தடுப்புக்காவலும் நமது இளைஞர் சமுதாயமும்..

தொடர் ॥ 

எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே. 


எனது முன்னைய பதிவை பார்த்த பலர் இது தொடர்பாக விளக்கம் தர என்னை வேண்டியிருந்திருந்தனர். 

குறிப்பாக கைது செய்யப்பட்டுள்ள நபர்களின் குடும்பங்கள் சில என்னை தொடர்பு கொண்டு அவர்கள் தொடர்பில்  விசாரித்தனர். அப்போது தான் புரிந்தது கைது செய்யப்பட்டவர்கள் எங்கு உள்ளனர்?

என்ன ஆனார்கள் ?என்ற விபரங்கள் கூட தெரியாமல் பயந்து சிலர் இருப்பதை கண்டு அதிர்ச்சியும் கவலையும் அடைந்தவனாக இந்த இரண்டாவது பதிவை இடுகின்றேன்.


எனது தகவலுக்கு பின்னர் இன்று அதாவது 28/05/2016 செவ்வாய் கிழமை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பங்களைசேர்ந்த உறவினர்கள் சிலர் அவர்களை பார்வையிட  முதன்முறையாக  தெமட்டகொடையில் உள்ள  கொழும்பு குற்றத்தடுப்பு  பிரிவுக்கு  வருகை தந்திருந்தனர். நானும் இன்று காலை அங்கு சென்றிருந்தேன்.   

 

கைவிரல் அடையாள பகுப்பாய்வு அறிக்கை மற்றும் தொலைத்தொடர்பு விசாரணை அறிக்கை என்பன முற்றுப்பெறாத நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் உடனடியாக சாத்தியமற்றவை என்று  கூறப்பட்ட நிலையில் எனக்கான அனுமதியும் மறுக்கப்பட்டது. 


இதுவரையில் கொழும்பு போலீஸ்  குற்றத்தடுப்பு  பிரிவினால் சிம் அட்டை பாவனை மற்றும் தெளஹீத் அமைப்புகளுடன் தொடர்பு என்ற சந்தேகத்தின் பேரில்  கைதுசெய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் சிலர் நான் முன்பு தெரிவித்தது போன்று இட நெரிசல் காரணமாக விசாரணைகள் முற்று பெறாத நிலையில் நாரஹேன்பிட்டி போலீஸ் நிலைய விசாரணை கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்கள் சிலர் தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு வருகை தந்திருந்தனர் அவர்களுக்கு சந்தேகநபர்களை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அவர்கள் கொண்டுவந்த உணவு மற்றும் பொதிகள் பரிசோதனைக்கு பின்னர் அனுமதித்ததை  கண்டேன். நாரஹேன்பிட்டி தடுப்பு கூடத்துக்கு மாற்றப்பட்டுள்ள நபர்களுடைய உறவினர்கள் அங்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு நடந்தவை பற்றி தெரியவில்லை. 


இருப்பினும் வெகுதொலைவில் இருந்து இவர்களை அடிக்கடி பார்வையிட வருவது கடினமான காரியமாக இருப்பினும் நீதிமன்றத்திற்கான நடவடிக்கைகள் முற்றுப்பெறாத நிலையில் இவர்களது விடுவிப்பு உடனடியாக  சாத்தியமற்றவை. காரணம் அவசரகால சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் போலீசார் விசாரணை காலத்தை நீடிக்கலாம்.


எனவே விசாரணைகள் முடிவடைந்து அல்லது போலீசாரால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படும்வரை உறவினர்கள் பொறுமை காப்பதே நல்லது என நான் கருதுகிறேன். அவசரப்பட்டு பணத்தை வீணாக செலவு செய்யாதீர்கள். ஒரு சிலர் இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வர். (நாய்கு வீணாக உணவு வைக்க வேண்டாம்)


போலீசாரினால் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் அவர்களால் தயாரிக்கப்பட்ட ( B )அறிக்கையினை பெற்றபின்னரே குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்  பிணை விண்ணப்பம் பற்றி சிந்திக்க முடியும்.  அதுவும் பிணையாளர்களை தேடுவதிலும் கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பமங்களுக்கு பிரச்சினை இருக்கும் என நினைக்கிறேன். 

முன்னெச்சரிக்கையாக அதனையும் ஏற்பாடு செய்து வைத்தால் நீதிமன்ற நடவடிக்கைகளின்போது பிணைகோரி விண்ணபிக்க வசதியாக இருக்கும் அதிலும் குற்றச்சாட்டுக்கு பிணைவழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருந்தால் மாத்திரமே. 

பயங்கரவாத தடுப்பு சட்டத்தின்கீழ் அல்லது ICCPR சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குகளை பதிவுசெய்தால் பிணை வழங்குவதில் கீழ்நிலை நீதிமன்றங்களுக்கு பிரச்சினை இருக்கிறது.


எனவே தற்போதைக்கு பயங்கரவாதிகளுடன் அல்லது அவர்களின் செயல்களில் சிறிதேனும் தொடர்பற்ற சூழ்நிலையில் மாட்டிக்கொண்டவர்களின் விடுதலை தொடர்பாக கட்டாயம் நமது  சமூகம் கரிசனை காட்டப்படல் வேண்டும். அவ்வாறு  தவிக்கின்றவர்கள் அல்லது அவர்களின் குடும்பங்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட நபர் தொடர்பான விவரங்களை உடனடியாக பெறல் வேண்டும். 


ஏற்கனவே( B )அறிக்கை கிடைத்தவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவசமாக உதவ சில சட்டத்தரணிகள் முன்வந்துள்ளனர். வசதியற்றவர்கள் அவர்களை தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெறலாம்.


ஒரு சகோதரி என்னை தொடர்பு கொண்டு ஒருவர்  கைது செய்யப்பட்டு  நான்கு நாட்கள் ஆகியும்  இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளவர் தொடர்பில் தகவல் தெரியவில்லை என தெரிவித்தார். இது ஆபத்தான விடயமாகும்.  இவ்வாறான செயல்களுக்கு இடமளிக்க வேண்டாம்.  இப்போது கைது செய்யப்பட்டவர் தொடர்பில் தகவல்களை பெற முன்னரைவிட தெளிவான சட்டங்கள் உள்ளன. 


கொழும்பில் இருந்து வந்து கைது செய்தாலும் அக்கைது தொடர்பாக அவர்கள் உரிய பிரதேச போலீஸ் நியத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லை எனின் சட்டவிரோத கைது தொடர்பாக போலீஸ் நிலையத்திலும் மனித உரிமை ஆணையகத்திலும் உடனடியாக முறையிடவும். சட்ட விதிகளுக்கு அமைவாக ஒருவர்  கைது செய்யப்பட்டிருப்பின்:


1. கைது செய்யப்பட்ட திகதி/ நேரம்/ இடம்


2.கைது செய்யப்பட்டதற்கான காரணம் 


3. கைது செய்த அதிகாரி  தொடர்பான விவரங்கள்


4. நீதிமன்ற பிரிவு 


போன்ற விபரங்கள் அடங்கிய படிவம் ஒன்றும் கட்டாயம்  வழங்கப்படும்.


குறிப்பு : பயங்கரவாதிகளுக்கோ அல்லது பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவிபுரிந்த பயங்கரவாதிகளுக்கான அறிவித்தல் இது இல்லை. அவர்களுக்கு உதவ நாம் ஒருபோதும் தயாரில்லை என்பதை விஷேடமாக தெரிவிப்பதோடு..


குறிப்பாக:  தேவைக்கு அதிகமாக  ஒன்றுக்கும் அதிக சிம் அட்டைகளை இலாபம்கருதி பாவித்தவர்களே பிரச்சினைக்குள் அகப்பட்டுள்ளனர்.

எதுவும் அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகும்.

-ஏ. ஆர் . மபூஸ் அஹமட்-

தொடரும்....

No comments