ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட 50% மேல் வாக்குப்பெறவேண்டுமா?

மைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் கேட்கவேண்டுமென அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கும் நிலையில் மும்முனைப் போட்டியேற்பட்டால் 50% வாக்குகளை ஒருவர் பெறமுடியாவிட்டால் ஜனாதிபதியை எவ்வாறு தெரிவுசெய்வது? என்ற கேள்வி சிலரிடையே எழுந்ததை சமூகவலைத்தளங்களில் அவதானித்ததன்பின் “50% தேவையில்லை” என்ற சுருக்கமான பதிவை இட்டிருந்தேன். விரிவான விளக்கம் கீழே!


இந்த விடயம் அரசியலமைப்பு சட்டம் சரத்து 94 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிரகாரம்


இரண்டு வேட்பாளர்கள் மட்டும் போட்டியிடும்போது நாம் அதில் ஒருவருக்கு வாக்களிப்போம். இருவருக்கும் வாக்களித்தால் செல்லுபடியாகாது.


இவ்விருவருள் 50% மேல் வாக்குகளைப் பெறுபவர் வெற்றிபெறுவார்.


இருவர் போட்டியிடும்போது இரண்டு சாத்தியப்பாடுகளே உள்ளன. ஒன்று இருவரும் 50% பெறுவது. அவ்வாறு பெற்றால் திருவுளச்சீட்டுக் குலுக்கப்படும்.

அல்லது ஒருவர் 50% மேல் பெறுவார். அவர் வெற்றியடைவார். மூன்றாவது சாத்தியம் ஒன்று இல்லை. இதை வைத்துத்தான் எல்லோரும் ஐம்பது விகிதத்திற்கு மேல் வேண்டும்; என்று கூறுகிறார்கள்.


இதுவரை பல வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தாலும் இறுதியில் பிரதான இருவரில் ஒருவருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அவ்வாறு தெரிவிக்காதவர்கள் கணிசமான வாக்குகளைப் பெறுவதுமில்லை. 

எனவே, யதார்த்தத்தில் இதுவரை இருமுனைப்போட்டியே!


எனவே, 50% அல்லது அதற்குமேல் கட்டாயம் அவசியமாமாகும். அது யதார்த்தமுமாகும்.


மூவர் போட்டியிடல்

—————————

ஓரளவு பலமான மூவர் போட்டியிட்டால் சிலவேளை ஒருவர் 50% மேல் பெறுவது சாத்தியமில்லாமல் போகலாம். அதேநேரம் மூவர் போட்டியிடும்போது ஒருவர் இருவாக்குகளை அளிக்கலாம். யாரும் 50% பெறாதபோது இரண்டாவது வாக்கு எண்ணப்படும்.

இரண்டு வாக்குகளை அளிக்கும்போது முதலாவது வாக்கை 1 என்றும் இரண்டாவது வாக்கை 2 என்றும் குறிப்பிடலாம். 


உதாரணமாக A,B,C என்ற மூன்று சற்று பலமான வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்; எனக்கொள்வோம்.

பெற்றவாக்குகள்-

A-45%

B-40%

C-15%


முதலாவதாக C போட்டியிலிருந்து நீக்கப்படுவார். முதலாவது மற்றும் இரண்டாவது வாக்குகளைப்பெற்ற Aயும் Bயும் போட்டியில் தொடர்ந்தும் இருப்பார்கள்.


இப்பொழுது போட்டியில் இருந்து நீக்கப்பட்ட C யின் வாக்குச்சீட்டுக்கள் மீண்டும் எடுக்கப்பட்டு அவற்றில் A அல்லது B இற்கு யாராவது தனது இரண்டாவது வாக்கை அளித்திருக்கின்றார்களா? எனப்பார்த்து அவ்வாறு உரியவரான A அல்லது B யின் வாக்குகளுடன் கூட்டப்படும். 


அதன்பின் அவ்விருவருள் யாருடைய வாக்கு அதிகமோ அவர் வெற்றிபெற்றவராக பிரகடனப்படுத்தப்படுவார். அவருடைய வாக்குகள் 50% தாண்டவேண்டுமென்ற கட்டாயம் இல்லை.


உதாரணமாக, இரண்டாவது வாக்குகளையும் கூட்டியதன்பின் A யின் மொத்த வாக்குகள் 47%, B யின் வாக்குகள் 45%. வீதம் என்றால் A வெற்றிபெற்றவராவார்.


சிலவேளை B யின் வாக்குகள் 46%. ஆக இருந்தால் B வெற்றிபெற்றவராவார்.


இங்கு கவனிக்கவேண்டியது, முதலாவது வாக்கில் A அதிகம் பெற்றபோதும் இரண்டாவது வாக்கைக் கூட்டும்போது B யினுடைய வாக்கு அதிகரித்தால் அவர் தெரிவுசெய்யப்படுவார்.


மூன்றிற்கு மேற்பட்ட பலமான வேட்பாளர்கள்.

———————————————————

ஜே வி பி யும் தனியாகப் போட்டியிடப்போவதாக கூறப்படுகிறது. எனவே

A, B, C,D ஆகிய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இப்பொழுது ஒருவருக்கு மூன்று வாக்குகள் இருக்கின்றன. மூன்றுபேருக்குமேல் எத்தனைபேர் போட்டியிட்டாலும் ஒருவருக்கு ஆகக்கூடியது மூன்று வாக்குகள்தான் என்பதையும் கவனத்திற்கொள்க.

வாக்குகள்

A 40%

B 35%

C 10%

D 5% எனக்கொள்வோம் 


இப்பொழுது Cயும் Dயும் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள். அதன்பின் C, D ஆகியோரின் வாக்குச்சீட்டுகளில் A,B ஆகியோருக்கு இரண்டாவது வாக்குகள் இருந்தால் அவை கூட்டப்படும். 


அதன்பின் இவர்களுக்கு இரண்டாவது வாக்கை அளிக்காதவர்கள் யாராவது மூன்றாவது வாக்கை அளித்திருக்கிறார்களா? என்று பார்க்கப்படும். உதாரணமாக D யிற்கு முதலாவது வாக்கை அளித்த ஒருவர் தனது இரண்டாவது வாக்கை Cயிற்கும் மூன்றாவது வாக்கை Aயிற்கும் அளித்திருக்கலாம்.


இப்பொழுது Cயிற்கு அளித்த இரண்டாவது வாக்கு கணக்கில் கொள்ளப்படாது. ஏனெனில் C இப்பொழுது போட்டியில் இல்லை. எனவே, அவர் A அல்லது B யிற்கு மூன்றாவது வாக்கை அளித்திருக்கிறாரா? என்று பார்க்கப்படுகிறது.


சிலவேளை, இந்த Dயிற்கு அல்லது C யிற்கு தனது முதலாவது வாக்கை அளித்த ஒருவர் தனது இரண்டாவது வாக்கை A யிற்கும் மூன்றாவது வாக்கை B யிற்கும் அளிக்கிறார்; எனக்கொள்வோம். இவரது இரண்டாவது வாக்குத்தான் கணக்கில் கொள்ளப்படும். மூன்றாவது வாக்கு கணக்கிற்கொள்ளப்படாது.


இப்பொழுது A யும் B யும் பெற்ற இரண்டாம் மூன்றாம் வாக்குகளும் கூட்டப்பட்டு அதிகூடிய வாக்கைப் பெற்றவர் வெற்றிபெற்றவராக பிரகடனப்படுத்தப்படுவார். அவர் 50% ஐத் தாண்டவேண்டுமென்பதில்லை.


எனவே புரிந்துகொள்ளவேண்டியவை

முதலாவது கணக்கெடுப்பில் ஒருவர் 50% ஐத்தாண்டிவிட்டால் அவர்தான் வெற்றியாளர்.


அவ்வாறு யாரும் 50% ஐத்தாண்டாவிட்டால் போட்டியில் இருந்து வெளியேறியவர்களின் வாக்காளர்களின் A அல்லது B இற்கு அளிக்கப்பட்ட இரண்டாம் மூன்றாம் வாக்குகள் கூட்டப்படும். அவ்வாறு கூட்டப்படும்போது 50% என்கின்ற ஒரு விடயம் இல்லை.


இருவரும் சமமான வாக்குகள் பெற்றால் திருவுளச்சீட்டு குலுக்கப்படும்.

வை எல் எஸ் ஹமீட் 


No comments