தங்களை சுற்றி என்ன நடைபெறுகின்றது.....? கிணற்றுத்தவளைகளாக நாம் இருக்கமுடியாது.

தங்களை சுற்றி என்ன நடைபெறுகின்றது என்பதை அறியாது நமக்குத் தெரிந்த தமிழ் நாளிதழ்களில் வரும் செய்திகளையும், தமிழ் ஒலி, ஒளி அலைவரிசைகளில் வருவதை அறிந்து கொண்டு நம்முடைய எல்லாப்பிரச்சினைகளும் முடிந்துவிட்டது என்ற எண்ணத்தில் கிணற்றுத்தவளைகளாக நாம் இருக்கமுடியாது. 


நமது குறுகிய மட்டமான புத்திக்கு படுவதை எல்லாம் பொதுமக்கள் முன்னிலையில் பேசி இளைஞர்களை உசுப்பேற்றி சமூகத்தை காட்டிக்கொடுத்துவிட முடியாது.  முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக எவ்வாறான திட்டங்கள் தீட்டப்படுகின்றது என்பதை நாம் சிந்திக்கவேண்டிய தருணம் இது.


நாம் எமது சமூகத்தின் மத்தியில் பகிரங்கமாக பின்விளைவுகளை யோசிக்காமல் முன்வைக்கும் சமகாலத்திற்கு எவ்வகையிலும் பொருந்தாத மட்டமான கருத்துக்களின் எதிரொலிகள் எவ்வாறு அன்னிய சமூகங்களுக்கு மத்தியில் எதிரொலிகள் உருவாக்கப்படும் என்பதை சிந்தித்து கருத்துக்களை கூறவேண்டும். 


சிங்கள நாளிதழ் தொட்டு அனைத்து ஊடகங்களிலும் எம்மைப்பற்றிய கருத்துக்கள் எவ்வாறு திரிபுபடுத்தப்பட்டு பரப்பப்படுகின்றது என்பதை அறிந்துகொண்டு அதற்கு எவ்வாறு பதில் கொடுப்பது என்பது சம்பந்தமாக நாம் யாராவது சிந்திக்கின்றோமா? ஒரு சமூகத்தைப் பாதுகாப்பதென்பது அந்த சமூகத்திற்குள் நின்று கொண்டு ஒப்பாரிவைப்பதல்ல, உணர்ச்சியூட்டும் பேச்சுக்களை பேசிவிட்டு ஓடி ஒளிவதும் அல்ல. 


கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம் சமூகத்தின்மீதான வெறுப்பை அதிகரிக்கும் விதமாக அதிகமான கருத்தாடல்கள் சிங்கள ஊடகங்களில் ஒலி, ஒளி பரப்பப்படுகின்றன நேற்றுக்கூட நெத் FM இல் மிக காரசாரமான பொதுமக்களுடைய கருத்துக்களை ஒலிபரப்பி முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் வாழத்தகுதியற்றது போன்று சித்தரிக்க முற்படுகின்றார்கள்.


எங்களை இந்த நாட்டில் இருந்து துரத்த முயற்சித்தால் சவூதி கப்பல்களும் விமானங்களும் இலங்கை துறைமுகத்திலும் விமானநிலையத்திலும் நிறுத்திவைக்கப்பட்டு எங்களை அள்ளி அணைத்து ஏற்றிச்செல்வார்கள் என்று நினைப்பது நமது அறியாமையின் உச்ச கட்டம். உலகநாடுகளில் குறிப்பாக சிரியா, எமென், ஆப்கானிஸ்தான், பலஸ்தீன், மியன்மார், கஷ்மீர், சீனா போண்ற இன்னும் எத்தனையோ நாடுகளில் முஸ்லிம்கள் இலட்சக்கணக்கில் கொண்று குவிக்கப்பட்டு கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் எந்த முஸ்லிம்நாடு தனியே முன்னின்று அம்மக்களை காப்பாற்ற கழத்தில்நிற்குன்றது? நாம் சிந்திக்க வேண்டும் நம்மை நாமே அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றிக்கொள்வதற்குரிய வழிவகைகளை தேடவேண்டும் இந்த நாடு எமக்கும் சொந்தமானது என்பதை நினைவில் நிறுத்தி ஏனைய சமூகங்களுடன் இணைந்து எவ்வாறு வாழ்வது என்ற பொறிமுறையினை நாம் உருவாக்கவேண்டும். 


கடந்த யுத்த காலத்தின்போது புலிகள் மாத்திரம்தான் எமது எதிரி இராணுவம் எங்களுக்கு பாதுகாப்புக்கொடுத்தது புத்த மத குருமார்கள் எம்மைபற்றி கரிசனை செலுத்தினார்கள் இன்று நிலைமை அப்படியல்ல மத குருமார்களே எமக்கெதிராக வெறுப்பூட்டும் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள் அரசாங்கம் பாரபட்சம் காட்டுகின்றது அத்தனையையும் நாம் மிக நிதானமாகவும் பொறுமையாகவும் புத்திசாதுரியமாகவும் முகம்கொடுக்கவேண்டும். 


நமது நிலைப்பாடு என்ன என்பதை நாம் தெளிவாக பெரும்பான்மை சமூகத்திற்கு ஆக்கபூர்வமாக சொல்ல வேண்டும் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து அதனை சரியாக செயற்படுத்த வேண்டும்.


என்னுடைய தனிப்பட்ட சில கருத்துக்களை இதில் பதிவிடுகின்றேன் ஆர்வமான சகோதரர்கள் இதனை இன்னும் மெருகூட்டி இலகுவாகமாற்றி இதனுடைய நடைமுறை சாத்தியப்பாட்டைபற்றி ஆராய்வோம். 


1.தமிழை நல்ல முறையில் அறிந்த சிங்களத்தை சரளமாக பேச, வாசிக்க, எழுத தெரிந்த குறைந்தது 100 பேர் கொண்ட ஓர் முஸ்லிம் குழுமம் (சமூக வலைத்தழ குழுமம்) உருவாக்கப்பட வேண்டும்.


2.சிங்கள மொழியிலான தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள், தேசிய நாளிதழ்கள் அத்தனையையும் நிரல்படுத்தி ஒவ்வொன்றையும் தனித்தனியாக (ஐவருக்க ஒரு ஊடகம் உதாரணமாக நெத் FM ஐவர்கொண்ட ஒரு குழுவிற்கு, லங்காதீப நாளிதழ் மற்றைய ஐவர் கொண்ட இன்னொரு குழுவிற்கு என்ற விதத்தில்) அவதானிப்பதற்கான ஐவர்அடங்கிய சிறிய குழுக்களாக பிரித்து இச்சிறு குழுக்களுனுடைய அவதானங்களை மார்க்க அறிவுபெற்ற மிதவாதப்போக்குடைய உலமாக்கள் அடங்கலான கல்வியலாளர்களை  உள்ளடக்கிய 10 பேர் கொண்ட குழுவினூடாக கிழமைக்கு 2 தடவைகள் அந்த வாரத்தில் பரப்பப்பட்ட முஸ்லிம்கள் சம்பந்தமான பிழையான கருத்துக்களுக்கு ஊடகங்களில் பதிலளிப்பதுடன் அனைத்து முஸ்லிம் சகோதர்ர்களும் அத்தகைய பதிலை தங்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களூடாக பகிர்ந்துகொள்வதினூடாக ஏனைய சமூகங்களுக்கு சென்றடையச்செய்தல். 


3.இதற்கான 10 பேர்கொண்ட குழுவில் அங்கம் வகிப்பவர்கள் சமூகவலைத்தளத்தை நன்கு பயன்படுத்தகூடியவர்களாகயிருந்தால் தங்களுடைய மூடிய குழுமத்தினூடாக (Closed group) தங்களது கருத்துக்களை பரிமாறுவதனூடாக இவ்விடயத்தை இலகுவாக செய்துகொள்ள முடியும். 


4.ஐந்துபேர் கொண்ட குழுமம் ஒவ்வொரு நிகழ்ச்சியை ஒவ்வொருவருக்கென தமக்குள்ளே பகிர்ந்து கொண்டு ஒரு நாளைக்கு ஒருவர் 1 மணித்தியாலத்தை இந்த சமூகநலன்கருதி செலவுசெய்தால் அதுவே போதும். 


5. தனித்தனியாக 5 பேர்கொண்ட குழு அவதானித்தவைகளின் சாராம்சத்தை 10 பேர்கொண்ட பிரதான குழுவிற்கு அந்தந்த ஆதாரத்துடன் அனுப்புமிடத்து அவர்கள் அதனை பரிசீலித்து தமது இரத்தினச்சுருக்கமான பதிலை ஒன்று திரட்டி வாரம் இருமுறை ஊடகங்களுக்கு தெழிவுபடுத்தமுடியும். 


இது சாதாரண அன்னியமக்களுக்கு சென்றடைவதனூடாக எம்மைப்பற்றிய பிழையான கருத்துக்களுக்கு அது முற்றுப்புள்ளி வைக்கும் எமக்குள்ளே நாம் பேசுவதால் மற்றைய சமூகத்தின் மத்தியில் எம்மைப்பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்க முடியாது.

நன்றி.

No comments