முஸ்லிம்களுக்கு சோதனையான காலம். ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு என இரு தரப்பாலும் நெருக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் இச்சந்தர்ப்பத்தில் உணர்வுரீதியாக விடயங்களுக்களைப் பார்ப்பதைத் தவிர்த்து அறிவு ரீதியாக பார்க்கவேண்டும்; சிந்திக்கவேண்டும். 


அரசியல் கட்சிகள் புத்திஜீவிகளுடன் தொடர்கலந்துரையாடல்களை நடாத்தி சமூகத்தைக் கரைசேர்ப்பதற்கான காத்திரமான வழிகளைக் கண்டறியவேண்டும். அதன்படி விரைந்து செயலாற்ற வேண்டும்.

No comments