20 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள், ஜம்மியத்துல் உலமா உட்பட சில முக்கிய சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் சில புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஒரு அவசரகால கட்டமைப்பை அவசரமாக நிறுவுங்கள்.

வை எல் எஸ் ஹமீட்

முன்னாள் வர்த்தக, கைத்தொழில் அமைச்சரின்  பாராளுமன்ற உரை சிறப்பாக இருந்தது. 20 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் நாட்களில் முஸ்லிம்களின் அவலநிலையை வெளிக்கொணர்வதற்கு பாராளுமன்றத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.


அதேநேரம்,  இச்சந்தர்ப்பத்தில் பாராளுமன்றில் தமிழில் உரையாற்றுவதற்குப் பதிலாக முடிந்தளவு சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் உரையாற்ற முயற்சிக்க வேண்டும். ஏனெனில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக பேசினாலும் இன்றைய இனவாத ஊடகங்கள் அவற்றை மொழிபெயர்த்து சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ பெரிதாக வெளியிடப்போவதில்லை. எனவே, அப்பேச்சுக்கள் தேசியத்தையோ, சர்வதேசத்தையோ சென்றடையப் போவதில்லை.


நமது நியாயங்கள் தேசிய, சர்வதேச ரீதியில் போதுமான அளவு இதுவரை முன்வைக்கப்படவில்லை. அதேநேரம் நிறைய ஊடகவியலாளர் மாநாடுகளை நடாத்தி நியாயங்களைப் பேசுங்கள். பேசுகின்ற பொறுப்பு கட்சித்தலைவர்களுக்கு மட்டுமே உரியது; என்ற மனோ நிலையைத் தவிருங்கள். 20 பேரும் மக்களின் குரலாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளீர்கள். எனவே, குரல்கொடுங்கள். அவ்வாறு குரல் கொடுக்கும்போது அது அரசுக்கு பாரிய அழுத்தமாக மாறும்.


அத்தோடு, இந்த 20 பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள், ஜம்மியத்துல் உலமா உட்பட சில முக்கிய சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் மற்றும் சில புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஒரு அவசரகால கட்டமைப்பை அவசரமாக நிறுவுங்கள். 


அதனூடாக நாம் அடுத்தடுத்து முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகளை கலந்தாலோசித்து காத்திரமான முன்னெடுப்புகளை செய்யவேண்டும். ஏனெனில் இன்றைய இனவாதம் அவ்வளவு இலகுவாக முடிவுக்கு கொண்டுவரப்படக்கூடிய சூழ்நிலை தென்படவில்லை. எனவே, நாம் ஏதாவது நடந்தால் அதைப்பற்றி எதையாவது பேசிவிட்டு கடமை முடிந்ததாக நினைக்க முடியாது. 


அத்தோடு, முடிந்தால் இன்றைய குறித்த பேச்சை ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்த்து தேசிய, சர்வதேச ஊடகங்களுக்கு அனுப்பிவையுங்கள்.

No comments