அமைச்சர் ரிசாத் பதியுதீன் ,ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாத சாயம் பூசுவதாலையோ, முஜிபுர் ரஹ்மானுக்கு சேறு பூசுவதாலையோ இந்த பயங்கரவாதத்தை அழிக்க முடியாது- பாராளுமன்றத்தில் இம்ரான் மஹ்ரூப்

முஜிபுர் ரஹ்மானுக்கு சேறு பூசுவதாலையோ ரிசாத் பதியுதீன் ,ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாத சாயம் பூசுவதாலையோ இந்த பயங்கரவாதத்தை அழிக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,


கடந்த 2010 ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலப்பகுதியில் நாட்டில் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் பரந்தளவில் சிறு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டன. அவர்களின் முஸ்லிம் விரோத பிரச்சாரங்கள் ஓரளவுக்கு பொதுமக்கள் மத்தியில் தாக்கம் செலுத்தினாலும் அவர்களின் இலக்கை அவர்களால் அடையமுடியவில்லை. 


ஆனால் இந்த தீவிரவாத தாக்குதலின் பின் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரங்கள் பொதுமக்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை உருவாக்கிறது. இந்த பிரச்சாரங்களில் முன்னெடுக்கப்படும் மூளைக்கு சம்மந்தமில்லாத பொய் குற்றச்சாட்டுக்களை அன்று நிராகரித்த மக்கள் அதை இன்று ஏற்றுக்கொள்ள தயாராகின்றனர்.


இதனால் முஸ்லிம் சமூகத்தின் மீதான வெறுப்புணர்ச்சி காட்டு தீ போல பரவிக்கொண்டிருக்கின்றது. இந்த பிரச்சாரங்களை முன்னேடுப்பவர்களின் பின்னால் அரசியல் மற்றும் வியாபார நோக்கமுமே காணப்படுகின்றன.


முகத்தை மறைக்காமல் ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் எதிர்கொண்ட இன்னல்களும் நீர்கொழும்பில் ஊரடங்கு சட்டம் காணப்பட்ட வேலையில் முஸ்லிம்களின் சொத்துக்கள் அடித்து நாசமாக்கப்பட்டதும் இதற்கு சிறந்த உதாரணமாகும்.


கௌரவ சபைக்கு தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே அவர்களே இது பாரிய பிரச்சினை இது தொடர்ந்தால் எமது நாடு பாரிய அழிவை எதிர்கொள்ளும். அது நாம் முப்பது வருட யுத்தத்தில் இழந்ததைவிட அதிகமாக இருக்கும். 


அன்று தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தில் நாம் விட்ட தவறை மீண்டும் விட கூடாது. அன்று யுத்தத்துக்கு முன் நாம் தமிழ் மக்களை பாதுகாக்க தவறிவிட்டோம். அதனாலேயே அந்த யுத்தம் முப்பது வருடங்கள் நடைபெற்றது. அன்று நாம் விட்ட தவறை மீண்டும் விட கூடாது. 


பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில்லாத அப்பாவி முஸ்லிம்களை நாம் பாதுகாக்க வேண்டும். அந்த அப்பாவி முஸ்லிம்களின் உதவியுடனயே நாம் இப்பொது தோன்றியுள்ள பயங்கரவாத்தை வேரோடு அழிக்கலாம்.


இதைவிட்டு இங்கு வந்து முஜிபுர் ரஹ்மானுக்கு சேறு பூசுவதாலையோ ரிசாத் பதியுதீன் ,ஹிஸ்புல்லாவுக்கு பயங்கரவாத சாயம் பூசுவதாலையோ இந்த பயங்கரவாதத்தை அழிக்க முடியாது. இவ்வாறு சில முஸ்லிம் அரசியல்வாதிகளை இலக்கு வைத்து சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடுவதால் உங்களின் விருப்பவாக்குகளை அதிகரித்து கொள்ளலாம். இதை பயன்படுத்தி ஆட்சியையும் பிடிக்கலாம். ஆனால் இதற்கு நீங்கள் கொடுக்கும் விலை பெரியதாக இருக்கும். 


ஆகவே எமது சுய அரசியல் விருப்பு வெறுப்புக்களை ஒரு புறம் ஒதுக்கிவிட்டு பொறுப்புள்ள அரசியல்வாதிகளாக நாம் எமது கடமைகளை முன்னெடுத்து எமது நாடு எதிர்கொள்ளவுள்ள பாரிய அழிவில் இருந்து பாதுக்காக தேவையான நடவடிக்கைகளுக்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

 

பயங்கரவாதத்தின் வடுக்களை நன்கு உணர்ந்தவர்கள் சகோதர தமிழ் மக்கள். ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சில தமிழ் அரசியல்வாதிகளும் சில தமிழ் ஊடகங்களும் தெரிவிக்கும் கருத்துக்கள் எரியும் நெருப்புக்குள் எண்ணை ஊற்றுவதை போல் உள்ளன.


முஸ்லிம்கள் அனைவருக்கும் பயங்கரவாத முத்திரை குத்தும் நோக்கில் அவர்களின் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். அவசரகால சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட சமையலறை கத்திகளை காட்டி முஸ்லிம்கள் வீடுகளில் பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக செய்திகளை பிரசுரிக்கின்றனர்.


ஆகவே இந்த சந்தர்பத்தில் இவ்வாறான ஊடகங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் அப்பாவி முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து அவர்கள் முன்னெடுக்கும் சேறுபூசும் நடவடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும்.


இவ்வாறாக இன நல்லுறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் ஊடகங்கள் தொடர்பாக அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

No comments